'கண்ணுக்குத் தெரியாத' வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி; இன்ஃப்ளூயன்சருக்கு வந்த சோ...
Kushi Rerelease: ``குஷியைத் தொடர்ந்து விஜய் சாரோட அந்தப் படத்தையும் ரீரிலீஸ் பண்றோம்" - சக்திவேலன்
விஜய்யின் 'குஷி' திரைப்படம், கடந்த 2000-ம் ஆண்டு திரைக்கு வந்து பெருமளவு கொண்டாடப்பட்டு அப்போதைய டிரெண்ட் செட்டராக அமைந்தது.
பாடல்கள், வசனங்கள் எனப் படத்தில் பட்டியலிட பலருக்குப் பிடித்தமான ஹைலைட் விஷயங்கள் பல இருக்கின்றன.
25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் செய்வதற்குத் தயாராகி வருகிறது ̀குஷி' படக்குழு.

ஏற்கெனவே ஏ.எம். ரத்னம் - விஜய் காம்போவின் 'கில்லி' படமும் ரீ ரிலீஸில் அதிரடி காட்டியிருந்தது. இப்போது இந்த காம்போவின் 'குஷி'-யும் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது.
'கில்லி'-யைத் தொடர்ந்து இப்போது 'குஷி' படத்தையும் ரிலீஸ் செய்கிறார் விநியோகஸ்தர் 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி'-யின் சக்திவேலன். ரீ ரிலீஸுக்கு வாழ்த்துகள் சொல்லி அவரிடம் பல தகவல்களைக் கேட்டறிந்தோம்.
நம்மிடையே பேசத் தொடங்கிய சக்திவேலன், "விஜய் சாரின் 'கில்லி' படத்துக்கு ரீரிலீஸுல அமோகமான வரவேற்பு கிடைச்சது.
அந்தப் படத்திற்குப் பிறகு விஜய் சாரோட 'குஷி' திரைப்படமும் பெரிய ஹிட் மெட்டிரியலாக இருக்கும். அதைச் சரியான நேரம் பார்த்து வெளியிடணும்னு தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் சார் சொன்னார். இந்த வருஷத்தோட 'குஷி' திரைப்படம் வெளியாகி 25 வருடங்களைக் கடந்திருக்கு.
இந்தச் சமயத்தில் திரைக்கு மறுபடியும் படத்தைக் கொண்டு வருவது ஸ்பெஷல் தானே! தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம் சாரும் ரீரிலீஸுக்கு இது சரியான நேரமாக இருக்கும்னு நினைச்சாரு. அதனால்தான் வருகிற செப்டம்பர் 25-ம் தேதி திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கோம்.

ஏ. எம். ரத்னம் தயாரித்த வெற்றிப்படங்களை அடுத்தடுத்து திரைக்குக் கொண்டு வருவோம்னு நான் முன்பே சொல்லியிருந்தேன். 'கில்லி' படத்துக்குக் கிடைச்ச வரவேற்புதான் மீண்டும் விஜய் சார் படத்தையே ரீரிலீஸ் செய்யும் முடிவை எங்களுக்குத் தந்ததுனு சொல்லலாம்.
ஏன்னா, எந்தவொரு ரீரிலீஸ் படங்களுக்கும் கிடைச்சிடாத ஒரு கொண்டாட்டம் 'கில்லி' படத்துக்குக் கிடைச்சது. 2கே கிட்ஸ் பெரிதளவில திரையில பார்த்திடாத 'குஷி' படமும் திரையரங்குகள்ல பெரிதாகக் கொண்டாடப்படும்.
நான் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்யும்போது என்னுடைய சோசியல் மீடியா பக்கத்துல என்னுடைய நண்பர்களும், பொது மக்களும் எனக்கு வாழ்த்து தெரிவிப்பாங்க.
இப்போ 'குஷி' படத்தை ரீரிலீஸ் செய்வதாக அறிவிப்பு வந்ததும் எக்கச்சக்கமான நபர்கள் அதை ஷேர் பண்ணி கொண்டாடி எனக்கு வாழ்த்து தெரிவிக்கிறாங்க.
புதிய பட ரிலீஸைவிட இந்த ரிரிலீஸுக்கு டபுள் மடங்கு வாழ்த்துகள் என்னை வந்து சேர்ந்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துச்சு.
மக்கள் வாழ்த்துகளாகச் சொன்ன விஷயங்கள் மூலமாகவே அவங்க எந்தளவுக்கு எதிர்பார்ப்போட இருக்காங்கனு என்னால புரிஞ்சுக்க முடியுது.
நிச்சயமாக, மக்களைத் திருப்திபடுத்துறதுக்கு படத்தோட தரத்தை இன்னும் மெருகேற்றிக் கொண்டு வர்றோம். இப்போ மட்டுமல்ல, அப்போதே படத்தை ஏ. எம். ரத்னம் படத்தைப் பிரமாண்டமாக எடுத்து வச்சிருக்காரு.

