பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
`பிரபாகரன் பெயரைச்சொல்லி வாக்கு கேட்பேன்; நீங்க பெரியார் பெயரைச் சொல்லி கேட்பீர்களா?’ - சீமான் சவால்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்து வருகிறார். சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், "தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தமிழர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருக்கி உள்ளார்கள் என்று தெரிவித்தார். இந்த 5000 ஆண்டுகள் தொன்மையான எங்கள் தமிழ் மொழியைத்தான் `தமிழ் சனியன், தமிழ்ப் படித்தால் பிச்சைகூட எடுக்க முடியாது, முட்டாள்களின் பாஷை, காட்டுமிராண்டி மொழி அதை விட்டொழியுங்கள்’ என்று கூறினார் அவரது தலைவரான பெரியார்.
அப்படி கூறியவர்களை ஒழிக்காமல் தமிழ்ச் சமூகம் எப்படி விடுதலை அடையும்? வாயைத் திறந்தால் இது பெரியார் மண் என்று கூறுகிறார்கள். ஆனால், எங்களுக்கு பெரியாரே ஒரு மண்தான். பெரியாரை அடக்கம் செய்துள்ள மண் கூட தமிழ்த் தாயின் மண்தான்.
`பெரியார் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை’ என்பது அவர்களுக்கு. `பெரியாரால் ஒன்றுமே இல்லை’ அது எங்களுக்கு. பெரியாரின் சமூக நீதி, பெண்ணுரிமை, சமத்துவம், சகோதரத்தும், சாதி ஒழிப்பு குறித்து என்னோடு நின்று வாதிட தயாராக உள்ளார்களா? எதற்கெடுத்தாலும், பெரியார், திராவிடம் என்கிறார்கள். எங்கிருக்கிறது திராவிடம், யார் திராவிடர்கள்? இது பெரியார் மண் இல்லை. தீரன்சின்னமலை மண். பொன்னர் சங்கரின் பூமி, கொடிகாத்த குமரனின் நிலம், காளிங்கராயன் மண்.
தமிழ்நாட்டில் ஒரு கன்னடர் உட்கார்ந்து கொண்டு தமிழ் மக்களைப் பார்த்து தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார். அப்படியானால் தெலுங்கில், கன்னடத்தில், இந்தியில் என்ன இருக்கிறது. பெரியார் எனக்கு மொழி அபிமானம் இல்லை. இன அபிமானம் இல்லை. தேசாபிமானம் இல்லை. சமூகத் தொண்டு செய்பவனுக்கு இதில் எந்த அபிமானமும் இருக்க கூடாது என பெரியார் பேசி இருக்கிறார். இது எதுவும் இல்லாமல் சமூகம் எங்கிருந்து வந்தது. அவர் எந்த சமூகத்துக்கு தொண்டாற்றினார்? இதற்கு பதில் யாரிடம் உள்ளது.
தேசப் பற்றே இல்லை. தேசாபிமானமே இல்லையென்றால் எப்படி திராவிட நாடு வரும். தமிழ்நாடு தமிழருக்கு முழக்கம் எங்கிருந்து வந்தது?. தமிழே இல்லையென்றால் நாங்கள் எப்படி வந்தோம்.? பிறகு எப்படி தமிழர் தலைவர் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு பெரியார் புத்தகத்தை எழுதினார்? இதை பைத்தியகாரத்தனம்தான் என்று சொல்ல வேண்டும். பெரியார் பெற்றுத் தந்த பெண்ணுரிமை, சமத்துவம் குறித்து பேசத் தயாரா? பெரியாரை பேசுவார்கள். பெரியார் பேசியதை பேசத் தயாரா? கடவுள் இல்லை, பெண்களுக்கு தாலி ஒரு அடிமைச் சின்னம் அதை அறுத்தி எறியச் சொன்னார் பெரியார் என்று பேசத் தயாரா? வீட்டுக்குவீடு பெரியார் படத்தைக் காண்பித்து வாக்கு கேட்பார்களா? உண்மையில் திமுக-வினர் தலைவர் காந்திதான். ஏனென்றால் காந்தி நோட்டைக் கொடுத்துதான் வாக்கு கேட்கிறார்கள்.
