வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வேளாண்மைத் துறைக்கு சிறப்பிடம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டு, வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறு சீரிய திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி, சுற்றுச்சுழல் மற்றும் பொதுநலன் கருதி இயற்கை வேளாண்மையை ஊக்குவித்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தோட்டக்கலைப் பயிர்களில் உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்க இடுபொருள் மானியம், இயற்கை வேளாண் இடுபொருட்களை உற்பத்தி செய்யும் அலகுகள் அமைத்திட குழுக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் மானியம், நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மைக்கான சிறப்புத் திட்டம், வட்டாரத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் 385 வட்டாரங்களில் உயிர்ம வேளாண்மைக்கான செயல்விளக்கத்திடல்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவை தவிர இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக பூமாலை வணிக வளாகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் வசதிகள் ஏற்படுத்தித் தருதல், இயற்கை வேளாண்மை மேற்கொள்ள ஊக்கத்தொகை வழங்குதல், இயற்கை வேளாண்மை சான்றிதழுக்கான பதிவுக்கட்டணத்திற்கு முழு விலக்கு அளித்தல், இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் 2025-26ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை(மே.2) நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினையும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
மூன்று நபர்களுக்கு நம்மாழ்வார் விருது
2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும், ஊக்குவிக்கும் மற்றும் பிற உயிர்ம விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் பெருமளவில் கொண்டு சேர்த்த “நம்மாழ்வார்” அவர்களின் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவ்வகையில் 2024-ஆம் ஆண்டு மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த க.சம்பத்குமார் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.ஜெகதீஸ் இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம் பரிசுத் தொகை மற்றும் ரூ.7,000 மதிப்பிலான பதக்கமும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வே.காளிதாஸ் மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான பதக்கமும் முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.
கர்நாடகம், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம்

151 நபர்களுக்கு பணிநியமன ஆணை
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், அரசின் வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், காலியாகவுள்ள பணியிடங்கள் படிப்படியாக விரைந்து நிரப்பப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை வேளாண்மை-உழவர் நலத்துறையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக பல்வேறு வகையான தொழில்நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,799 நபர்களுக்கும், பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் 265 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், என மொத்தம் 2,064 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 76 இளநிலை உதவியாளர்கள், 68 தட்டச்சர்கள் மற்றும் 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் என மொத்தம் 151 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதல்வர் பணிநியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் தித. ஆபிரகாம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல்பாண்டியன், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் இரா. முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.