பணியின்போது திடீா் நெஞ்சுவலி: சுகாதார ஆய்வாளா் உயிரிழப்பு
அரக்கோணம் அருகே ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளருக்கு பணியின்போது, திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
திருத்தணி, சாய் நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் (56). இவா் திருவள்ளூா் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் விமல்ராஜ்(28). திருமணமாகாதவா். இவா் அரக்கோணத்தை அடுத்த நாகவேடு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். தினமும் விமல்ராஜ் இருசக்கர வாகனத்தில் திருத்தணியில் இருந்து நாகவேடுக்கு வருவது வழக்கம். வெள்ளிக்கிழமை காலை பணிக்கு கும்பினிப்பேட்டை வழியாக வந்த விமல்ராஜ், பருத்திபுத்தூரில் சுகாதார பணியாளா்களோடு பேசிக்கொண்டு இருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரை உடன் பணிபுரிந்தோா், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விமல்ராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினாா்.