`NRC பயத்தில் முதியவர் விபரீத முடிவு' - மத்திய அரசை சாடும் திரிணாமுல் காங்கிரஸ்
தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்பட்டால் தான் திரும்ப வங்க தேசத்துக்கு அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் 63 வயது முதியவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியில், 1972-ம் ஆண்டு வங்க தேசத்தின் டாக்காவிலிருந்து வந்த திலீப் குமார் சஹா, கொல்கத்தாவில் வாழ்ந்து வந்தார். ரீஜண்ட் பார்க் பகுதியில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று பூட்டிய அறையில் மின் விசிறியில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள், பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து பேசிய திலீப் குமார் சஹாவின் மனைவி ஆரத்தி சஹா, ``என் கணவரை பலமுறை அழைத்தும் அவர் பதிலளிக்கவில்லை. அதன்பிறகுதான் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. சிறுவயதிலிருந்தே கொல்கத்தாவில் வசித்துவந்த என் கணவர் சமீபகாலமாக என்.ஆர்.சி குறித்து பதற்றமாக இருந்தார். அவ்வப்போது நாம் முகாமில் அடைக்கப்பட்டு மீண்டும் வங்க தேசத்துக்கே அனுப்பப்படுவோம் எனக் கூறிக்கொண்டே இருந்தார். அந்த பதற்றத்தில்தான் அவர் தற்கொலை செய்திருக்கிறார்" என்றார்.
இந்த தற்கொலை குறித்து காவல்துறை மேலும் விசாரித்து வருகிறது. இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ அருப் பிஸ்வாஸ் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நேசித்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற பயம் ஒரு மனிதனை இதைத்தான் செய்யவைக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.