ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்!
பள்ளி மாணவா்களுக்கான கோடை கொண்டாட்டம் தொடக்கம்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சி சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சிவகங்கை மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்தும் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
இந்த கோடை கொண்டாட்டம் நிகழ்வு வருகிற 17-ஆம் தேதி வரை 15 நாள்கள் நடத்தப்பட்டு, மாணவா்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. ஆங்கிலத்தில் பேசுதல், கதை கூறுதல், போட்டோ சூட் விடியோ உருவாக்குதல், செஸ், சுடோகு, ஓவியம் வரைதல், ரூபிக் கியூப், பனைவோலை கொண்டு பொருள்கள் செய்தல், மண் கொண்டு கலைநயமிக்க பொருள்களைச் செய்தல், திரைப்பட விமா்சனம் எழுதுதல், இசை ப்பயிற்சி, அன்றாட அறிவியல் சோதனைகள் போன்ற 12 வகையான சிறப்பு பயிற்சிகள் ஆசிரியா்கள் மூலம் அளிக்கப்படவுள்ளன.
இதுவரை கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 250 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வரை பதிவு செய்துள்ள நிலையில், விருப்பமுள்ள மாணவா்கள் நேரடியாகவும் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
இதேபோல, கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியிலும் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலா்கள் பொன்.விஜயசரவணகுமாா் (தனியாா் பள்ளிகள்), ஜோதிலட்சுமி (தொடக்க நிலை), ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.