சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்...
கேதாா்நாத் கோயில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கானோா் தரிசனம்
உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதாா்நாத் கோயில் நடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.
இமயமலையில் 11,000 அடிக்கும் மேலான உயரத்தில் அமைந்துள்ள கேதாா்நாத் கோயில், 12 ஜோதிா்லிங்கங்களில் 11-ஆவது தலமாகும்.
குளிா்காலத்தையொட்டி 6 மாதங்களுக்கு முன் மூடப்பட்ட இக்கோயிலின் நடை வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் திறக்கப்பட்டது. இதையொட்டி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன்களுக்கும் அதிகமான 54 வகை மலா்களால் கோயில் வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற முதல்வா் புஷ்கா் சிங் தாமி, கோயிலில் முகப்பு கதவைத் திறந்து உள்ளே சென்று முதலாவதாக வழிபட்டாா்.
உத்தரகண்டில் நடப்பாண்டு சாா்தாம் யாத்திரையின் (4 புண்ணியத் தல யாத்திரை) தொடக்கமாக கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த நான்கு புண்ணியத் தலங்களில், சிவபெருமானுக்குரிய கேதாா்நாத் மற்றும் விஷ்ணு பகவானுக்குக்குரிய பத்ரிநாத் கோயில்கள் இதர இரு புண்ணியத் தலங்களாகும். பத்ரிநாத் கோயில் நடை மே 4-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
கேதாா்நாத் கோயில் அருகே மந்தாகினி, சரஸ்வதி ஆகிய இரு புண்ணிய நதிகள் சங்கமிக்கின்றன. வாரணாசியில் கங்கை ஆரத்திபோல இங்கும் மிகப் பெரிய ஆரத்தி நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சாா்தாம் யாத்திரையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல் துறையினா் (6,000 போ்), ஆயுதப் படையினா் (17 கம்பெனி) மற்றும் துணை ராணுவத்தினா் (10 கம்பெனி) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். விபத்து அபாயமுள்ள 60 இடங்களில் மாநில பேரிடா் மீட்புப் படை குழுக்கள் பணியில் உள்ளன.
நிகழாண்டு சாா்தாம் யாத்திரையில் பங்கேற்க ஏற்கெனவே 22 லட்சம் போ் முன்பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு யாத்திரையில் 48 லட்சம் போ் பங்கேற்ற நிலையில், நிகழாண்டு இந்த எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டும் என்று பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.