Oscar Stories 3: `மக்களுக்காக படம்' - 26 வருடக் காத்திருப்புக்குப் பிறகு நோலனுக்குக் கிடைத்த ஆஸ்கர்
97-வது ஆஸ்கர் விருதுகள் மார்ச் மாதம் 3 -ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. உலகளவில் அங்கீகாரத்தையும் அடையாளத்தைத் தேடித் தரும் ஆஸ்கர் விருதுகளுக்கென நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கின்றன. அப்படி ஆஸ்கர் வரலாற்றில் நிகழ்ந்த சில முக்கியமான சம்பவங்கள் குறித்துத் தொடர்ந்து கட்டுரைகளாக விகடன் தளத்தில் பார்க்கலாம்.
பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு கிறிஸ்டோபர் நோலனின் கைகளுக்குக் கடந்தாண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது. அவர் வெல்லும் முதல் ஆஸ்கர் விருது இதுதான். அணுகுண்டின் தந்தை என்றழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கையை மையப்படுத்தி `ஓப்பன்ஹைமர்' படத்தை எடுத்திருந்தார் நோலன். நோலனுக்கும் அவருடைய படைப்புகளுக்கும் ஹாலிவுட்டைத் தாண்டி இந்தியாவிலும் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் நோலனின் `இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம் உலகளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தியாவிலும் ரீ ரிலீஸில் அதிரடி காட்டியது `இன்டர்ஸ்டெல்லார்'. இப்படி நோலனின் படைப்புகள் அத்தனையும் இந்திய சினிமா ரசிகர்களிடையே முக்கியமானதொரு பங்கு வகித்திருக்கிறது. சாத்தியமற்ற விஷயங்களை சாத்தியப்படுத்திக் காட்டுவதற்காகவும், அவர் பயன்படுத்தும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திற்காகவும் ஹாலிவுட்டில் மட்டுமின்றி அனைத்துப் பக்கங்களிலும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
25 ஆண்டுகளுக்கு மேல் ஹாலிவுட்டில் நோலன் கொடிகட்டிப் பறந்தாலும் அவர் கடந்தாண்டுதான் தன்னுடைய முதல் ஆஸ்கர் விருதை வென்றார். அதுவும் எட்டாவது நாமினேஷனில்தான் அவருக்கு இந்த ஆஸ்கர் விருது சொந்தமாகியிருக்கிறது.
`உலகமே நோலனின் படைப்புகளை வியந்து பார்க்கிறது. இத்தனை ஆண்டுகள் ஹாலிவுட்டின் உச்சத்தின் இருந்தாலும் அவருக்கு ஆஸ்கர் அங்கீகாரம் கிடைக்கவில்லையே' என நோலனைவிட அவரின் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது அந்த ஏக்கத்தைப் போக்கியது. நோலனையும் அவரின் படைப்புகளையும் தாண்டி அவரின் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் முன்பு ஆஸ்கர் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

மொத்தமாக நோலன் படங்களில் பணியாற்றிய 18 நபர்களுக்கு இதுவரை ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. ஆனால், `மொமன்ட்டோ', `இன்ஸப்ஷன்', `டன்கிரிக்' போன்ற படைப்புகளுக்காக சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம் போன்ற பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் அவரின் கைகளுக்கு இந்த ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.
பொதுவாக, ஆஸ்கர் விருது குழு `Traditional drama' எனச் சொல்லப்படுகிற கதைகளத்திற்கும், கதாபாத்திரங்களை மையமாக வைத்து கதை சொல்லும் படைப்புகளுக்கும்தான் கவனம் செலுத்தும். நோலன் படைப்புகள் அறிவியல் சார்ந்து ஆழமாக இருந்தாலும் ஆஸ்கர் விருது கிடைக்காததற்கு இதுவும் காரணமாக சொல்லப்பட்டது. 2016-க்குப் பிறகு ஆஸ்கரின் இந்த நடைமுறை கொஞ்சம் மாற்றமடைந்து நல்ல கண்டென்ட்களை மையமாக வைத்துப் படைப்புகளைக் கொடுக்கும் இயக்குநர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆஸ்கர் விருதுக் குழு திட்டமிட்டிருக்கிறது. 2016-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்கர் வென்ற சயின்ஸ் பிக்ஷன், காமெடி திரைப்படங்களை அதற்கு சான்றுகளாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நோலன் என்றும் சோர்ந்தது கிடையாது. படைப்பாளர்கள் பலரும் நமக்கு இந்த உயரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். ஆனால், நோலன் இப்படியான விருதுகளை என்றும் விரும்பியதில்லை. `` விருதுகளை வெல்வது என்பது ஃபிலிம் மேக்கிங்கின் பிரதான குறிக்கோளாக இருக்கக்கூடாது. நான் மக்களுக்காக திரைப்படம் எடுக்கிறேன். விருதுகளுக்காக அல்ல'' என்பதை பேட்டிகளில் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். இப்படி வருத்தம் கொள்ளாமல் நோலன் விருதுகள் குறித்து சாதரணமாகச் சொல்லும் விஷயங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கக்கூடும்.
- கதைகள் தொடரும்