செய்திகள் :

`StartUp' சாகசம் 34: `Amazon, IBM வேலைகளை விட்டுட்டு Yellow Bag நிறுவனம் - கணவன், மனைவி சொல்லும் கதை

post image

இந்தியா  வளர்ந்து வரும் நாடு என்பதால்,  அதோடு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, எனவே இந்தியாவில்  சமூகத் தொழில்முனைவோர்களுக்கு (Social Entrepreneurs) ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம், அவர்கள் பல சவால்களையும் எதிர்கொள்கின்றனர். சமூகப் பிரச்னைகள் அதிகமாக இருப்பதால், அவற்றைத் தீர்க்கும் வகையில் வணிக மாதிரிகளை உருவாக்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சமூகத் தொழில்முனைவோர் லாப நோக்கத்தை மட்டும் கொண்டிருக்காமல், சமூக நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள். அதே சமயம் அவர்கள் தொண்டு நிறுவனமும் அல்ல, சமூக  நோக்கோடு இருப்பதால் அவர்கள் குறைந்த விலைக்கு பொருட்களையும் விற்பவர்கள் அல்ல... இந்த புரிதல் இல்லாததால் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சமூகத்தொழில் முனைவோருக்கு மதிப்பு குறைவான நிலையே இருந்துவருகிறது.

Social Entrepreneurs

இந்தியாவில் சமூகப் பிரச்னைகள் அதிகமாக இருப்பதால், அவற்றைத் தீர்க்கும் வகையில் வணிக மாதிரிகளை உருவாக்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சமூகத் தொழில்முனைவோர் லாப நோக்கத்தை மட்டும் கொண்டிருக்காமல், சமூக நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள். இந்தியாவில் சமூகப் பிரச்சனைகளில் முக்கியமானவை சில

1.  கல்வி (Education):

     - தரமான கல்விக்கான அணுகலை மேம்படுத்துதல், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில்.

- குறைந்த செலவில் டிஜிட்டல் கற்றல் தளங்களை உருவாக்குதல்.

- தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல்.


2.  சுகாதாரம் (Healthcare):

     - கிராமப்புறங்களில் மலிவு விலையில் சுகாதார சேவைகளை வழங்குதல்.

     - தொலைதூர மருத்துவ வசதிகள் (Telemedicine) உருவாக்குதல்.

     - சுகாதார விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.

     - சுகாதாரமான குடிநீர் வழங்குதல் (Safe Drinking Water).


3.  சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (Environmental Sustainability):

     - கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி தீர்வுகளை உருவாக்குதல்.

     - புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களை (Renewable Energy) ஊக்குவித்தல் (சூரிய சக்தி, உயிரி எரிவாயு).

     - நீர் பாதுகாப்பு மற்றும் மண் வள மேம்பாடு.

     - மாசு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குதல்.


4.  வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாடு (Livelihoods and Skill Development):

     - குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.

     - குடிசைத் தொழில்கள் மற்றும் சிறு தொழில்களை மேம்படுத்துதல்.

     - பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டங்கள் (Women Empowerment).

     - பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துதல்.

5.  நிதி சேர்ப்புகள் (Financial Inclusion):

     - கிராமப்புற மக்களுக்கு எளிதாகக் கடன் மற்றும் நிதி சேவைகளை வழங்குதல் (Microfinance).

    -  டிஜிட்டல் நிதி சேவைகளை அறிமுகப்படுத்துதல்.

6.  வேளாண்மை (Agriculture):

     - சிறு விவசாயிகளுக்கு சந்தை அணுகலை மேம்படுத்துதல்.

     - நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல்.

     - வேளாண் உற்பத்தியை மேம்படுத்துதல்.

என பலவகையான வாய்ப்புகள் உள்ளன

சமூகத் தொழில்முனைவோர் சமூகப் பிரச்னைகளைத் தீர்க்க முற்படுகையில், வணிகத் தொழில்முனைவோரை விட சில கூடுதல் சவால்களை எதிர்கொள்கின்றனர்.


இந்த சவால்களை எதிர்கொண்டாலும், இந்தியாவில் சமூகத் தொழில்முனைவோர் காலத்துக்கு ஏற்ப தங்கள் புதுமையான அணுகுமுறைகள் மற்றும் அர்ப்பணிப்புடன் சமூக மாற்றத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தக் கட்டுரையை எழுதிவரும் நானும் எனது அக்ரிசக்தி நிறுவனத்தை ஒரு சமூகத்தொழில் முனைவு நிறுவனம் என அறிந்துகொள்ள ஏறக்குறைய 3-4 வருடங்கள் ஆனது. எடுத்த உடனேயே இது வணிக நிறுவனமா அல்லது சமூக நோக்கோடு இயங்கும் நிறுவனமா என்று கண்டறிந்துவிட இயலாது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவே தயக்கமாக இருந்தது. ஆனால் அதுதான் உண்மை என்று கண்டறிந்தபின் நான் ஒரு சமூக தொழில்முனைவோன் என்று சொல்லிக்கொண்டேன்.


