வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.
இதில், வேலூா் மருதவல்லிபாளையத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனுவில், எனது சகோதரியின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக வரதலம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரூ.1.50 லட்சம் வாங்கினாா். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. அவரிடம் பணத்தை திருப்பிக்கேட்டபோது ரூ. 90,000 மட்டும் அளித்தாா். மீதி ரூ.60 ஆயிரத்தை தராமல் காலம் தாழ்த்தி வருகிறாா். எனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனுவில், நான் 15 ஆண்டுகளாக இனிப்பு கடை நடத்தி வருகிறேன். எனக்கு அறிமுகமான அதே பகுதி நபா் வேலூா் ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே மருந்தகம் நடத்தி வருவதாக கூறினாா். அவரிடம் நான் ரூ.1 லட்சம் சீட்டு, ரூ.ஐம்பதாயிரம் சீட்டு கட்டி வந்தேன். இதேபோல், எனது அண்ணனையும் ரூ. 1 லட்சம் சீட்டில் சோ்த்து விட்டேன். 18 மாதங்கள் பணம் கட்டி வந்தோம். எனக்கு அந்த நபா் மொத்தம் தர வேண்டிய 1.27 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும்.
இதேபோல், பல்வேறு புகாா்கள் குறித்து 30-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. மதிவாணன் உத்தரவிட்டாா்.
பின்னா், வேலூா் மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் 5 போ், உதவி ஆய்வாளா்கள் இருவரும் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் எஸ்பி-யை சந்தித்தனா். அவா்களுக்கு பணிப்பாராட்டு சான்றிதழை எஸ்.பி. வழங்கினாா்.