ஆபரேஷன் சிந்தூர்! வெற்றி நமது எதிர்பார்ப்பல்ல; அதுவே வழக்கம் - ராஜ்நாத் சிங்
Robo Shankar: `திருவிழா மேடை முதல் வெள்ளித் திரை வரை' - மாபெரும் கலைஞன் கடந்து வந்த பாதை!
நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு மஞ்சள் காமாலை (Jaundice) நோய் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த இவர் உடல்நலக் குறைவால், நேற்று முன்தினம் சென்னையில் உள்ள பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று (செப். 18) இரவு உயிரிழந்தார்.
யார் இந்த ரோபோ சங்கர்:
அன்றாடம் அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களை ஆசுவாசப்படுத்துவதில் நகைச்சுவைக்கு பெரும் பங்குண்டு. அப்படித்தான் பழம்பெரும் நடிகர்கள் நாகேஷ், மனோரமா தொடங்கி யோகி பாபு வரை திரையில் நகைச்சுவை நடிகர்கள் என தனி அங்கீகாரமே கொடுத்திருக்கிறது தமிழ்ச் சமூகம்.
அந்த நகைச்சுவையை டிவி நிகழ்ச்சிகள் மூலம் வீட்டு வரவேற்பு அறைக்கு கொண்டு வந்த நிகழ்ச்சிகளில் முக்கியமானது 'அசத்தப் போவது யாரு' எனும் நகைச்சுவை நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியின் மூலம்தான் நடிகர் மணிகண்டன், மதுரை முத்து, ஈரோடு மகேஷ், ரோபோ சங்கர் போன்ற கலைஞர்களுக்கு வெளிச்சம் கிடைத்தது எனக் கூறலாம்.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சங்கர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
அங்கீகாரத் தேடல்
பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரி உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொண்ட சங்கர், சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று தனக்கான அங்கீகாரத்தைத் தேடிவந்தார்.
அவருக்குத் தன் உடலின் மீது அலாதிப் பிரியம் இருந்தது. அதை மெருகேற்றி மேடையில் பயன்படுத்தும் திறன்படைத்த அசத்தல் கலைஞர் சங்கர்.
இளமைக் காலத்தில் மதுரையில் நடைபெற்ற ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று 'மிஸ்டர் மதுரை', 'மிஸ்டர் தமிழ்நாடு' போன்ற பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.
ரோபோ சங்கர்: பெயர்க் காரணம்
கட்டுமஸ்தான உடலில் வெள்ளை நிற சாயம் பூசிக் கொண்டு ரோபோ போல நடனமாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
அந்த நடனம்தான் அவருக்கான அடையாளமாக ரோபோ என்ற இணைப் பெயரைத் தந்தது. அதைத் தொடர்ந்து தான் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் வலம் வந்தார்.

தொடர்ந்து விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி ரோபோ சங்கர் மட்டுமல்லாமல், இப்போது திரையில் வலம் வரும் பல கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
பின்னர் அதே விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ‘அது இது எது’ நிகழ்ச்சியில் ‘சிரிச்சா போச்சு’ என்ற சுற்றில் தொடர்ந்து ரோபோ சங்கரின் நகைச்சுவை பெரும் வரவேற்பைப் பெற்றது.
மிமிக்ரி கலைஞன்
குறிப்பாக விஜயகாந்த், எம்ஜிஆர், கமல்ஹாசன் போன்றோரின் உடல்மொழியுடன் கூடிய மிமிக்ரி அவருக்கான புகழை அடைய பெரும் துணை புரிந்தது.
தொடர்ந்து சில படங்களில் தலைகாட்டி வந்தாலும் அவருக்கான நடிகர் என்ற அங்கீகாரம் கிடைக்காமலேயே இருந்தது.
அதன் பிறகு, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில் ‘சவுண்டு சங்கர்’, ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் ‘மட்டை ரவி’ போன்ற கேரக்டர்களில் அவரின் நடிப்பு, தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்திருப்பார்.
அதில் அவர் செய்த சேட்டைகள், பாடி லாங்குவேஜ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், ரோபோ சங்கருக்குப் பெரும் வெளிச்சமாக அமைந்தது விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம்.
பிரபல நகைச்சுவை
இந்தப் படத்தில் அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகின. குறிப்பாக ‘அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்’ என்ற வசனத்தைத் திரும்பத் திரும்பப் பேசும் காட்சிக்குச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

அதன் பிறகுதான் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, ‘ஹீரோ’ விஷாலின் ‘இரும்புத்திரை’, ‘மாரி 2’, அஜித்தின் ‘விஸ்வாசம்’, விஜய்யின் 'புலி', சிலம்பரசனின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது இருப்பைப் பதிவு செய்தார்.
ரோபோ சங்கரின் கடைசி நிகழ்ச்சி
இந்த நிலையில்தான் அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்டார். இறுதியாக இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் தமிழ்நாடு அரசின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் முதல்வர், ரஜினி, கமல் ஆகியோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த நிலையில்தான், திடீரென உடல் நலம் தேறியவர், நேற்று மாலை உயிரிழந்தார்.
46 வயதே ஆன ரோபோ சங்கரின் மறைவு, திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவர் மிகவும் நேசித்த கமல்ஹாசன் முதல் ஆளாக தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, பாமக தலைவர் அன்புமணி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...