Rashmika: விமர்சிக்கப்பட்ட புஷ்பா-2 நடனம்... "முதலில் பயமாக இருந்தது; ஆனால்..." - ரஷ்மிகா பதில்
புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி இந்தியளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில், பேசப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ரஷ்மிகா மந்தனா நடித்த ஶ்ரீவள்ளி கதாபாத்திரம். அதற்குப் பாராட்டப்பட்ட ரஷ்மிகா, அதேநேரம் `வந்துச்சே பீலிங்கு" பாடலின் நடனங்களுக்காகவும், உடல் அசைவுகளுக்காகவும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
இது தொடர்பாகத் தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "புஷ்பா படம் வெளியீட்டிற்குச் சில நாள்களுக்கு முன்புதான் அந்தப் பாடல் படமாக்கப்பட்டது. ஐந்து நாளில் அந்தப் பாடல் எடுத்து முடிக்கப்பட்டது.
அந்தப் பாடலின் படப்பிடிப்பின்போது அல்லு அர்ஜுன் மீது ஏறி நின்று நடனமாடும் காட்சி இருக்கும். அதற்குப் பயம் காரணமாகச் சங்கடமாக உணர்ந்தேன். 'இதை எப்படிச் செய்யப் போகிறேன்?' என்ற எண்ணம் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், இந்தப் பாடல் படத்துக்கு அவசியம் என்பதையும் புரிந்துகொண்டேன். எனது இயக்குநர் மற்றும் அல்லு அர்ஜுன் சார் மீது நம்பிக்கை வைத்து நடித்தேன். ஒரு நடிகையாக, படத்தில் எனது இயக்குநரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதே தனது பாத்திரம்.
எனது வேலையைச் செய்யவே வந்திருக்கிறேன். என் இயக்குநர் என்னைச் சிறப்பு எனப் பாராட்ட வேண்டும். அதற்காகத்தான் நான் வேலை செய்கிறேன். அதுதான் எனக்கு முக்கியமானது. அதுதான் ரசிகர்களையும் மகிழ்விக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
புஷ்பா 2-வைத் தொடர்ந்து, ரஷ்மிகா நடிப்பில் ‘தி கேர்ள்பிரண்ட்’, ‘சாவா’, ‘சிக்கந்தர்’, ‘குபேரா’ ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...