Ola:‛டெலிவரி கிடைக்கல; வண்டி சரியில்ல; சர்வீஸ் ஒழுங்கா பண்ணல’-இதுவரை 10,644 புகார்கள்; பதில் என்ன?
‛‛ஓலா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் பாவம் செய்தவர்கள்; அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க!’’ என்று ஓலாவைப் பார்த்து ஸ்டாண்ட் அப் காமெடி நடிகர் குணால் கம்ரா தொடங்கி வைத்த ஏழரை, ஓலாவுக்குக் கழுத்தைச் சுற்றி அடிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
‛‛வேணும்னா எங்ககூட இறங்கி வந்து வேலை செய்யுங்க; நீங்க ஸ்டேஜில் காமெடி பண்றதைவிட அதிக சம்பளம் தர்றேன்!’’ என்று ஓலா தலைவர் பவிஷ் அகர்வாலும் பதிலுக்குப் பதில் கொடுத்தாலும், இன்னும் ஆன்லைனில் சண்டை நடந்து கொண்டேதான் இருக்கிறது. லேட்டஸ்ட்டாகக் கூட குணால் கம்ரா, ‛‛பிரேக்கிங் நியூஸ்: ஓலா ஸ்கூட்டரை வெற்றிகரமாக சர்வீஸ் செய்து கொண்டு வந்த வாடிக்கையாளர்கள், தேசியப் பாதுகாப்புத் துறையின் சார்பாக இயங்கும் AgniVeer Scheme-ன் கீழ் ரெக்ரூட் செய்யப்பட வேண்டும்!’’ என்று நக்கல் அடித்திருக்கிறார்.
இதற்கு நடுவில் சர்வீஸ் செய்யப்படாத ஏகப்பட்ட ஸ்கூட்டர்கள் நிலுவையில் இருந்ததைத் தொடர்ந்து, ஓலாவின் IPO ஷேர் மார்க்கெட்டும் சரிந்தது. கூடவே, புதுப் பிரச்னை வேறு ஓலாவுக்கு முளைத்தது.
ஓலாவில் சர்வீஸ் செய்யப்படாமல் தேங்கிக் கிடந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் பலர், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்குப் புகார் அளிக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். அப்படி செப்டம்பர் 2023-ல் தொடங்கி இந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வரை CCPA (Central Consumer Protection Authority)-வுக்கு வந்த புகார்கள் மட்டும் 10,644. இதில் 3,380-க்கும் மேற்பட்ட கம்ப்ளெய்ன்ட்கள், ஸ்கூட்டர் வாங்கியதற்குப் பிந்தைய சர்வீஸ் தொடர்பானவை மட்டுமே என்பது ஹைலைட்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை ஸ்கூட்டரை புக் செய்துவிட்டு, டெலிவரிக்காகக் காத்திருந்தவர்களின் புகார்களாம். கூடவே அரசியல்வாதிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவது மாதிரியான சர்வீஸ் அறிக்கைகள் நிறைவேற்றப்படாததும், சில ஆயிரம் புகார்களில் அடங்கும். உதாரணத்துக்கு OTA எனும் சாஃப்ட்வேர் அப்டேட் ஆகாதது போன்றவை அடங்கும்.
இதைத் தொடர்ந்து இந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி CCPA, ஓலாவுக்குக் கடுமையாக ஒரு Show Cause நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. அதிலும் ‛S1 Pro Gen 1 ஸ்கூட்டருக்கு ஏகப்பட்ட புகார்கள் வந்திருந்ததற்கு என்ன தீர்வு எடுத்திருந்தீர்கள்’ என்றும் ஓலாவிடம் கேட்டிருந்தது CCPA எனும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்.
இப்போது இதற்கு வாய் திறந்திருக்கிறார் பவிஷ் அகர்வால்.
‛‛இதுவரை யாரிடமும் இல்லாத ஒரு மெக்கானிசமும், சர்வீஸும் ஓலாவிடம் இருக்கிறது. எங்கள் வாகனங்கள் தொடர்பாக CCPA மூலம் வந்த 10,644 புகார்களையும் நாங்கள் உடனே அலசி ஆராய்ந்தோம். இதில் 99.1% புகார்கள் வாடிக்கையாளர்களின் திருப்தியின் பொருட்டு உடனே சரி செய்யப்பட்டு விட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என்று சொல்லியிருக்கிறார் பவிஷ் அகர்வால்.
ஓலா வெச்சிருக்கீங்களா? Consumer Protection Act-ன் கீழ் நீங்களும் CCPA-வுக்குப் புகார் மனு அனுப்பலாம். ஓலான்னு இல்லை; எந்த வாகனம் பற்றிய புகார்களையும் நீங்கள் https://consumerhelpline.gov.in/public/ என்கிற National Consumer Helpline வலைதளத்தில் பதிவிடலாம்.