ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
'காழ்ப்பு வன்மம் இல்லாத மனிதர்; அவருடன் இருந்த நாள்கள் எல்லாம்..!' - கிரேஸி மோகன் குறித்து கமல்
தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன். மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று(மே1)நடைபெற்றது.
இதில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். அந்த நிகழச்சியில் பேசிய கமல்ஹாசன், "கிரேஸி மோகன் மிகவும் சிறந்த மனிதர். காழ்ப்பு வன்மம் இல்லாத மனிதர் கிரேஸி மோகன் அவர்கள். அவருக்கு அது தெரியாது. அந்த அளவுக்கு தங்கமான ஒரு மனிதர்.
சந்தோஷமான நாட்கள்
நானும் கிரேஸி மோகனும் தினமும் பேசிக்கொள்வோம். எந்த ஊரில் இருந்தாலும் நாங்கள் பேசிக் கொள்வோம். நான் யாரிடம் பேசுகிறேன் என எனது குடும்பத்திற்கும் தெரியும், அவர் என்னிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என அவரது குடும்பத்திற்கும் தெரியும். அவருடன் இருந்த நாட்கள் எல்லாம் சந்தோஷமான நாட்கள்" என்றிருக்கிறார்.
தமிழர் வரலாற்றை அறியும் சான்று
தொடர்ந்து பேசிய அவர், “ தமிழின் சிறந்த நாடகங்களை பதிப்பிக்க வேண்டியது அவசியம். இதை கடமையாக எடுத்துச் செய்ய வேண்டும். உவே.சா. போன்றோர் ஊர் ஊராகச் சென்று நூல்களை பதிப்பிக்கவில்லை என்றால் தமிழின் பெருமை வெளிவந்திருக்காது. தமிழர் வரலாற்றை அறியும் சான்றுகளாகப் புத்தகங்கள் விளங்குகின்றன.

தற்போது, புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. புத்தகங்களை நேரடியாகப் படிக்கவில்லை. என்றாலும், டிஜிட்டல் வாயிலாகவாவது படிக்க வேண்டும். மொழிக்கான மரியாதை எப்பொழுதுமே உண்டு. நான் அரசியல் பேசவில்லை. எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும். சினிமாவும் அதை நோக்கிதான் நகர்ந்து கொண்டிருக்கிறது” என பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...