Penguin Divorce: பென்குயின் விவாகரத்து... `காலத்தோடு ஓடவேண்டிய ஓட்டப்பந்தயம் இது' | Explainer
குள்ளமான உருவத்தில், இரண்டு சிறிய கால்களை முன்னும்பின்னும் அடியெடுத்து வைத்து, அந்த அடிக்கு ஏற்றவாறு தலையை இங்கும் அங்கும் அசைத்து, இரண்டு இறக்கைகளையும் விரித்தவாரு நடக்கும் பென்குயின்களை யாருக்குத்தான் பிடிக்காது. இன்றளவும் காதலுக்கு உதாரணமாக பல இடங்களில் பென்குயினின் பெயர்தான் நிலைத்து நிற்கிறது. பென்குயின் ஒரு இணையைத் தேர்வு செய்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அந்த இணையுடன்தான் வாழ்ந்து முடிக்கும் என்பதுதான் நீண்டகால ஆய்வுகளின் முடிவாக நம்பப்பட்டது. ஆனால் தற்போது `பென்குயின்களும் தங்களுக்குள் விவாகரத்து செய்துகொள்கின்றன' என வேல்ஸ் ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் பென்குயின் நிபுணர் ரோரி வில்சன் குறிப்பிடுகிறார். இந்த விவாகரத்து ஏன் நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள பென்குயின் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
பறவை இனத்தைச் சேர்ந்த பென்குயின் ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை, அண்டார்டிகா, கலபகோஸ் தீவுகள், தெற்கு ஜார்ஜியா, போவெட் தீவு, ஒடாகோ தீவு என பூமிப்பந்தின் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள ஒவ்வொரு தீவிலும் வாழ்கின்றன. அசுர வேகத்தில் தாக்கும் விலங்குகள் இல்லாத, மனிதர்கள் வேட்டையாட முடியாத பனிப் பிரதேசங்களில்தான் இவை வாழ்கின்றன. உலகில் 18 வகையான பென்குயின் இனங்கள் வாழ்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவை...
ஆப்டெனோடைட்ஸ் ஃபோர்ஸ்டெரி
ஆப்டெனோடைட்ஸ் படகோனிகா
பைகோசெலிஸ் அடேலியே
பைகோசெலிஸ் பப்புவா
பைகோசெலிஸ் அண்டார்டிகஸ்
யூடிப்டஸ் மோஸ்லேயி
யூடிப்ட்ஸ் கிரிசோகாம்
யூடிப்டஸ் கிரிசோலோபஸ்
யூடிப்டஸ் ஷ்லெகெலி
யூடிப்டெஸ் பாச்சிரைஞ்சஸ்
யூடிப்டெஸ் ஸ்க்லேட்டரி
யூடிப்டஸ் ரோபஸ்டஸ்
மெகாடிப்ட்ஸ் எதிர்முனைகள்
யூடிப்டுலா மைனர்
ஸ்பெனிஸ்கஸ் மெகெல்லானிகஸ்
ஸ்பெனிஸ்கஸ் ஹம்போல்டி
ஸ்பெனிஸ்கஸ் டெமர்சஸ்
ஸ்பெனிஸ்கஸ் மெண்டிகுலஸ்
பென்குயின்கள் வாழும் பகுதியில் உயிர்பிழைக்கவே கடுமையாகப் போராட வேண்டும். கோடை காலத்தில் உருகும் பனி, குளிர்காலத்தில் வீசும் பனிப் புயல், கால நிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் புயல் என எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வாழ்க்கையை தகவமைத்துக்கொள்வதில் பென்குயின்கள் சாதுர்யமானவை.
பென்குயின் கூட்டம், ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கும் பனிக்காலத்தில் கடற்கரையிலிருந்து பனிப்பாறைகள் இருக்கும் நடுப்பகுதிக்கு 50 முதல் 120 கி.மீ நடந்து செல்லும். அங்குதான் பாடல், ஆடல் மூலம் தன் இணையைத் தேர்வு செய்யும். அதன் உடலமைப்பும், இனப்பெருக்கமும் ஒவ்வோர் இனத்துக்கு ஏற்றவாறு மாறுபடும். பெரும்பாலான இனங்கள் வருடத்துக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. ஆப்பிரிக்க இனப் பென்குயின் ஸ்பீனிஸ்கஸ் டெமர்சஸ் வருடத்துக்கு இரண்டு முறையும், கிங் பென்குயின் மூன்று வருடங்களுக்கு ஒருமுறையும் இனப்பெருக்கம் செய்கின்றன.
