திமுகவை வீழ்த்த அம்மாவின் தொண்டர்கள் ஓரணியாக வேண்டும்: டிடிவி தினகரன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரே அணியில் சேருமாறு அமமுக செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மே தினத்தையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிலாளர் தின பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது, அமமுக கட்சி, எப்போதும் யாரிடமும் மண்டியிடாமலும் சமரசம் செய்யாமலும், தனது இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அமமுகவின் இலைக்கை அடையும்வரை தொடர்ந்து உறுதியாகச் செயல்படுவேன்.
தமிழகத்தை சித்ரவதை செய்து கொண்டிருக்கும் திமுக அரசை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்றுசேர வேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் இணைந்திருக்கிறது. திமுக அரசை வீழ்த்துவதுதான் நமது தலையாய நோக்கமாக இருக்க வேண்டும். அதனைச் செய்யவே, 2021 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் தியாகங்கள் செய்யவும் அமமுக தயாராக இருந்தது.
ஆனால், அதனை சிலர் ஏற்றுக்கொள்ளாததால்தான், திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுகவை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சிகளும் எங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும்.
திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் கிடைப்பதற்கு, அனைவரும் ஒரே அணியில் சேர வேண்டும்.
அம்மா ஜெயலலிதாவின் ஆட்சி வேண்டுமென்றால், அம்மாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிக்க:டெஸ்லா சிஇஓ மாற்றம்! எலான் மறுப்பு!