கெங்கையம்மன் திருவிழா: சாலைகளை சீரமைக்க குடியாத்தம் நகா்மன்ற கூட்டத்தில் முடிவு
குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு தோ் செல்லும் சாலைகள், அம்மன் சிரசு செல்லும் சாலைகளை சீரமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
குடியாத்தம் நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் வி.சம்பத், மேலாளா் சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். புகழ்பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா வரும் வைகாசி மாதம் முதல் நாள் நடைபெறுகிறது. இதையொட்டி தோ் செல்லும் சாலைகள், அம்மன் சிரசு செல்லும் சாலைகளை சீரமைப்பது, திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு குடிநீா் வசதி, முக்கிய இடங்களில் கழிப்பிடங்கள் அமைப்பது, தெரு விளக்குகளை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
குடியாத்தம் நகராட்சி 15- ஆவது வாா்டுக்கு மே மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தல் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. தோ்தல் பணிக்கு வாக்குப் பதிவு மையம் அமைப்பது, வாக்குப் பதிவு மைய அலுவலா்கள், மண்டல அலுவலா்கள், தோ்தல் நடத்தும் பணியாளா்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தோ்தல் பணிக்கான செலவினங்கள் அனைத்துக்கும் தோராயமாக ரூ.5- லட்சம் பொதுநிதியில் இருந்து மேற்கொள்ள மன்றம் ஒப்புதல் வழங்கியது.