இந்த இனப்பெருக்கத்தில் ஆண் - பெண் என இரு பென்குயின்களும் சம அளவிலான பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறது. ஒரிரு மாதத்தில் பென்குயின் இடும் ஒரு முட்டையை அடுத்த இரண்டு மாதங்களுக்கு கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு ஆண் பென்குயினிடம் ஒப்படைக்கப்படும். அந்த முட்டையை காலில் வைத்துக்கொண்டு, அதன் முன்பகுதியில் இருக்கும் இறகுகள் இல்லாத தோல் பகுதியின் மூலம் மறைத்து கதகதப்பூட்டி ஆடாமல் அசையாமல் நிற்கும். சில நேரங்களில் கூடுதல் பனியின் காரணமாக அடைக்காக்கும் நாளின் எண்ணிக்கை கூடுவதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது. அந்த நாள்கள் முழுவதும் ஆண் பென்குயின் உணவின்றி தன் உடலில் இருக்கும் கொழுப்புச்சத்தை உணவாக்கிக்கொள்ளும்.
அந்தக் காலகட்டத்தில் பருந்துகள், கடல் கழுகுகள், கடல் சிறுத்தைகள், ஓர்க்கா திமிங்கலம், கடல் சிங்கங்கள், கோனா பல்லி, 200 கிமீ வேகத்தில் வீசும் பனிப் புயல் உள்ளிட்ட ஆபத்திலிருந்து தன்னையும், தன் முட்டையையும் காப்பாற்றுவதே தந்தை பென்குயினின் மிக முக்கியக் கடமையாக மாறிவிடும். முட்டையை அடைகாக்கும் ஆண் பென்குயின்கள் பனிப்புயலின்போது சுழற்சி முறையில் கூட்டமாக நின்று பனிப்புயலின் தாக்குதலிலிருந்து தப்பிக்கும். முட்டையிட்டப் பிறகு இரைத் தேடச் செல்லும் பெண் பென்குயின் குஞ்சுகளுக்கும் சேர்த்து உணவை சேகரித்து வரும். அதற்காக கடலில் 60 முதல் 80 கிமீ வரை கிங் பெண் பென்குயின் பயணிக்கும். 20 நிமிடங்கள் வரை மூச்சடக்கி, கடலின் 500 மீட்டர் ஆழத்தைத் தாண்டி இரைத் தேடும். பெண் பென்குயின் வந்தபிறகே முட்டையை ஒப்படைத்துவிட்டு ஆண் பென்குயின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்.
ஒருவேளை பென்குயினின் எதிரிகளுக்கு அந்த முட்டை இரையாகிவிட்டால், அந்த பென்குயின்களுக்கு அடுத்த ஒருவருடத்துக்கு எந்த வேலையும் இருக்காது. அதனால், முட்டைகளை அடைகாக்கும் மற்றப் பென்குயின்களிடமிருந்து அந்த முட்டையை சண்டையிட்டு பறிக்க முயற்சிக்கும். சில நேரங்களில் பெற்றோர் பென்குயின்கள் அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அநாதையான அந்தப் பென்குயின் குஞ்சுகளை அரவணைத்து, வேலையில்லா பென்குயின்கள் வளர்க்கத் தொடங்கும். சில நேரங்களில் மற்ற பறவைகளின் குஞ்சுகளைக்கூட பென்குயின் வளர்த்திருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
வெற்றிகரமாக அனைத்து ஆபத்துகளையும் கடந்து, முட்டை அடைகாக்கப்பட்டு குஞ்சு வெளியானவுடன் ஒருமாதத்துக்கு பெற்றோர் பென்குயின்களில் ஒன்று அந்தக் குஞ்சை கூட்டில் வைத்து பராமரித்து பாதுகாத்துக்கொள்ளும். தன் உடலில் சுரக்கும் ஒரு பால் போன்ற திரவத்தால் குஞ்சுகளுக்குத் தந்தை பென்குயின் உணவூட்டும். அதில் இருக்கும் புரதச்சத்து ஏழு நாட்கள் வரை குஞ்சுகளின் பசியைத் தணிக்கும். தாய்ப்பறவை வந்தவுடன் ஆண்பறவை தயக்கத்துடன் தாய்ப்பறவையிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு உணவை வேட்டையாட கடற்கரையை நோக்கி கிளம்பும் ஆண் பென்குயின்.
