Oscar Stories 4: `ஜோக்கருக்கு 2 மணி நேரம்தான் தூக்கம்'; இறந்த பிறகு ஆஸ்கர் வென்ற ஹீத் லெட்ஜர்
97-வது ஆஸ்கர் விருதுகள் மார்ச் மாதம் 3 -ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. உலகளவில் அங்கீகாரத்தையும் அடையாளத்தைத் தேடித் தரும் ஆஸ்கர் விருதுகளுக்கென நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அப்படி ஆஸ்கர் வரலாற்றில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்கள் குறித்துத் தொடர்ந்து கட்டுரைகளாக விகடன் தளத்தில் பார்க்கலாம்.
பிப்ரவரி 22, 2009 - 81-வது ஆஸ்கர் விருது விழா....
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கிறிஸ்டோபர் நோலனின் `தி டார்க் நைட்' படத்தின் `ஜோக்கர்' கதாபாத்திரத்திற்காக ஹீத் லெட்ஜருக்குக் கிடைத்தது. இதுதான் அவருக்கு கிடைத்த முதல் ஆஸ்கர் விருது . ஆனால், இந்த விருதைப் பெறுவதற்கு அவர் இல்லை என்கிற விஷயம் அன்று `ஜோக்கர்' கதாபாத்திரத்தின் ரசிகர்கள் உட்பட பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதற்கு முன் 2005-ம் ஆண்டு `ப்ரோக்பேக் மவுன்டெயின்' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு அவர் நாமினேட் செய்யப்பட்டிருந்தார்.

இத்திரைப்படம் வெளியான சமயத்தில் ஹீத் லெட்ஜருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தது. உறுதியாக, ஆஸ்கர் விருதை அவர் வென்றுவிடுவார் என ஹாலிவுட்டில் அப்போது கணிக்கப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் அந்த விருது இவர் கைகளிலிருந்து நழுவியது.
பொதுவாக, ஒரு கதாபாத்திரமாக மாற்றமடைவதற்கு பல நடிகர்கள் மேற்கொள்ளும் கடினங்கள் குறித்து பல பேட்டிகளில் கூறியிருப்பார்கள். இப்படியான விஷயங்களெல்லாம் நடிகராக துடிப்புடன் இருக்கும் பலருக்கு ஊக்கத்தைக் கொடுத்திருக்கும். ஆனால், ஹீத் லெட்ஜர் ஒரு கதாபாத்திரமாக மாறுவதற்கு பெரும் சிரமங்களை மேற்கொள்வார். குறிப்பாக `ஜோக்கர்' கதாபாத்திரத்திற்காக அவர் பெரும் சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறார். `ஜோக்கர்' கதாபாத்திரத்திற்காக அவர் தயாரான முறை குறித்துப் பேட்டிகளில் சொன்ன விஷயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

அப்படியே ஜோக்கர் கதாபாத்திரத்தைப் போலவே சிரிப்பதற்காக, அப்படியே `ஜோக்கர்' போல தனது பாவணையை மாற்றிக் கொள்வதற்காக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பெரியளவில் மெனக்கெட்டிருக்கிறார் ஹீத் லெட்ஜர். இந்த விஷயமே அவருக்கு மன அழுதத்தையும், தூக்கமின்மையையும் உருவாக்கியிருக்கிறது. ``உளவியல் ரீதியாக அந்தக் கதாபாத்திரத்திற்கு தயாரான முறை எனக்குத் தூக்கமின்மையை ஏற்படுத்தியது.` தி டார்க் படத்தில் நடிக்கும்போது' தினமும் 2 மணி நேரம்தான் உறங்குவேன்'' என அப்போது அவர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் அவருடைய பர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்னைகள் , தூக்கமின்மை போன்ற விஷயங்கள் இவரை மன அழுதத்தின் ஆழத்திற்குக் கொண்டு சென்றது. இப்படியான காரணங்களுக்காக அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டு அவை ஓவர்டோசேஜாகி உயிரிழந்தார். `தி டார்க் நைட்' படம் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி வெளியானது.

ஆனால், இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே ( ஜனவரி 22 2008) ஹீத் லெட்ஜர் உயிரிழந்துவிட்டார். படம் வெளியானப் பிறகு இவருக்கு பெருமளவில் பாராட்டுகள் கிடைத்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் அங்கீகாரமும் கிடைத்தது. சூப்பர் ஹீரோ படத்திற்காக ஆஸ்கர் வெல்லும் முதல் நடிகர் என்ற பெருமையும் இவருக்கு சொந்தமாகியது. இதே 81-வது ஆஸ்கர் விருது விழாவில் ஹீத் லெட்ஜருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவர் சார்பாக அவரின் குடும்பத்தினர் ஆஸ்கர் விருதைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் அவரின் தந்தை கிம் லெட்ஜர், `` ஹீத் லெட்ஜர் அன்பும் கருணையும் நிறைந்தவர். அவர் நம் வாழ்க்கைக்கு ஊக்கத்தைச் சேர்த்திருக்கிறார்!'' என்றார்.
முதலில் `பேட்மேன் பிகின்ஸ்' படத்தின் `பேட்மேன்' கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஹீத் லெட்ஜரிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் நோலன். ஆனால், முதலில் சூப்பர் ஹீரோ படங்களில் நடிப்பதற்கு விரும்பவில்லை என ஹீத் லெட்ஜர் கூறியிருக்கிறார். `பேட்பேன் பிகின்ஸ்' படத்தின் ரிலீஸூக்குப் பிறகு அப்படத்தைக் கண்டு ஆச்சரிப்பட்டு நோலனிடம் இரண்டாம் பாகத்தில் வரும் `ஜோக்கர்' கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன்' என தெரிவித்திருக்கிறார் ஹீத் லெட்ஜர்.

அப்படிதான் ஜோக்கர் கதாபாத்திரம் ஹீத் லெட்ஜருக்குக் கிடைத்தது. இப்படத்தை அவர் கமிட் செய்த பிறகு அவர் மீது விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது. ஆனால், ரிலீஸுக்குப் பிறகு அத்தனை பேரும் ஹீத் லெட்ஜருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். விமர்சனங்களை சந்தித்த அவர் பாராட்டுகளைப் பெறும்போது உயிருடன் இல்லை.
- கதைகள் தொடரும்