இந்தியாவில் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சுத்தமான எரிசக்தி ஆகிய துறைகளில் 2 மில்லியனுக்கும் அதிகமான சமூக நிறுவனங்கள் உள்ளன. இவை வெறும் நல்ல முயற்சிகள் அல்ல - அவை தீவிரமான பொருளாதார இயந்திரங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் புதுமைகளை புகுத்துதல் , 2030 ஆம் ஆண்டுக்குள் 8 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு சமூகத் தொழில்முனைவு நிறுவனத்தின் சாகசக் கதையைத்தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். மதுரையைச் சார்ந்த யெல்லோ பேக் என்ற நிறுவனத்தினை மதுரையைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திவரும் இந்நிறுவனத்தினைத் தோற்றுவித்த கிருஷ்ணன் சுப்பிரமணியன் மற்றும் கெளரி ஆகியோர் அவர்களின் சாகசக்கதையை பார்ப்போம்...

கிருஷ்ணன் சுப்பிரமணியன் - கெளரி
``YellowBag நிறுவனத்தை தொடங்க காரணம் என்ன? ஐடி துறையில் இருந்த நீங்கள் எப்படி ஒரு சமூக தொழில்முனைவோராக மாறினீர்கள்?"

``நாங்கள் இருவரும் சாதாரண நடுத்தர குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.  நான் அமேசானில் வேலை செய்யத் தொடங்கியிருந்தேன். என் மனைவி ஐ.பி.எம்மில் இருந்தார். கல்வி மூலம் நம் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற கொள்கைகளால் எங்களது கனவுகளுக்கு உயிர் கிடைத்தது.

2010-ம் ஆண்டு, எங்களது முதல் குழந்தை பிறந்தது. அப்போது எங்கள் குழந்தைக்கு ஒரு உடல் நல சிக்கல் ஏற்பட்டது. அதன் பின் எங்களது சுற்றுப்புறத்தையும் வாழ்க்கையையும் பார்ப்பது கொஞ்சம் மாறியது. குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்ல; வரும் தலைமுறையின் வாழ்க்கை பற்றியும் நாங்கள் எண்ணத் தொடங்கினோம்.

பருவநிலை, மாசுபாடு, காலநிலை மாற்றம், மற்றும் சமூகப் பாகுபாடுகள் இவற்றைப் பற்றிய  கவலை  எங்களுக்கு ஏற்பட்டது. இவற்றை மாற்ற நம்மால் முடியுமா என்றால் எங்களிடம் இருந்த திறன்களும், நாங்கள் செய்த வேலைகளும், இவற்றில் எதையும் மாற்ற உதவவில்லை. பல நேரங்களில் இவையெல்லாம் எதிர்விளைவாக இப்பிரச்சனைகளை அதிகப்படுத்தும் வகையிலேயே இருந்தன. ஆனால் சமூகம் பற்றிய எங்கள் பார்வை மாறவில்லை, அதனால் தான், எங்களால் எளிமையாக தீர்க்கக்கூடிய பிரச்னைகளில் செயல்படத் தொடங்கினோம்.

எந்த ஒரு மாற்றமும் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே  முதல் கட்டமாக, வீட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தோம். நிலைத்தன்மை (Sustainable practices) உள்ள முறையில் விவசாயம் செய்வோர்களிடம் இருந்து வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க ஆரம்பித்தோம். பெரிய கடைகளுக்குப் பதிலாக, சிறிய உற்பத்தியாளர்களை தேடி கண்டுபிடித்து ஆதரிக்க முயற்சி செய்தோம்.

எங்கள் வீட்டில் தொடங்கிய இந்த முயற்சிதான் இன்று எங்கள் முழுநேர வேலையாக மாறியுள்ளது.

