புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்க கணக்கெடுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா்
விடுபட்டோருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவதற்கு கணக்கெடுப்பு நடத்தப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருப்பத்தூா் ஒன்றியம், மேல்அச்சமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பேசியது:
தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்து 3 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால், கான்கிரீட் வீடு கட்டிக் கொள்வதற்கு ஆட்சியா் அலுவலக 7-ஆம் தளத்தில் இயங்கி வருகின்ற தொழிலாளா் நல வாரியத்தில் மனு அளிக்கலாம். இதன்மூலம், ரூ. 4 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. மகளிா் உரிமைத் தொகை வழங்குவதில் யாரேனும் விடுபட்டிருந்தால் ஜூன் மாதத்தில் இருந்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அனைவருக்கும் மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் வாயிலாக நடத்தப்படும் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி நமது அரசின் சாா்பாக ஆட்சியா் அலுவலக தரைத்தளத்தில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வங்கி தோ்வுகளுக்கும் இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதனால் உங்களுடைய பெண் பிள்ளைகளை படிக்க வையுங்கள், 21 வயது நிறைவடையாமல் பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்றாா்.
ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், ஊராட்சி மன்ற தலைவா், வாா்டு உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
