Priyansh Arya : 'டெல்லி ப்ரீமியர் லீக் டு ஐ.பி.எல் ஹீரோ!' - யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?
சென்னை ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார் பஞ்சாபின் பிரியான்ஷ் ஆர்யா. வெறும் 39 பந்துகளில் சதமடித்து சென்னை வீரர்களை மிரள வைத்திருக்கிறார் இந்த 24 வயதே ஆன இளைஞர்.

'பஞ்சாபின் திட்டம்!'
சென்னை அணி கடந்த 6 சீசன்களாக 180 க்கும் அதிகமான டார்கெட்டை சேஸ் செய்ததே இல்லை. அதை மனதில் வைத்துதான் ஸ்ரேயாஷ் ஐயர் டாஸை வென்று முதலில் பேட்டிங்கை எடுத்தார். 180+ ஸ்கோரை எட்டிவிட்டால் சிஎஸ்கேவை மடக்கிவிடலாம் என்பதுதான் அவரின் திட்டம். ஆனால், போட்டி தொடங்கியவுடனே ட்விஸ்ட் நடந்தது.
'காப்பாற்றிய பிரியான்ஷ்!'
கலீல் அஹமது, முகேஷ் சௌத்ரி, அஷ்வின் என சென்னையின் பௌலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்துக்கொண்டே இருந்தனர். பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஷ் ஐயர், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் என ஒரு முனையில் விக்கெட் விழுந்துகொண்டே இருந்தது. ஆனால், இன்னொரு முனையிலிருந்து சென்னையின் பௌலர்களை விழி பிதுங்க வைக்கும் வகையில் பிரியான்ஷ் அட்டாக் செய்துகொண்டே இருந்தார். கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டுதான் தொடங்கினார்.

'அட்டாக் மோடில் பிரியான்ஷ்!'
சொல்லப்போனால் முதல் பந்தே சிக்சர்தான். முகேஷ் சௌத்ரியின் ஓவரிலும் பவுண்டரியையும் சிக்சரையும் அடித்துக் கொண்டே இருந்தார். இவரை கட்டுப்படுத்தவே அஷ்வினை அழைத்து வந்தார்கள். அஷ்வினின் முதல் ஓவரில் 21 ரன்கள். பிரியான்ஷ் மட்டும் ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்திருந்தார். அஷ்வினையும் விட்டு வைக்கவில்லை. 12 வது ஓவரிலும் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். நடப்பு சீசனில் சென்னையின் சிறந்த பௌலரான நூர் அஹமதுவுக்கு எதிராகவும் அட்டாக் மோட்தான்.
பதிரனாவின் ஓவரில் மட்டும் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை பறக்கவிட்டார். 39 பந்துகளிலேயே சதத்தை எட்டிவிட்டார். 170 ரன்களுக்குள் பஞ்சாபை கட்டுப்படுத்தி விடலாம் என நினைத்த சென்னை ரசிகர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டார். 103 ரன்களில் நூர் அஹமதுவின் பந்தில் இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயன்று லாங் ஆனில் கேட்ச் ஆனார். மிரட்டலான இன்னிங்ஸ். குறிப்பாக, சென்னை அணியின் நம்பிக்கையை உடைத்துவிட்ட இன்னிங்ஸ். ஸ்ரேயாஷின் எண்ணத்தை நிறைவேற்றிய இன்னிங்ஸ்.

'பிரியான்ஷின் பின்னணி!'
பிரியான்ஷூக்கு 24 வயதுதான் ஆகிறது. டெல்லியை சேர்ந்தவர். தமிழ்நாடு ப்ரீமியர் லீகை போல அங்கே நடக்கும் டெல்லி ப்ரீமியர் லீகில் ஒரு போட்டியில் ஓவரின் 6 பந்துகளையும் சிக்சராக மாற்றி அசரவைத்தார். 2024 டெல்லி ப்ரீமியர் லீகில் 608 ரன்களை அடித்து அந்தத் தொடரின் அதிக ரன்களை அடித்த வீரராக உருவெடுத்திருந்தார். அதேமாதிரி, சையது முஷ்டாக் அலி தொடரிலும் டெல்லி அணியின் அதிக ரன்களை அடித்த வீரராக ஒரு சீசனில் இருந்திருக்கிறார். இதனால்தான் அவரை ஏலத்தில் போட்டி போட்டு 3.8 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
நடப்பு சீசன்களை இளம் வீரர்களுக்கான சீசன் எனலாம். அந்த அளவுக்கு இளம் வீரர்கள் அடுத்தடுத்து சாதித்து வருகின்றனர். பிரியான்ஷூம் இந்த இன்னிங்ஸின் மூலம் பஞ்சாபின் தவிர்க்க முடியாத வீரராக மாறியிருக்கிறார்.