இன்று, குறைந்த வருமானக் குடும்பங்களில் இருந்து வரும் பெண்களைத் தேடி கண்டறிந்து அவர்களின் திறன்களை வளர்த்து ஒரு சமூக வணிக தொழில் கூட்டமைப்பை உருவாக்குகின்றோம். எங்களிடம் கற்றுக்கொண்ட  பெண்கள் பலவிதமான தையல் மற்றும் சணல் பைகள் உருவாக்குகிறார்கள். இதன் மூலம், ஒருமுறை பயன்பாட்டுக்குப் பிறகு வீசப்படும் நெகிழி(பிளாஸ்டிக்) பைகளுக்கு மாற்றாக, இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத  பைகளை நாங்கள் உருவாக்கிக்கொடுக்கிறோம்.  இந்த பைகள், இன்று உலகளவில் உள்ள பல நிறுவனங்களின் பரிசுப் பொருளாகவும், விளம்பர பைகளாகவும் மிகவும் விருப்பத்துடன் வாங்கப்படுகின்றன.

வழக்கமான பைகளைத் தவிர, தொழில்துறை நிறுவனங்கள் உட்பட பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு நவநாகரீக துணிப் பைகளை உற்பத்தி செய்கிறது. அதோடு துணிப் பைகளை மட்டுமே தேடுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள், திருமணங்கள் போன்ற சுப நிகழ்வுகளுக்கு ஆர்டர்களைப் பெறுகிறோம். துணிப் பைகளுக்கு தேவை அதிகரித்து வருகிறது.

எங்கள் குழுவில் உள்ள பெண்கள் தற்போது ஆடைகள், கைவினை நகைகள், எம்பிராய்டரி, ஸ்கிரீன் பிரிண்டிங், ஆரோக்கியமான உணவுகள், வீட்டில் தயாரிக்கக்கூடிய அத்தியாவசியங்கள் போன்றவற்றிலும் சிறந்த தயாரிப்பாளர்களாக மாறியுள்ளனர். இப்படித்தான்  எங்கள் யெல்லோ பேக்  சமூகத்தொழில் முனைவு நிறுவனம் துவங்கப்பட்டது."

``சமூகத் தொழில்முனைவு என்பது இன்னும் அறியப்படாத ஒன்று. கடின சூழ்நிலையை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?"

``YellowBag-ஐ ஆரம்பிக்கும்போது, நாங்கள் சமூகத்திற்கு தொண்டாற்றவேண்டும் என்ற  தொண்டு மனப்பாங்கு இருந்தது. ஆனால் குறைந்த விலைக்கு விற்க நாங்கள் முடிவெடுக்கவில்லை. ஆனால் மக்கள் எங்களைத்தொண்டு நிறுவனமாகப்பார்த்து எங்களிடம் விலை குறைவாக வாங்கமுற்பட்டனர் . ஆனால் எங்கள் நோக்கம் குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் நியாயமான ஊதியம் பெறவேண்டும், அதுவும் வெறும் குறைந்தபட்சம் ஊதியம் (minimum wage) அல்ல, அவர்கள் வாழ்விற்கு போதுமான ஊதியம் (living wage) கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டோம்.

ஒரு புறம் வங்கிகள் எங்களுக்குக் கடன் தர தயங்கின. ஏனெனில், நாங்கள் P&L-ஐப் பார்த்து இயங்கவில்லை. எங்களை ஆதரிக்க வேண்டிய தொண்டு நிறுவனங்கள் எங்களை வணிக நிறுவனமாகவே கருதின.  அதனால் அவர்கள் ஆதரிக்கவில்லை.

இன்றும் சமூகத் தொழில் முனைவோர் (Social enterprise) என்றால் என்ன என்ற குழப்பமே தொடர்கிறது. இது மாற வேண்டுமென்றால், மேலும் பலர் YellowBag போன்ற முயற்சியை தொடங்க வேண்டும்.

சில ஆண்டுகளில் நாங்கள் எங்கள் பாதையை விளக்கமாகப் புரிந்து கொண்டோம். எல்லா சமூக நோக்கங்களையும் ஒரே அமைப்பில் செயல் படுத்த முடியாது என்பதையும் புரிந்துகொண்டோம். எனவே  எங்கள் செயல்பாடுகளை  பிரித்துக்கொண்டோம்.

YellowBag Foundation: குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கு நியாயமான வருமானம் மற்றும் நிதி பாதுகாப்பு வழங்கும் திறன் வளர்ப்பு மற்றும் தொழில் திட்டங்களை இயக்குகிறது.


Vallavi Women's Collective: சுயதொழில் செய்யும் பெண்களின் கூட்டமைப்பு. சிறு தொழில்கள் நடத்துகிறார்கள்.

மின்மினிகள்: பின்தங்கிய குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு வயதுக்கேற்ப கல்வியை உறுதி செய்யும் முயற்சி. தற்போது இரண்டு இலவச கற்றல் மையங்கள் செயல்படுகின்றன.

