குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.65 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்
திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.65 கோடி மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தனா்.
இதில், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், புங்கந்துறை ஊராட்சி, குமாரசாமி கோட்டையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் - வெள்ளக்கோவில் சாலை (செல்லாண்டியம்மன் கோவில்) குமாரசாமி கோட்டை செல்லும் சாலையில் அமாரவதி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைத்தல், சிறுகிணறு ஊராட்சி, நொச்சிப்பாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.1.31 கோடி மதிப்பில் சிறுகிணறு, கொழுமங்குழி மற்றும் கொக்கம்பாளையம் ஊராட்சிக்கு பகுதிகளில் அங்கன்வாடி மையம், கதிரடிக்கும்கலம், கான்கிரீட் சாலை, வேளாண் பொருள் கிடங்கு உள்ளிட்ட திட்டப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் சாடையபாளையம் ஊராட்சி கொளந்தாபாளையம் முதல் மானூா்பாளையம் வரை சாலை அமைத்தல், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் தேவராஜபட்டணம் முதல் சுங்கிலிபாளையம் வரை ரூ.38.77 லட்சம் மதிப்பில் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.17.65 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மூலனூா் வஞ்சியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.74 லட்சம் மதிப்பில் பக்தா்கள் இளைப்பாறும் மண்டபத்தையும் அமைச்சா்கள் திறந்துவைத்தனா். இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகலிங்கம், ரேணுகாதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.