விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்
பாகிஸ்தான் சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்! சாம் பித்ரோடா
பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போன்று உணர்ந்ததாக காங்கிரஸ் அயலக அணித் தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு கொள்கை, வாக்குத் திருட்டு, அதானி குழும விவகாரத்தில் செபியின் அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஐஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்க்காணலில் சாம் பித்ரோடா பதிலளித்துள்ளார்.
இந்த நேர்காணலில் சாம் பித்ரோடா பேசியதாவது:
“நமது வெளியுறவுக் கொள்கை முதலில் அண்டை நாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்த முடியுமா? என்பதைப் பார்க்க வேண்டும்.
நான் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளேன், அங்கு சொந்த வீட்டில் இருப்பதைப் போன்று உணர்ந்துள்ளேன். இதேபோன்று, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றபோதும் உணர்ந்துள்ளேன். வெளிநாட்டில் இருப்பது போன்று உணர்ந்ததில்லை.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மோடி மாற்றிவிட்டார் எனக் கூறுவதெல்லாம் பாஜகவின் போலி பிரசாரம். மோடி விஸ்வ குருவெல்லாம் கிடையாது. எனது அண்டை வீட்டாரைக் கேட்டால், அவர்களுக்கு மோடி மற்றும் இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாது. அனைத்து சர்வதேச செய்தித்தாள்களையும் பாருங்கள், இந்தியாவை எப்படி உள்ளடக்குகின்றன என்பது தெரியும்.
நம்மைவிட அடுத்த தலைமுறையினரை தான் தேர்தல்கள் அதிகம் பாதிக்கின்றன. அவர்களுக்கு குறைந்த நேரமே உள்ளது. ராகுல் காந்தியின் வார்த்தைகள் உண்மையானது. ஆனால், அவரால் அதை தனியாகச் செய்ய முடியாது. தேர்தல்கள் பற்றி அவர் பேசுவதை போன்று மற்றவர்கள் பேசுவதில்லை. அவர் சொல்வதை நம்பி அனைவரும் கைகோர்க்க வேண்டும். அரசியல் கட்சியினர், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும்.
ஜார்ஜ் சோரோஸுக்கும் காங்கிரஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் பாஜக குற்றம்சாட்டுகிறது. நான் ஜார்ஜ் சோரோஸை சந்தித்ததுகூட கிடையாது.
இந்தியாவின் ’ஜென் ஸி’ இளைஞர்கள், ஜனநாயகத்தை காக்க ராகுல் காந்தியின் குரலுக்கு ஆதரவளிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
மேலும், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று செபியின் அறிவிப்பை விமர்சித்த சாம், “தன்னாட்சி நிறுவனங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன, நீதித்துறையும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு மிகக் குறைந்த சுதந்திரமே உள்ளது” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் குறித்த சாம் பித்ரோடாவின் கருத்து இணையத்தில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.