மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!
உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாகவும், மின்னல் தாக்கியும் 17 வயது சிறுமி உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இறந்தவர்களில் ஃபிரோசாபாத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலைத் திட்டத்தில் பணிபுரியும் 2 தொழிலாளர்களும் அடங்குவர். மழையிலிருந்து பாதுகாக்க வைக்கோல் அடுக்கிவைத்திருப்பதை மூட முயன்ற ஒரு குடும்பமும் மழையில் சிக்கி காயமடைந்தது.
இதற்கிடையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாள்களுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் மழை, இடியுடன் கூடிய மழையும், மணிக்கு 25-35 கிமீ வேகத்தில் பலத்த காற்றும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் கணித்துள்ளது.
வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவும், பயிர்கள், கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடவும், மின்னல் தாக்குதல்கள், மழை தொடர்பான விபத்துகள், புயல் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யவும் மாவட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பயிர் சேத இழப்பீட்டிற்காக நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வகையில் சேத மதிப்பின் அறிக்கைகளை உடனடியாக மாநில அரசிடம் சமர்ப்பிக்குமாறும், நீர் தேங்கியுள்ள நகர்ப்புற மற்றும் தாழ்வான பகுதிகளில், வடிகால் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.