தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறியது.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, வெறும் 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்தும் வெளியேறியது.
இதையும் படிக்க: நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்
கோட்டை தகர்ந்தது
பல ஆண்டுகளாக சிஎஸ்கேவின் கோட்டையாகத் திகழ்ந்த சேப்பாக்கம் திடலில் நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே, ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு பெரிய அளவில் உதவாததே சிஎஸ்கேவின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கம் ஆடுகளம் சிஎஸ்கேவுக்கு பெரிய அளவில் உதவியாக இல்லாதததை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முந்தைய சீசன்களில் சேப்பாக்கம் திடல் சுழற்பந்துவீச்சுக்கு உதவுவதாக இருந்தது. சேப்பாக்கம் திடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக போட்டிகளில் தோல்வியடைவது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? மற்ற அணிகள் சேப்பாக்கத்தில் நன்றாக விளையாடுவதாக நினைக்கிறேன். சுழற்பந்துவீச்சுக்கு உதவிய சேப்பாக்கம் ஆடுகளத்தின் அடிப்படையிலேயே நாங்கள் ஆட்டங்களை அணுகினோம்.
இதையும் படிக்க: பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்
சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் மட்டுமின்றி மற்ற போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் அதிக தவறுகளை செய்தோம். அதனால், நாங்கள் சேப்பாக்கத்தில் விளையாடினாலும் சரி, மற்ற இடங்களில் விளையாடினாலும் சரி போட்டியின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வந்திருக்காது என்றார்.
பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பல்
இந்த சீசனின் தொடக்கம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தொடர்ச்சியாக பேட்டிங்கில் சொதப்பி வருவதால் சிஎஸ்கேவால் சரியான பிளேயிங் லெவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் கூறியிருந்தார்.
இந்த சீசனில் சிஎஸ்கேவுக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக ஷிவம் துபே உள்ளார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிவம் துபே 248 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 20 வீரர்களில் கூட ஷிவம் துபேவின் பெயர் இடம்பெறவில்லை.
கலீல் அகமது, நூர் அகமதுக்கு ஆதரவு இல்லை
நடப்பு ஐபிஎல் சீசனின் தொடக்கம் முதலே கலீல் அகமது மற்றும் நூர் அகமது இருவரும் அபாரமாக பந்துவீசி வருகிறார்கள். அவர்கள் இருவரும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சுழற்பந்துவீச்சாளரான நூர் அகமது அபாரமாக பந்துவீசுகிற போதிலும், அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிடமிருந்து அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இந்த சீசனில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் மட்டுமே கைப்பற்றியுள்ளனர். சிஎஸ்கே கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளின் பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறவில்லை.
ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக அவர்கள் களமிறக்கப்பட்ட போதிலும், அவர்களால் பந்துவீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. பந்துவீச்சில் நூர் அகமது தனி ஒருவராகவே போராட வேண்டியிருக்கிறது.
அடுத்த சீசனுக்கான திட்டம் என்ன?
பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இல்லையென்று ஆகிவிட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சீசனை எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கேவில் இளம் வீரர்கள் பலர் களமிறக்கப்படுவதை பார்க்க முடிகிறது. ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரேவிஸ் போன்ற இளம் வீரர்களுக்கு அணி நிர்வாகம் வாய்ப்பளித்துள்ளது. அடுத்த சீசனுக்கான வலுவான அணியை உருவாக்க சிஎஸ்கே முனைப்பு காட்டுவது இதிலிருந்து தெரிகிறது. இளம் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடுகிறார்கள்.
இதையும் படிக்க: கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?
சிஎஸ்கேவின் கேப்டன் எம்.எஸ்.தோனியும் இந்த சீசனில் சிஎஸ்கே சிறப்பாக செயல்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். அணியில் ஒரு சில விஷயங்கள் சரியாக செல்லவில்லையென்றால், அதனை சரி செய்யலாம். ஆனால், பல விஷயங்களில் அணியில் முன்னேற்றம் தேவைப்படுகிறது எனத் தெரிவித்திருந்தார். மேலும், அடுத்த சீசனில் வலுவாக திரும்பி வருவோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
நடப்பு சீசனில் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து அடுத்த சீசனில் சிஎஸ்கே வலுவாக திரும்பி வரவேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூட.