Kumbh Mela: கும்பமேளாவில் தீ விபத்து; சிலிண்டர் வெடித்து சாம்பலான குடில்கள்.. பக்தர்கள் தப்பி ஓட்டம்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். அவர்களுக்காக கங்கை, யமுனை, சரஸ்வதி அணைகள் சங்கமிக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான தற்காலிக குடில்களை மாநில அரசு அமைத்திருக்கிறது. இது தவிர பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளை அரசு செய்து கொடுத்திருக்கிறது. இன்று மாலை செக்டர் 9-ல் அமைக்கப்பட்டு இருந்த குடில்களில் இருந்த இரண்டு சிலிண்டர்கள் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் குடில்கள் தீப்பிடித்துக்கொண்டது. தீ பக்கத்து குடில்களுக்கும் பரவியது. இதனால் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செயல்பட்டு போர்க்கால வேகத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தீவிபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த குடில்களில் வசித்தவர்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இத்தீவிபத்தில் பல குடிசைகள் எரிந்து சேதமானது. தீப்பற்றிக்கொண்டவுடன் சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. பக்தர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலைமையை ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு மூத்த அதிகாரிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுப்பி வைத்திருக்கிறார். குடில்கள் தீப் பற்றி எரிந்த காட்சி சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. ரயிலில் சென்ற போது அந்த தீவிபத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.