MakersCart: பெண்களின் தயாரிப்புகளை சந்தைக்கு கொண்டு செல்லும் பெண்களால் இயக்கப்படும் வணிகம். 

பொதுவாக மக்கள் சேவை ஒரு வழி, வணிகம் வேறு ஒரு வழி என்று வல்லுனர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மனிதனின் ஒவ்வொரு செயலும் மற்ற மனிதனின் துன்பத்தை குறைக்கவேண்டும என்று நாங்கள் நினைக்கிறோம் அதை செயல்படுத்துகிறோம். 

``உங்கள் திட்டத்திற்கு முதலீடுகளை எப்படி தயார் செய்தீர்கள்? யார் உங்களுடன் இருந்தார்கள்?"

``2014-ல், நானும் என் மனைவியும் இருவரும்  எங்களுடைய MNC வேலைகளை விட்டு விட்டோம். ₹5 லட்சம் சேமிப்புடன் ஆரம்பித்தோம். வேறு சொத்தோ கடனோ எதுவும் இல்லை. ஒரு வருடத்துக்காவது குடும்பத்தைக் காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் சென்னையில் இருந்து சொந்த ஊரான மதுரைக்கு கிளம்பினோம்.

இன்று, எங்களது ஒரு குடும்பம் மட்டும் அல்ல; YellowBag மூலமாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.

முதலில் பெண்களின் வீட்டிலேயே பைகளைக் கைத்தொழிலாகத் தயாரிக்க தொடங்கினோம். அவர்கள் வீடே எங்கள் ஆபிஸாக இருந்தது.

எங்கள் ஆரம்ப வளர்ச்சியை ஊக்குவித்தவர்கள் இருவர்: 

எங்களை நம்பி பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள். எங்களை நம்பி தங்கள் நேரத்தை ஒப்படைத்த பெண்கள்.

எங்களுக்கு மூலப்பொருள் வழங்குபவர்கள் எங்களுக்கு மிகவும் ஆதரவு அளித்தார்கள். நியாயமான கடன் கொடுத்து, எங்கள் வளர்ச்சியில் பங்கு கொண்டார்கள்.

பிறகு, தனிப்பட்ட கடன்கள் எடுத்தோம். இன்று பல நல்ல உள்ளங்களிடம் இருந்து ஆதரவு வருகிறது. சில நிறுவனங்கள் CSR வழியாக பெண்கள் திறன் மேம்பாடு மற்றும் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறார்கள். வங்கிகளும் தாராளமாக கடன் கொடுக்க முன் வந்துள்ளனர்.

ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகும், நாங்கள் இன்னும் ஆரம்பத்தில்தான் இருக்கிறோம். மேலும் பலர் எங்களுடன் சேர வேண்டிய அவசியம் உள்ளது.

YellowBag எங்கள் இருவரது முயற்சி மட்டும் அல்ல. ஊர் கூடி தேர் இழுக்கும் ஒரு பெரு முயற்சி. பல நூறு ஆண்டுகளுக்கும் தழைத்து இருக்கும் ஒரு பெரு நிறுவனத்தை வளர்க்கும் ஆரம்ப கால முயற்சி."

``மதுரையைச் சுற்றியுள்ள பெண்கள், சமூகத்திற்கு என்ன நன்மை ஏற்படுத்தினர்? உங்கள் இலக்கை அடைந்தீர்களா?"

கெளரி : ``மதுரை மட்டும் அல்ல, பெண்களின் வேலை வாய்ப்பு குறைவு என்பது ஒரு தேசிய பிரச்னை. இந்திய மக்களில் 48% பெண்கள். ஆனால், வேலை வாய்ப்பில் அவர்கள் பங்களிப்பு 20% கூட இல்லை. பெரும்பாலான வேலைகள் சம்பளமில்லாதவை, பாதுகாப்பற்றவை.

CII அறிக்கையின்படி, பெண்களின் பாதிபேர் தரமான வாழ்க்கை இல்லாமையை குறிப்பிடுகிறார்கள். காரணம் - வருமான வாய்ப்பு குறைவு, சமூக கட்டுப்பாடுகள், நிதி சார்பு.

YellowBag மூலம், கடந்த 10 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம்.

