செய்திகள் :

Neft Daslari: காஸ்பியன் கடலுக்கு நடுவில் `மிதக்கும் பேய் நகரம்' -ஓர் எண்ணெய் வரலாறு!

post image

கடல் மீது கட்டப்பட்ட நகரம்

மனித குல வரலாற்றில் அதி முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று எண்ணெய் வளம். எண்ணெய் வளம் பூமியில் தீர்ந்துபோகக் கூடிய ஒன்று என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அது தீர்ந்துபோன பின்பு இன்றிருக்கும் வாகனங்கள், கருவிகள் எல்லாம் எண்ணெய் வளம் இருந்ததற்கான தடயமாக மாறிவிடும்.

ஏற்கெனவே அப்படி தடயமாக மாறிவிட்ட ஒரு நகரம்தான் நெப்ட் டேஷ்லரி (neft daslari). மனித முயற்சியால் கடல் மீது கட்டப்பட்ட ஒரு மிதக்கும் நகரம் இது. இது சேதமடைந்த கப்பல்கள் மீது உருவாக்கப்பட்டுள்ளது. நெப்ட் டேஷ்லரி என்ற பெயருக்கு எண்ணெய் பாறைகள் என்று பொருள்.

Neft Daslari : Soviet-Era Oil Rig City

கடல்பரப்பில் அமைப்பட்ட முதல் எண்ணெய் தளம் (Oil Platform) இதுதான். காஸ்பியன் கடலில் 300 கிலோமீட்டர் நீளத்துக்கு பாலங்களும் சாலைகளும் கொண்ட இந்த நகரத்தில் 2,000 எண்ணெய் கிணறுகள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது வானுயர்ந்த வெற்று கோபுரங்கள், துருப்பிடித்த குழாய்கள், சிதைந்த மரப் பாலங்கள், சோவியத் காலத்தை சேர்ந்த சிதிலமடைந்த கட்டடங்கள் என பேய் நகரத்தைப் போல காட்சியளிக்கிறது இந்த நகரம்.

நெப்ட் டேஷ்லரி அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் அருகாமையில் இருக்கும் கடற்கரை 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சோவியத் யூனியன் உருவாகும் காலத்தில் ரஷ்யாவின் அங்கமாக்கப்பட்டது அஜர்பைஜான். சோவியத் உடைவதற்கு சில காலம் முன்புவரை பாகு (Baku) நகரம் அதன் அங்கமாகவே இருந்தது.

7 கப்பல்களின் நகரம்

இரண்டாம் உலகப்போரின் போது சோவியத் இராணுவத்துக்கு தேவையான பெரும்பகுதி எண்ணெய் இங்கிருந்து கிடைத்தது. 1940-களில் எண்ணெய் தேவையை உணர்ந்து சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலின் காஸ்பியன் கடலில் எண்ணெய் வளங்கள் இருப்பை அறிய உத்தரவிட்டார்.

ஜோசப் ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டங்களின் பகுதியாக, பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு 1949ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி இந்த நகரத்தை அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. மத்திய ஆசியாவிலேயே அதிக எண்ணெய் இருப்புள்ள பகுதியாக இது உருவானது.

ஜோசப் ஸ்டாலின்

முதலில் தொழிலாளர்கள் தங்குவதற்கான சிறிய விடுதிகள் கட்டப்பட்டன. பிறகு பெரிய கட்டடங்கள் எழத்தொடங்கின. இந்த நகரம் சேதமடைந்த கப்பல்களின் மீது உருவாக்கப்பட்டது என ஏற்கெனவே கூறியிருந்தேன். பல பழைய கப்பல்களை நீரில் மூழ்கச் செய்து அவற்றை அடித்தளமாக பயன்படுத்தி கடலில் இருந்து துண்களை எழுப்பியுள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து சில அடிகள் உயரத்தில் தளம் அமைக்கப்பட்டது. அதனால்தான் இதை மிதக்கும் நகரம் என்கின்றனர்.

அப்படி இந்த கட்டுமான அதிசயத்துக்காக மூழ்கடிக்கப்பட்டது உலகிலேயே முதன் முதலாக கட்டப்பட்ட ஜோராஸ்டர் டேங்கர் கப்பல். எண்ணெய் போக்குவரத்துக்கு நீண்டகாலம் பயன்படுத்தப்பட்டு வந்ததால் இது புகழ்பெற்ற கப்பலாக திகழ்ந்தது.

