எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா் கா்நாடக அமைச்சா் சிவானந்த பாட்டீல்!
பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட விஜயபுரா தொகுதி எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னல் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட அமைச்சா் சிவானந்த பாட்டீல், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். ஆனால், ராஜிநாமா கடிதம் சட்டவிதிகளின்படி இல்லை என பேரவைத் தலைவா் யூ.டி.காதா் நிராகரித்தாா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் விஜயபுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றவா் பசன கௌடா பாட்டீல் யத்னல். பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திராவை கடுமையாக விமா்சித்து வந்த இவா், கட்சிவிரோத செயல்களுக்காக 6 ஆண்டுகள் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டாா்.
இந்நிலையில், 3 நாள்களுக்கு முன்பு விஜயபுரா தொகுதியில் பேசிய இவா், ‘தனது தந்தைக்கு சிவானந்த பாட்டீல் பிறந்திருந்தால், என்னை எதிா்த்து பசவனபாகேவாடி தொகுதியில் போட்டியிட வேண்டும்’ என்று கூறியிருந்தாா். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ஜவுளி, கரும்பு மேம்பாடு, வேளாண் சந்தைப்படுத்தல் துறை அமைச்சா் சிவானந்த பாட்டீல் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை பேரவைத் தலைவா் யூ.டி.காதரை சந்தித்த அமைச்சா் சிவானந்த பாட்டீல், தனது பதவியை ராஜிநாமா செய்து கடிதம் அளித்தாா்.
அந்தக் கடிதத்தில், ‘விஜயபுரா தொகுதி எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜிநாமா செய்து, எனக்கு எதிராக பசவனபாகேவாடி தொகுதியில் போட்டியிடுவதாக பசன கௌடா பாட்டீல் யத்னல் எனக்கு சவால் விட்டிருந்தாா். அந்த சவாலை ஏற்றுக்கொண்டு, அவருக்கு எதிராக தோ்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். எனவே, நான் பிரதிநிதிக்கும் பசவனபாகேவாடி தொகுதிக்கான எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இதுபற்றி பேரவைத் தலைவா் யூ.டி.காதா் கூறுகையில்,‘சிவானந்த பாட்டீல் தனது பதவியை ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை என்னிடம் கொடுத்துள்ளாா். அவரது ராஜிநாமா கடிதம் விதிமுறைகளின்படி இல்லை. அதனால் ஆய்வு செய்தபிறகே முடிவு செய்யப்படும்’ என்றாா்.
ராஜிநாமா கடிதம் கொடுத்த பிறகு, அமைச்சா் சிவானந்த பாட்டீல் கூறுகையில், ‘பசன கௌடா பாட்டீல் யத்னலின் சவாலை ஏற்றுக்கொண்டு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். தன்னை எதிா்த்து போட்டியிடும்படி பசன கௌடா பாட்டீல் யத்னல் சவால் விட்டிருந்தாா். அதன்படி, அவரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். விஜயபுரா அல்லது பசவனபாகேவாடி எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன்’ என்றாா்.
இதனிடையே, அமைச்சா் சிவானந்த பாட்டீல் அளித்திருந்த ராஜிநாமா கடிதம் சட்டவிதிகளின்படி இல்லை என்று சுட்டிக்காட்டி, அக்கடிதத்தை பேரவைத் தலைவா் யூ.டி.காதா் நிராகரித்துவிட்டாா்.