Arasan: ``அப்போதிருந்தே வடசென்னை உலகத்தைப் பற்றி சிம்புவுடன் பேசி வந்தேன்" - வெற...
Nobel Prize: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் 3 அமெரிக்கர்கள்; என்ன கண்டுபிடிப்பு தெரியுமா?
இயற்பியல் துறையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகிய மூன்று அறிவியலாளர்கள் வென்றுள்ளனர்.
மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயக்கவியல் குறித்த ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
"இந்தக் கண்டுபிடிப்பு குவாண்டம் கிரிப்டோகிராஃபி, குவாண்டம் கணினிகள் மற்றும் குவாண்டம் சென்சார்கள் உள்ளிட்ட குவாண்டம் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை வழங்கும்" என விருதை வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது.
இயற்பியலுக்காக விருது பெறும் மூவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு துறையிலும் நோபல் பரிசுக்கு 1.2 மில்லியன் டாலர் பரிசுத்தொகை ஒதுக்கப்படும். இது வெற்றியாளர்களுக்குச் சமமாகப் பிரித்தளிக்கப்படும்.
நேற்றைய தினம், உடலியல் அல்லது மருத்துவத்துக்கான பரிசு மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் எதை அழிக்க வேண்டும்/எதைக் காக்க வேண்டும் என்பதை எப்படித் தீர்மானிக்கின்றன என்பது குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு:
உலகின் புகழ்பெற்ற விருதான நோபல் பரிசு அறிவியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், அமைதி, மனித நேயம் மற்றும் சமூக நலனுக்கான பங்களிப்பைக் கௌரவிக்கவும் 1901 முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
டைனமைட்டைக் கண்டுபிடித்த ஆல்ஃபிரட் நோபல் என்ற ஸ்வீடிய தொழில்முனைவோரின் மறைவுக்குப் பிறகு அவரது விருப்பத்தின் பெயரில் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இயற்பியல்தான் நோபலில் சேர்க்கப்பட்ட முதல் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.