Rain Alert: `நவம்பர் 25, 26 தேதிகளில் கனமழை' - விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட அன்பில் மகேஸ்!
வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை, அடை மழை, கன மழை என பெய்து வருகிறது.
கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என் வானிலை ஆய்வு மையம் முன்பே தெரிவித்திருந்தது. அதற்கேற்ப கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், வானிலை ஆய்வு மையத்தின் தினசரி அறிவிப்பிற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகிறது. அவ்வகையில் தற்போது தமிழகத்தில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 23ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மழை தொடரும் என்றும் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரித்திருக்கிறது. எந்ததெந்த மாவட்டங்களில் எப்படியான மழை இருக்கும் என்பதை வானிலை ஆய்வு மையம் இன்னும் சில தினங்களில் விரிவாகத் தெரிவிக்கும்.
இந்நிலையில் மழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடப்படும் விடுமுறை குறித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், "காலையில் திடீரென மழைக்கு விடுமுறை விடுவதால் மாணவர்கள் பள்ளி வந்து பாதியிலியே வீடு திரும்பும் நிலைமை ஏற்படுகிறது. மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் முதல் நாள் இரவே விடுமுறை அறிவிக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்.
ஆனால், விடுமுறை அளித்தப் பிறகு அன்று மழை நிலவரம் மாறிவிடுகிறது. அதனால், மழை விடுமுறை தொடர்பான முடிவை மாவட்ட ஆட்சியர்கள் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் எடுப்பார்கள். இன்னும் கூடுதலாக அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கு அனுமதியையும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சூழலுக்கேற்ப வழங்குவதாகக் கூறியிருக்கின்றனர். மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை குறித்த முடிவை எடுப்பார்கள். மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வண்ணம் மழை விடுமுறைகள் அறிவிக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.