இந்த நகர உருவாக்கத்தில் 7 கப்பல்கள் பயன்படுத்தப்பட்டதால் இதை 7 கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கின்றனர். படிப்படியாக இந்த நகரம் வளர்ச்சியடைந்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்காக, உணவகங்கள், கடைகள், மருந்தகங்கள், பள்ளிக்கூடம், நூலகம், கால்பந்து விளையாட்டு மைதானம், ஹெலிபோர்ட் மற்றும் திரையரங்கமும் கட்டப்பட்டன. இந்த நகரம் சுறுசுறுப்பாக செயல்பட்ட காலத்தில் இங்கு 5,000 தொழிலாளர்கள் பணியாற்றினர். 1967 ஆம் ஆண்டு 7.6 மில்லியன் டன் உற்பத்தி செய்து இந்த தீவு சாதனை படைத்துள்ளது.

75 ஆண்டுகள் கடந்து...

இங்கு கட்டப்பட்ட சாலைகளின் நீளம் மட்டும் 300 கி.மீ. இத்தனை பெரிய நகரத்தை அமைக்க இந்த பகுதியின் நிலப்பரப்பும் சாதகமாக அமைந்தது. இங்கு கடலில் ஆழம் 20 மீட்டர் மட்டுமே.

எண்ணெய் சந்தையின் நிலையின்மையின் சோவியத்தின் வீழ்ச்சியும் இந்த நகரம் அதன் சிறப்பை இழக்க காரணமாக அமைந்தன.

உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்தும், அதன் பொலிவை முழுவதுமாக இழந்தாலும் இன்றும் இந்த நகரம் உயிருடன்தான் இருக்கிறது. அஜர்பைஜான் அரசு எண்ணெய் நிறுவனமான SOCAR-ன் கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் பாகு நகரில் நடைபெற்ற நடைபெற்ற ஐ.நாவின் 29-வது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP29) இந்த நகருக்கான எதிர்காலத் திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

Neft Daslari : Soviet-Era Oil Rig City

அங்கு போடப்பட்ட 300 கிலோமீட்டர் சாலையில் 45 கி.மி மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது. 3000 தொழிலாளர்கள், 15 நாள்கள் கடலிலும் 15 நாட்கள் கரையிலுமாக பணியாற்றுகின்றனர். மிகச் சிறிய எண்ணெய் தளங்களில் ஒன்றைப்போல செயல்பட்டு வருகிறது.

இந்த நகரம் குறித்து Oil Rocks – City Above The Sea என்ற ஆவணப்படத்தின் மூலம் இயக்குநர் மார்க் ஒல்ஃப்ஸ்பெர்கர் சிலவற்றை பதிவு செய்துள்ளார். 1990களில் இங்கு ஜேம்ஸ் பாண்ட் தொடரின் பகுதி உள்பட சில படபிடிப்புகளும் நடந்துள்ளன.

இந்த நகருக்கு ஹெலிகாப்டர் அல்லது கப்பல் மூலம்தான் சென்றடைய முடியும். இதனால் இந்த காலத்தில் யாரும் இங்கு செல்வது அல்ல. ஒரு காலத்தில் மிகப் பெரிய தொழில்நகரமாக இருந்த இடம் தற்போது கண்டுகொள்ள ஆள் இல்லாத இடமாக இருக்கிறது. இங்கு எண்ணெய் வளங்களும் தீர்ந்துவிட்டதால் இதை சுற்றுலாத்தளமாக மாற்றும் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்ற யோசனையில் இருக்கிறது அஜர்பைஜான் அரசு. இங்கு பூங்காக்கள் அமைக்கவும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் கூறியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

Tamils in Pakistan: பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் பற்றி தெரியுமா? - வியக்கவைக்கும் வரலாறு!

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானிலும் சிறு அளவில் தமிழ் மக்கள் வாழ்வது நம்மில் பலருக்கும் அதிசயமாக இருக்கும்.ஆதிதமிழன் பாகிஸ்தானிலும் வசிக்கிறான். பாகிஸ... மேலும் பார்க்க

நிறம், நடை, உடை... பூர்வகுடிகளால் கொல்லப்பட்ட ஜேம்ஸ் குக்; வரலாறு உணர்த்தும் உண்மைகள்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க