IIT Baba: ``நான் துறவறம் மேற்கொள்ளக் காரணமே இதுதான்.." - IIT பாபா ஓபன் டாக்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தவிழாவில் பல்வேறு தோற்றங்களில் சாதுக்கள் வலம் வருகின்றனர். அவர்களின் தோற்றம் மூலம் மக்களின் கவனம் ஈர்த்த சாதுக்களில் ஒருவர் ஐஐடி பாபா என்கிற அபய்சிங். ஐஐடி மும்பையில் விண்வெளி பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இவர், புகைப்படக் கலைஞராக தன்னை தகவமைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, சாதுவாக துறவறம் மேற்கொண்ட தற்போது பிரபலமடைந்திருக்கிறார். இதற்கிடையில், ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியைச் சேர்ந்த அபய் சிங்கின் தந்தை கரண் கிரேவால், ``எங்கள் குடும்பத்தினர் அவர் துறவறத்தை விடுத்து மீண்டும் குடும்பத்திடம் திரும்ப வேண்டும்.
ஆனால், இப்போது அவர் மனநிலையை பார்க்கும்போது அவர் திரும்ப வருவரா என்ற சந்தேகம் அதிகமாகிவிட்டது. படிப்பில் கெட்டிக்காரர். திடீரென ஆன்மீகத்தில் ஆர்வமான அவர், அனைத்தையும் துறந்துவிட்டு அப்படியே சென்றுவிட்டார். ஆறு மாதங்களுக்கு முன்புவரை நான் அவருடன் தொடர்பில்தான் இருந்தேன். இப்போது நாங்கள் அவரைத் தொடர்புகொள்வதையும் தடுக்கிறார். அவர் ஹரித்வாரில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க முயன்றோம். ஆனால் அது முடியவில்லை.
என் மனைவியும், அபய்சிங் திரும்ப வந்து குடும்பத்துடன் இருக்கவேண்டும் என விரும்புகிறார். ஆனால், அவர் இனி எங்களோடு வருவதற்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அவர் எப்போதும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவார். எனவே அவர் துறவறத்தை முடிவு செய்துவிட்டார். ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பும் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ உரிமை உண்டு. நான் அவரை திரும்ப வந்துவிட வேண்டும் என நிர்பந்திக்க முடியாது." எனப் பேசினார்.
இது தொடர்பாக அபய்சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், `` என் குழந்தைப் பருவத்தில் வீட்டில் நடக்கும் சண்டைகளால் என் ஆன்மீகப் பாதை கடுமையாகப் பாதித்தது அதனால் படிக்கக் கூட பின்னிரவில் தான் நேரம் இருக்கும். அதனால், எனது பெற்றோரின் சண்டைக்களால் வெறுத்து, திருமணத்தில் விருப்பமில்லாமல் போனது. அதன்பிறகு அமைதியான, தனிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்ய துறவறத்தை மேற்கொண்டேன்" என்றார்.