சாத்தூர்: '7 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்' - போக்சோவில் கைது
ஜம்மு - காஷ்மீர் வெடிகுண்டு மிரட்டல் புரளி!
ஜம்மு காஷ்மீரில் குடியரசு நாளையொட்டி விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போலி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடியேற்றும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிலமணிநேரங்கள் முன்பு வரை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டதாகவும், அதன் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் போலி எனவும் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் இன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் முதல்வராக ஒமர் அப்துல்லா பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி எம்.ஏ. திடலில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தேசியக் கொடியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல்வர் ஒமர் அப்துல்லாவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தது.
இதனிடையே குடியரசு நாளையொட்டி வெவ்வேறு துறைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,
குடியரசு நாளையொட்டி உயர்கல்வித் துறை செயலாளர், உயர்கல்வித் துறை இயக்குநர் என அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு டிசெ லிஸ் என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் முன்னிலையில் எம்.ஏ. திடல் முழுக்கவும் வெடிகுண்டு நிபுணர்கள் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் போலி எனத் தெரியவந்துள்ளது.
மின்னஞ்சலை அனுப்பிய குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.