SK 25: ஜி.வி பிரகாஷின் 100வது படம்; எஸ்.கேவுக்கு 25; 'பிரமாண்டமாக தயாரிப்போம்' -படக்குழு சொன்ன தகவல்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து இவர் சூர்யாவுடன் இணைந்து 'புறநானூறு' திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்து. இந்நிலையில் திடீரென சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மூவரையும் வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படம் சிவகார்த்திகேயனின் '25' படமாகும். இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம் என்பது கூடுதல் ஸ்பெஷல்.
தனுஷின் 'இட்லி கடை' படத்தைத் தயாரித்து வரும் ஆகாஸ் பாஸ்கரின் 'டான் பிக்சர்ஸ்' தாயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஆகாஷ், `கவின்கேர்’ குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மூன்றாவது மகள் தாரணியை சமீபத்தில் திருமணம் முடித்திருந்தார். முதல்வர் ஸ்டாலின், தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் இத்திருமணத்தில் கலந்துகொண்டிருந்தது குறிப்படத்தக்கது.
'SK 25' குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், " 'வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்' - பாவேந்தர் பாரதிதாசன்
எங்களது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் Production No.2-வாக உருவாகும் திரைப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
தமிழ்த் திரையுலகில் தன் நடிப்பால் மக்கள் மனதில் தனி இடம்பிடித்திருக்கும் திரு. சிவகார்த்திகேயன் அவர்களின் 25வது படமாக 'டான் பிக்சர்ஸின் Production No.2' அமைவது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளோடு உருவாகும் இந்தத் திரைப்படத்தைத் தேசிய விருதுபெற்ற இயக்குநர் திருமிகு. சுதா கொங்கரா அவர்கள் இயக்குகிறார்.
எப்போதுமே தனித்துவமிக்க கதைகளை தேர்வு செய்திடும் திரு. ஜெயம் ரவி அவர்களும் எங்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் திரு. அதர்வா, செல்வி. ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக திரு. ரவி கே. சந்திரன் அவர்களும், இசையமைப்பாளராக திரு. ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்களும் பங்களிக்கிறார்கள். குறிப்பாக, திரு. ஜி.வி.பி அவர்களுக்கு இசையமைப்பாளராக இது 100வது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு. உங்களுக்கு புதிய திரை அனுபவத்தை கொடுக்கும் வகையில் #SK25 நிச்சயம் அமையும் என உறுதியளிக்கிறேன்." என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.