நீலகிரி: தி லாரன்ஸ் பள்ளியின் நிறுவனர் தின விழா; குதிரையேற்ற சாகசம் செய்த மாணவர்...
NCERT பாடபுத்தகம்: ``காண்டாமிருகங்கள் பற்றி தவறான தகவல்கள்'' - கொதிக்கும் நெட்டிசன்கள்!
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT)-ன் வரலாற்று புத்தகங்கள் சர்ச்சைக்கு உள்ளவாது சமீபகாலமாக வழக்கமாகியிருக்கிறது.
இந்த நிலையில் நான்காம் வகுப்புக்கான அறிவியல் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடத்தில் உள்ள பிழைகளை மக்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
காண்டாமிருகம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களுடன் கட்டமிடப்பட்ட பகுதி முழுக்க முழுக்க பிழைகளால் நிறைந்திருப்பதை நெட்டிசன்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்திய காண்டாமிருகத்துக்கு இரண்டு கொம்புகளா?
இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் கிட்டத்தட்ட அழிவின் விழிம்புக்கு சென்றன. வேட்டையாடுதலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வனத்துறையினர் இவற்றைக் காத்து வருகின்றனர்.
தற்போது அசாமின் கசிரங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
புதிதாக வெளியிடப்பட்ட NCERT நான்காம் வகுப்பு புத்தகத்தில் இந்திய காண்டாமிருகங்களுக்கு பதில் தவறுதலாக ஆப்பிரிக்க இரட்டை கொம்பு காண்டாமிருகங்களின் படம் இடம்பெற்றுள்ளது.
NCERT புத்தகங்களை பல்துறை தகவல் களஞ்சியமாக மாற்றும் முயற்சிக்காக கணித புத்தகத்தில் இந்த பாடம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
'நம்மை சுற்றி 1000' என்ற பகுதியில் ஆயிரம் எண்கள் கொண்ட பல விஷயங்கள் பற்றி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 4000 என்பதனால் காண்டாமிருகங்கள் பற்றிய குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தோண்ட தோண்ட பிழைகள்
இந்த குறிப்பில் வடகிழக்கு இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில் காண்டாமிருகங்கள் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் பெரும் எண்ணிக்கையிலான காண்டாமிருகங்கள் பிரம்மபுத்திரா நதியின் சமவெளிகளில் வாழ்வதை பாடபுத்தகம் தவறவிட்டிருக்கிறது என இந்தியா டுடே வலைதளத்தில் கூறியுள்ளார் அஸ்ஸாமைச் சேர்ந்த காண்டாமிருக ஆர்வலர் பிபவ் குமார் தாலுக்தார்.
மேலும் அவர், காண்டாமிருகங்கள் அழிவுக்கு காரணமான வில்லன்களாக வேட்டையாடுதலும் வெள்ளமும் முன்னிறுத்தப்படுவது தவறு எனக் கூறியுள்ளார்.
"வெள்ளம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும், இது இயற்கையான தேர்வின் மூலம் உயிரினங்களுக்கு உதவும் ஒரு இயற்கை செயல்முறையாகும்." என அவர் கூறியுள்ளார்.
NCERT புத்தகத்தில் 1900-களின் தொடக்கத்தில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 200-ஆக இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. 1966 வரை 366 காண்டாமிருகங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் பிபவ்.
மேலும், அசாமின் காசிரங்கா தேசியபூங்காவில் தொடர்ச்சியாக வெள்ளம் வந்துகொண்டிருக்கும் நிலையிலும் இப்போது அங்கு 2600 காண்டாமிருகங்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.
காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டதற்கு அதன் கொம்புகளில் இருக்கும் மருத்துவ குணம்தான் காரணம் என்கிறது NCERT புத்தகம். ஆனால் காண்டாமிருகங்களின் கொம்புகளில் மருத்துவ குணங்கள் எதுவும் கிடையாது.
NCERT-ன் கருத்து சட்டத்துக்குப்புறம்பாக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட வழிவகுக்கலாம் என சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
