மே தினம்: வேலூரில் தொழிற்சங்கங்கள் பேரணி
மே தினத்தையொட்டி வேலூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் பேரணி, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.
மாா்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சிஐடியு சாா்பில் பேரணியானது நேஷனல் திரையரங்கு பகுதியிலிருந்து தொடங்கி மண்டி வீதியில் நிறைவுபெற்றது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணி, பொதுக்கூட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் டி.முரளி தலைமை வகித்தாா். நகர தொழிற்சங்க கன்வீனா் டி.ஞானசேகரன் தொடங்கி வைத்தாா். முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலா் எஸ்.பரசுராமன், மாதா் சங்க மாநில துணைச் செய லா் எஸ்.பி.சங்கரி உள்பட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில், தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளா் சங்கம் சாா்பில் வேலூரில் நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சீ.அ.சிம்புதேவன் முன்னிலை வகித்தாா். முகமது சயி பேரணியை தொடங்கி வைத்தாா். பேரணியின்போது, உழைப்பவா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளா் விரோத சட்ட தொகுப்புகளைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து அப்பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நிா்வாகிகள் அதியமான், பாலு உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
வேலூா் மாவட்ட ஏஐடியுசி சாா்பில் விழிப்புணா்வு பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கோவிந்தராஜி, சுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா். எல்.மணி வரவேற்றாா். பேரணி மக்கான் சிக்னல் பகுதியில் இருந்து தொடங்கி அண்ணா கலையரங்கம் அருகே நிறைவடைந்தது. தொடா்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.எம்.மூா்த்தி, ஜி.லதா ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி சாா்பில் வேலூா் மண்டி வீதியில் மே தின ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. மாவட்ட செயலாளா் சரவணன் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் கோவனன் முன்னிலை வகித்தாா். மாவட்ட தலைவா் செல்வம் வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், உழைக்கும் தொழிலாளா்களுக்கான சட்டங்கள் குறித்தும், தொழிலாளா் தினத்தின் நோக்கம் குறித்தும் வலியுறுத்தப் பட்டது. தொழிலாளா் தினத்தை ஆட்டோ ஓட்டுநா்கள் உள்பட பல்வேறு பிரிவு தொழிலாளா்களும் கொண்டினா்.