தூக்கில் தொங்கிய நிலையில் தலித் உடல்: உ.பி.யில் அதிர்ச்சி!
உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் மரத்தில் தொங்கிய நிலையில் தலித் தொழிலாளி உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறுகையில்,
இறந்தவர் ஜராவுடா ஜாட் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(35) என அடையாளம் காணப்பட்டார். உள்ளூர் விவசாயி ஒருவரின் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர்.
முதற்கட்ட தகவலின்படி, ராஜேஷ் அதிகாலை 2 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்த வயல்களில் குழாய்க் கிணறு வெட்டச் சென்றிருந்தார். காலையில், வயல்களுக்குச் சென்ற கிராம மக்கள் அவரது உடல் ஒரு மரத்தில் தொங்கியதைக் கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அழைப்பு வந்த சிறிது நேரத்திலேயே காவல்துறை குழுக்கள், தடயவியல் பிரிவு மற்றும் இறந்தவரின் குடும்பத்தினருடன் சம்பவ இடத்தை அடைந்தனர்.
மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.
ராஜேஷ் கொலை செய்யப்பட்டதாகவும், தற்கொலை என்று காட்ட அவரது உடல் தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.