திட்டமிட்டு தமிழையும், தமிழர்களையும் அழித்தார்கள். பெரியார் கடைசி கூட்டத்தில் தமிழர்களைப் பார்த்து `உங்களை சூத்திரனான விட்டுச் செல்கிறேனே’ என்று. பார்ப்பனர்களின் எந்த சாஸ்திரத்தில் தமிழர்கள்தான் சூத்திரர்கள் என்று எங்கு எழுதப்பட்டுள்ளது. அம்பேத்கர் எழுதியுள்ள சூத்திரர்களும், ஆரியர்களும் என்ற புத்தகத்தில் பிராமணன், சத்திரியன், வைஷ்ணவன், சூத்திரன், பஞ்சமன் என்று குறிப்பிடுகிறார். அதில், ஐந்தாவது இடத்தில் இருக்கும் பஞ்சமனைத்தான் சூத்திரன் என பதிவு செய்கிறார். இந்த நிலப்பரப்பு முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை சூத்திரப் பட்டம் குறிப்பதாக குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் தமிழர்களை மட்டும் பார்ப்பன சாஸ்திரம் சூத்திரர் என்று சொல்லிவிட்டதாக பெரியார் சொல்ல காரணம் என்ன? மேடையில் இருந்துகொண்டு தமிழர்களை நோக்கி உங்களை சூத்திரன் என்று சொல்லிவிட்டான் என்று எதற்கு சொன்னார் பெரியார். ஏன்? அவர் நம்மை சூத்திரன் என்று சொல்லவில்லை. அப்படியானால் நீங்கள் யார்? எந்த சாஸ்திரத்தில் தமிழர்கள் சூத்திரர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் நான் பிரபாகரனின் பெயரைச் சொல்லி வாக்கு கேட்கிறேன். நீங்கள் பெரியாரின் பெயரைச் சொல்லி வாக்கு கேட்கத் தயாரா? கள்ளுக்கு எதிராக தன் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டினார் என்பது அறிவுள்ளவர்கள் செய்யும் செயலா? அடுத்த ஆண்டே திறக்கப்பட்ட கள்ளுக்கடை கல்வெட்டில் பெரியாரின் பெயர் இருந்தது. மதுவிலக்கு அவசியமற்றது. எந்த நாட்டில் மது விலக்கு உள்ளது என்று கேட்டவர் பெரியார்.
பெரியாரின் தாய்மொழி தமிழா? நீங்கள் இந்த நாட்டவரா? எதற்காக உங்கள் கருத்துகளை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன தமிழில் எழுதினார். வேண்டுமெனில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து விட்டு சென்று இருந்தால் நாங்கள் படித்து இருக்க மாட்டோம். பெரியார் வாரிசு இல்லை எதற்காக சொத்து சேர்த்தார். திராவிட சித்தாந்தத்தின் தொடக்கம் பெரியார் என்று சொன்னால் அதே இடத்தில் தமிழ்த்தேசியம் குறித்து மோதிக்கொள்ள நாம் தமிழர் கட்சி தாயாராக உள்ளது. தமிழ்நாடு கருணாநிதி நாடாக மாறிவிட்டதால் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக கருணாநிதி படத்தை போட்டு விடுங்கள். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டை கருணாநிதி நாடாக பெயர் மாற்றி விடலாம். 3 ஆயிரம் பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், திமுகவில் 31 பேர்தான் இணைத்து உள்ளார்கள்.
பெரியார் சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் மத்தியில் தமிழர்கள் என்று சொல்லி இனம், மொழி முன் வைத்து இறக்கப்பட்ட புலிக் கொடியை தூக்கி தற்போது 8.50 லட்சம் வாக்குகள் மூலம் தனித்து நின்று அங்கீகாரம் பெற்று உள்ளோம். இதை 1 கோடியே 72 லட்சம் வாக்குகளாக எங்களால் மாற்ற முடியும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY