பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 11 பேர் பலி!
சக்தித் திருமகன் விமர்சனம்: அதிகம் யோசிக்கவிடாத பரபர அரசியல் ஆக்ஷன் த்ரில்லர்தான்! ஆனா லாஜிக் சாரே?
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தரகராக இருக்கிறார் கிட்டு (விஜய் ஆண்டனி). அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தொடங்கி, அரசு அலுவலகங்களில் இருக்கும் அடித்தட்டு ஊழியர்கள் வரை, ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பையும் கரைத்துக் குடித்திருக்கும் கிட்டு, லஞ்சம், கமிஷன் போன்றவற்றை வாங்கிக்கொண்டு தேவையானவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கிறார்.

சில நேரங்களில் எளியவர்களுக்குப் பணம் வாங்காமல் உதவியும் செய்கிறார். பிரபல தொழிலதிபராகவும், அரசியல் ஆலோசகராகவும் இருக்கும் அரசியல் சாணக்கியர் அபயங்கர் (கண்ணன்) இல்லத்தில் வேலைக்காரராக வளர்ந்ததால், அவர் வீட்டிற்குச் சின்ன சின்ன வேலைகளையும் செய்கிறார்.
இந்நிலையில், 200 கோடி ரூபாய் கமிஷன் பணத்திற்காக, மிகப்பெரிய அரசியல் மற்றும் பண விளையாட்டை விளையாடுகிறார் கிட்டு. இதில் மறைமுகமாகப் பாதிக்கப்படுகிறார் அபயங்கர். இதனால் தேசிய, மாநில அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என மொத்த அதிகாரமும் கிட்டுவைத் திரும்பிப் பார்க்கிறது.
அபயங்கருக்கும் எதிரியாகிறார். இதிலிருந்து கிட்டு மீண்டாரா, அவரின் பின்னணி என்ன, இந்த அரசியல் தரகர் வேலைகளை எதற்குச் செய்கிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அருண் பிரபு இயக்கியிருக்கும் 'சக்தித் திருமகன்'.
பெரிய வேலை தேவைப்படாத மாஸ்டர் மைண்ட் கதாநாயகனாக அலட்டல் இல்லாமல் வந்து, ஆங்காங்கே ஆக்ஷன், லவ் எனத் தேவையானதைச் செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

கம்பீரத்தை விடாத அரசியல் நரித்தனம், அதற்கேற்ற உடல்மொழி, ஆங்கில உச்சரிப்பு என அபயங்கர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வில்லனிஸத்தைக் கொடுத்திருக்கிறார், பல ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் 'காதல் ஓவியம்' புகழ் கண்ணன்.
விஜய் ஆண்டனிக்குத் துணையாக செல் முருகன், கலகலப்போடு அரசியல் பாடம் எடுப்பவராக வாகை சந்திரசேகர், விசாரணை அதிகாரியாக கிரண் குமார், அதிகாரமிக்க பெண்மணியாக ஷோபா விஷ்வநாத், கண்ணீரும் கம்பலையுமாக கதாநாயகனின் மனைவியாக த்ருப்தி ரவிந்திரா ஆகியோர் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.
எளிமையான பின்கதையின் எதார்த்தத்தையும், விறுவிறு நிகழ் கதையில் பரபரப்பையும் கச்சிதமாகக் கொண்டு வந்து, தொழில்நுட்பப் பிரிவைத் தலைமை தாங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர். காலிஸ்ட்.
நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் பரபர திரைக்கதைக்கு ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, தின்ஸா கூட்டணியின் படத்தொகுப்பு முதற்பாதிக்குச் சுவை கூட்டியிருக்கிறது.
நீண்ட நெடிய கன்டென்ட்டை அதிவேகத்தில் ஓடவிட்டு சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். விஜய் ஆண்டனியின் இசையில், பாடல்கள் திரையோட்டத்தோடு வந்து, கதைக்கருவிற்கு வலுசேர்க்கின்றன.
பின்னணி இசையால் பிரமாண்டம், எமோஷன், ஆக்ஷன், காதல், ஹீரோயிஸம் என எல்லா பாத்திரங்களையும் நிரப்பியதோடு, பரபரப்பையும் கை பிடித்து இழுத்துச் சென்றிருக்கிறார் விஜய் ஆண்டனி.

கதாநாயகனின் அரசியல் பராக்கிரமங்களை விவரிக்கும் காட்சித்தொகுப்போடு, பரபரவெனச் சூடு பிடித்துப் பறக்கிறது திரைக்கதை. அரசு கட்டமைப்பின் மடிப்புகள், படிநிலைகள், ஓட்டைகள், ஏற்றயிறக்கங்கள் என நுணுக்கமாகப் பேசியபடி சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது முதல் பாதி.
இவற்றுக்கிடையில், கதாநாயகனின் அரசியல் நகர்வுகள் மூலமாக அரசியல் நையாண்டி, அதனூடாக சமூக அவலம் போன்றவற்றை, காமெடியாகவும் சில ட்விஸ்ட்டாகவும் தூவுகிறது திரைக்கதை.
இடைவேளை வரையுமே பரபரப்பு அடங்காமல் ஓடுவது பலம்! ஆனால், அதற்குப் பிறகுத் தேவையான நம்பகத்தன்மையுடனான காட்சிகள் இல்லாதது, எமோஷனலாக கனெக்ட் ஆகாதது பிரச்னைகளாக மாறுகின்றன. மேலும், எக்கச்சக்க தகவல்களும், திருப்பங்களும் வந்து குவிவதால், ஆங்காங்கே குழப்பங்களும் எட்டிப் பார்க்கின்றன.
இரண்டாம் பாதியில், 90களில் நடக்கும் பின்கதை, அவற்றில் பேசப்படும் முற்போக்குக் கருத்துகள், தந்தை பெரியார் ரெபரன்ஸ், சுவர் ஓவியங்கள் போன்றவை கதைக்கு ஆழம் கூட்டுகின்றன. வாகை சந்திரசேகரின் கதாபாத்திரமும் ரசிக்க வைக்கிறது.
அரசியல் நரித்தனத்தை யார் செய்தாலும், அவர்களின் சமூகப் பின்புலத்தை வைத்தே அது சாணக்கியத்தனமாக விதந்தோதப்படுகிறதா, அயோக்கியத்தனமாகத் தூற்றப்படுகிறதா என்கிற சமூக அரசியலை, இரண்டு நேர்ரெதிர் சமுகத்தைச் சேர்ந்தவர்களை வைத்துப் பேசியது நச்!

ஆனால், அதற்குப் பிறகு அதீத வேகத்தோடு கட்டுக்கடங்காமல் ஓடுகிறது திரைக்கதை. நிறைய தகவல்கள், பிட்காயின், NFT என நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள், எக்கச்சக்க சமூகக் கருத்துகள், அழுத்தம் தராத எமோஷன் காட்சிகள் எனச் சறுக்கல்கள் தொடங்குகின்றன.
ஆங்காங்கே வரும் சில சுவாரஸ்ய ட்விஸ்ட்கள் ஆறுதலை மட்டுமே தருகின்றன. இறுதிக்காட்சியும் வழக்கமான அதீத சினிமாத்தனத்தோடு முடிகிறது.
லாஜிக் பிரச்னைகள் இருந்தாலும் அதிகம் யோசிக்கவிடாத இந்த "அரசியல்" தலைமகன், பரபர கதை சொல்லலால் 'சக்தித் திருமகனாக' கவனம் பெறுகிறான்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...