Malayalam Movies: எகிற வைக்கும் எதிர்பார்ப்பு; அடுத்தடுத்து வெளிவரும் முக்கிய படங்கள்
ஆண்டின் தொடக்கத்திலேயே மலையாளப் படங்கள் திரையரங்குகளில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி ஆண்டின் தொடக்கத்திலேயே மாலிவுட் படைப்புகள் அடுத்தடுத்து ஹிட் அடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தாண்டின் தொடக்கத்திலேயே மலையாளத்தின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி மற்றும் மோகன் லாலின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இது ஒரு புறமிருக்க, இந்தாண்டின் அடுத்த சில மாதங்களில் வெளியாகவுள்ள சில மாலிவுட் படைப்புகளுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு மாலிவுட்டைத் தாண்டி கோலிவுட், டோலிவுட் என எல்லா ஏரியாக்களிலும் நிலவி வருகிறது. அத்திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?
டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்:
`டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படத்தின் மூலமாகதான் இயக்குநர் கெளதம் மேனன் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் டொமினிக்காக மம்மூட்டி களமிறங்கியிருக்கிறார். இந்த டொமினிக் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட். அந்த டிடெக்டிவ் ஏஜென்ட்டைப் பின்பற்றுவதே இத்திரைப்படத்தின் கதை. `காதல் தி கோர்', `கண்ணூர் ஸ்குவாட்' போன்ற திரைப்படங்களுக்குக் கிடைத்த ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தையும் மம்மூட்டியே தயாரித்திருக்கிறார். இந்தப் படம் இம்மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தொடரும்:
மோகன் லால் டாக்ஸி டிரைவர் ஷண்முகமாக இந்தத் `தொடரும்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இரண்டு தேசிய விருதுகளை அள்ளிய `செளதி வெள்ளக்கா' திரைப்படத்தின் இயக்குநரான தருண் மூர்த்தி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகை ஷோபனாவும் நடித்திருக்கிறார். டாக்ஸி டிரைவராக லால் சேட்டன் இம்மாதம் 30-ம் தேதி திரையரங்குகளுக்கு வருகிறார்.
எல்2: எம்புரான்:
ப்ருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி அதிரடியான வரவேற்பைப் பெற்ற `லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம்தான் இந்த `எல் 2: எம்புரான்'. ப்ருத்விராஜ் தான் நடிக்கும் படங்களின் வேலைகளை கவனித்துக் கொண்டே, இப்படத்திற்கான வேலைகளையும் கவனித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படம் மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாகிறது.
பசூகா:
மலையாள சினிமாவின் பிரபல திரைக்கதையாசிரியர் கலூர் டெனிஸின் மகன் டீனோ டெனிஸ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம்தான் இந்த `பசூகா'. இந்தப் படத்தில் மம்மூட்டியுடன் இயக்குநர் கெளதம் மேனனும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இம்மாதம் கெளதம் மேனன் மம்மூட்டி வைத்து இயக்கியிருக்கு `டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படம் வெளியாகிறது. அடுத்த மாதம் 14-ம் தேதி, இந்தக் கூட்டணி இணைந்து நடித்திருக்கும் இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு கடந்த 2023-ம் ஆண்டு வெளியானது. மம்மூட்டியின் தாயாரின் மறைவு போன்ற காரணங்களால் இத்திரைப்படத்தில் ரிலீஸ் தாமதமானது.
ஆலப்புழா ஜிம்கானா:
`ப்ரேமலு' திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு புயலாக சுற்றி வருகிறார், நஸ்லென். பலப் படங்களை அடுத்தடுத்து லைன் அப்பில் வைத்திருக்கும் நஸ்லெனின் அடுத்த ரிலீஸ் `ஆலப்புழா ஜிம்கானா' திரைப்படம்தான். இந்தப் படத்தில் இந்த `2கே கிட்' பாக்ஸிங் வீரராக நடித்திருக்கிறார். `Thalumala' படத்தின் இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கியிருக்கும் இந்தப் படம் மார்ச் மாதம் வெளியாகவிருக்கிறது. `ப்ரேமலு' படத்தின் வணிக ரீதியிலான பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நஸ்லென் மீது இப்போது மாலிவுட்டில் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கதனார்:
பிரபு தேவா, ஜெயசூர்யா, அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த மலையாளப் படைப்பு கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது. அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம்தான் நடிகை அனுஷ்காவின் மலையாள டெபுட். `ஹோம்' திரைப்படத்திற்குத் தேசிய விருது பெற்ற இயக்குநர் ரோஜின் தாமஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். `Virtual Production' தொழில்நுட்பத்தைப் பின்பற்றி உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.