இந்தக் காலகட்டத்தில்தான் குஞ்சு பென்குயினின் உடலில் சிறகுகள் முளைக்கத் தொடங்கும். இப்படி 45 நாள்களுக்கு தாய் - தந்தை பென்குயின்கள் மாறி மாறி தன் பிள்ளையைப் பாதுகாக்கும். அதற்குப் பிறகு பெற்றோர் பென்குயின்கள் அந்தக் குஞ்சு பென்குயினை அப்படியே விட்டுவிட்டு இரைத்தேடச் சென்றுவிடும். தனிமையில் விடப்பட்ட பென்குயின் குஞ்சு அங்கிருக்கும் மற்ற பென்குயின்களிடம் அடிப்பட்டு, கொத்துவாங்கி தனியே புறப்படும். அதே போன்று தனிமையில் விடப்பட்ட மற்ற பென்குயின் குஞ்சுகளுடன் சேர்ந்துகொண்டு தன்னை தற்காத்துக்கொள்ளும். பெற்றோர் பென்குயின்கள் வரும் வரை பென்குயின் குஞ்சுகள் பெற்றோருக்காக காத்திருக்கும். இரைத் தேடியப் பிறகு வரும் பென்குயின்கள் தங்கள் குஞ்சுகளின் குரலை வைத்து அடையாளம் கண்டு, அதற்கு உணவை ஊட்டிவிடும்.
இதற்கிடையில் அந்தக் குஞ்சுகளுக்கு உடலில் பழுப்பு நிற இறக்கைகள் உதிரத் தொடங்கும். குஞ்சுகளும் அதை உதிர்த்துவிடுவதில் தீவிரமாக ஈடுபடும். டிசம்பர் - ஜனவரி மாதங்களில் அந்தக் குஞ்சு பென்குயின் தனியே இரைத்தேடும் பக்குவத்தை அடையும். அதன் பிறகு அடுத்த இணையைத் தேடி இனப்பெருக்கம் செய்யத் தயாராகும். இந்த தம்பதிப் பென்குயின்களுக்கு மத்தியில் இருக்கும் பிணைப்பும், காதலும் ரசனைக்குறியது. தன் விருப்பமான இணை இரைத் தேடிவிட்டு வந்தவுடன் ஆண் பென்குயின் சப்தமிட்டுக்கொண்டே நடனமாடும். இரண்டும் கூடுமானவரை தங்களின் பொறுப்புகளை சமமாக பங்கிட்டுக் கொள்கின்றன. ஆனால், காலநிலை மாற்றம், கடல் நீர்மட்ட உயர்வு, பென்குயின்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுவது போன்றவை பென்குயின் அழிவுக்கு பாதை அமைத்திருக்கின்றன.
இந்த நிலையில்தான், பென்குயின்கள் விவாகரத்து செய்துவருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவின் பிலிப் தீவு பென்குயின்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் ஒன்று. இங்கு, அதிகரித்து வரும் கடல் வெப்பநிலையின் விளைவுகள் குறித்த தரவுகளை சேகரிக்க, ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பெங்குயின்களை கடந்த 13 ஆண்டுகளாக கண்காணித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில், 1000 ஜோடி பென்குயின்களில் 250 ஜோடி பென்குயின்கள் தங்கள் இணையை பிரிந்து புதிய இணையத் தேடிக்கொள்கின்றன. இந்த ஆய்வை வழிநடத்திய ஆராய்ச்சியாளர் டாக்டர் ரிச்சர்ட் ரெய்னா, ``இதற்கான காரணத்தை ஆராயும் போது, இனப்பெருக்கத்துக்கு உதவாத, அல்லது வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யாத பென்குயின்களை அவற்றின் இணை பென்குயின் பிரிந்து, வேறொரு இணையைத் தேடிக் கொள்கிறது." என்றார்.
பென்குயின்களிடம் பசி தாங்கும் சக்தி, நெடுந்தூரம் நடக்கும் ஆற்றல், குழந்தைகளுக்கு உணவு தருவது, தாயும் தந்தையும் சரிசமமாகப் பங்களித்துக் குஞ்சுகளை வளர்ப்பது என்று எத்தனையோ தகவமைப்புகள் உண்டு. இத்தனை முன்னேற்பாடுகளோடு குஞ்சுகள் காக்கப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. கிடைக்கும் உணவிலும் பாதுகாப்பிலும் சுணக்கம் ஏற்பட்டால் குஞ்சுகளின் வளர்ச்சி தாமதமாகும். மெதுவாக வளரும் குஞ்சுகள், கோடை காலத்தில் பனி உருகும்போது தனியாகப் பிழைக்கத் தெரியாமல் மாட்டிக்கொள்ளும்! ஆகவே காலத்தோடு ஓடவேண்டிய ஓட்டப்பந்தயம் இது. பின்தங்கிவிட்டால் அடுத்த தலைமுறைக்குத்தான் ஆபத்து.