சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து! 3, 5, 8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில்!
சிபிஎஸ்சி பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெறுவோர் தேர்ச்சிபெறாதவர்கள் எனும் நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் சிபிஎஸ்சி பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை 'அனைவரும் தேர்ச்சி' நடைமுறை இருந்து வந்தது.
இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் சிபிஎஸ்சி பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை 'அனைவரும் தேர்ச்சி' என்ற முறை ரத்து செய்யப்படுகிறது.
இதன்படி, சிபிஎஸ்சி பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் தேர்வில் மாணவ, மாணவிகள் 30% மதிப்பெண்கள் பெற வேண்டும். இதற்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றால் அவர்கள் தேர்ச்சியடையாதவர்களாகக் கருதப்படுவர்.
கடந்த 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டதால் வரும் 2025-26 கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சிபெறாதவர் என அறிவிக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்த புதிய நடைமுறைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,
"5, 8 ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றால் தேர்ச்சிபெறவில்லை என அறிவிக்கும் நடவடிக்கையினால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும். இதன் காரணமாகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது.
5,8 ஆம் வகுப்பில் தேர்ச்சிபெறாதவர் எனக் கூறி கையெழுத்து கேட்டால் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்க வேண்டும். சிபிஎஸ்இயின் இந்த நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது
கடனை வாங்கி சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்?
திமுகவினரின் பிள்ளைகளுக்காக பேசவில்லை, அனைத்து மாணவர்களுக்காகவும் பேசுகிறோம்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழக அரசுக்கு கல்வி நிதி விடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.