பாடல்களாக இருந்தாலும் அதைத் தரமாகக் கொண்டு வந்து ஆடியன்ஸுக்குப் பிடிக்க வைக்கணும்னு ஏ.எம். ரத்னம் சார் நினைப்பாரு. இப்போதும் விஷுவலாகவும், ஆடியோவாகவும் மெருகேற்றி திரைக்குக் கொண்டு வர்றோம்.
அதுவும் பார்வையாளர்களுக்கு பக்கா ட்ரீட்டாக இருக்கும்" என்றவரிடம், 'ஏதும் ட்ரிம் செய்திருக்கிறீர்களா ?' எனக் கேட்டோம். பதில் தந்த அவர், "இல்லைங்க, படத்தோட அதே அளவுலதான் கொண்டு வர்றதுக்குத் திட்டமிட்டிருக்கோம்.
இப்போ வரைக்கும் ஏதும் ட்ரிம் செய்றதுக்கு ப்ளான் பண்ணல" என்றார். மேலும் பேசிய அவர், 'கில்லி' படத்தோட ரீரிலீஸ் சமயத்துல நானும் ஏ.எம். ரத்னம் சாரும் விஜய் சாரைச் சந்திச்சிருந்தோம்.
அப்போ நான் விஜய் சார்கிட்ட 'எப்போதும் போல படங்கள் தொடர்ந்து ப்ண்ணுங்க'னு கேட்டிருந்தேன். அந்தச் சந்திப்பின்போது 'குஷி' ரீரிலீஸ் தொடர்பாகவும் பேசினோம். அவரும் அதைச் சந்தோஷமாக ரிசீவ் பண்ணினாரு.
அதே போல, எஸ்.ஜே. சூர்யா சாரின் எனர்ஜியும் எங்களுக்குப் பெரிதளவுல உதவியாக இருக்கும். கடந்த வருஷம் , 'குஷி' படத்தோட தெலுங்கு வெர்ஷனை ரீரிலீஸ் செய்திருந்தாங்க. பவன் கல்யாண் சார் நடித்திருந்த அந்த வெர்ஷனுக்கு ரீரிலீஸுல பெருமளவுல வரவேற்பு கிடைச்சது.

அதுக்கு எஸ்.ஜே. சூர்யா சார் வீடியோ பேசி தர்றது மாதிரியான பெரும் உதவிகளைச் செய்திருந்தாரு. 'குஷி'-யைத் தொடர்ந்து விஜய் சார் - ஏ. எம். ரத்னம் சார் காம்போவுல வந்திருந்த 'சிவகாசி' படத்தையும் சரியான சமயத்துல வெளியிட திட்டமிட்டு வர்றோம்.
நல்ல படங்களை ரீரிலீஸ் செய்யும்போது அதுக்கு அதிரடியான வரவேற்பு கிடைக்கும். அதற்கு எடுத்துகாட்டாக 'கில்லி', 'குஷி' படங்கள் இருக்கும்னு நம்புறேன். 'கில்லி'-யைப் போலவே 'குஷி' படத்துக்கும் நீங்க பெரிய ரிலீஸ் எதிர்பார்க்கலாம்" என்றார் மகிழ்ச்சியுடன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...