பலர் எங்கள் திறன் பயிற்சியினூடாக புதிய திறன்களை கற்றுக்கொண்டனர். சிலர் முதல் முறையாக பணம் சம்பாதித்தனர். Minminigal வழியாக, குழந்தைகளுக்கான தரமான கல்வி கிடைப்பதால் அவர்கள் கவலைகள் குறைந்துள்ளது். ஒவ்வொரு நாளும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சிகளில் பங்கேற்கின்றனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் நமது உற்பத்தி இடங்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டுகிறார்கள்.சமீபத்தில் நடந்த மகளிர் தின விழாவுக்கு 500க்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்தார்கள். 

இது YellowBag மகளிர் நலனுக்காக உருவான அமைப்பாக ஏற்கப்பட்டுவிட்டதைக் காட்டுகிறது.”

``உங்கள் வணிகம் லாபத்தை மையமாக கொண்டதா? அல்லது சமூக நலனை மையமாக கொண்டதா?”

``லாபம் என்பது ஒரு நிறுவனம் சரியாக செயல்படுகிறதா என்பதை காட்டும் குறி. எனவே, எங்கள் பெண்கள் நடத்தும் சிறு தொழில்கள் லாபகரமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால், எங்கள் நிறுவனம் லாபத்துக்காக அல்ல. குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கு நியாயமான வருமானம், நிதி பாதுகாப்பு வழங்குவதே எங்கள் நோக்கம். 

அதற்காக, நாங்கள் திறமையான குழுவாக செயல்பட வேண்டும். தரமான பொருட்கள், சேவைகள் வழங்க வேண்டும்.

எங்கள் லாப தத்துவம்: "லாபம் என்பது செயல்திறனுக்கான அறிகுறி. ஆனால், அந்த லாபம், நிறுவனத்தின் நோக்கத்தை வலுப்படுத்தவே பயன்பட வேண்டும்."

``எதிர்கால திட்டம் என்ன? அதற்கான முதலீட்டை எப்படிப் பெறப்போகிறீர்கள்?”

``2026க்குள் Vallavi Women's Collective மூலம் 50க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்பது எங்கள் குறிக்கோள். இப்போது அவர்கள் சம்பாதிப்பது, குறைந்த வருமானம். அதை Living Wage அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். மதுரையில் living wage தரம் மாதம் ₹17,000.

எனவே புதிய பெண்கள் வாடிக்கையாளர்களின் வருமானத்தின் மூலமாக வளர்கிறார்கள். முன்னேற்றமான பெண்கள் சிலர் equity முறையில்  முதலீடுகளை பெறும் நிலையில் உள்ளனர்.

இந்த ஆண்டு  ஒரு கோடி வரை முதலீட்டை ஒத்த எண்ணம் கொண்ட நபர்களிடம் இருந்து பெற திட்டமிட்டுள்ளோம். கடின உழைப்பின் மூலம் அதற்கான தயார் நிலையை விரைவில் எட்டிவிடுவோம்.”

``எதிர்கால சமூகத் தொழில்முனைவோருக்குத் சொல்லும் பாடம் என்ன? வாடிக்கையாளர்கள்அவர்களை ஆதரிக்க என்ன செய்யலாம்?”

``ஒரு சமூகத் தொழில்முனைவோர், அடித்தளத்தில் உள்ள மக்களின் பிரச்னைகளை உணர்ந்து புரிந்து கொள்ளவேண்டும். அதே நேரத்தில், ஒரு நல்ல வணிக நிறுவனத்தை நடத்தத் தேவையான அனைத்து திறன்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். 

சமூக செயல்பாட்டாளர்கள் வணிகங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களை தவறாக மதிக்கிறார்கள். நாங்கள் அதை ஒரு அடிப்படை கல்வியாக பார்க்கிறோம். 

சந்தையில் உங்கள் முயற்சி வாடிக்கையாளர்களை ஈர்க்கவில்லை என்றால், அதுவே நீடிக்காது.  எனவே நாம் வாழ்க்கையில் பல திறன்கள் கற்றுள்ளோம். அதை மனிதகுலத்தின் நலனுக்காக பயன்படுத்த முடியும் என்பதை நாம் உணரவேண்டும். அதை நம் வாடிக்கையாளர்களும் உணரவேண்டும்.”

(சாகசங்கள் தொடரும்)

டீக்கடை இல்லாம தினமும் 16,000 பேருக்கு டீ, காபி - மதுரை பைலட்டின் Cup Time கதை | `StartUp' சாகசம் 33

Cup Time`StartUp' சாகசம் 33 :கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் பரபரப்பான விவாதப் பொருளாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த தேநீர்க் கடைச் சங்கிலிகள், இன்று என்ன... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 32: `அந்த தொழில்நுட்பத்தை Google ரொம்ப பாராட்டினாங்க’ - Save Mom சக்சஸ் ஸ்டோரி

சேவ் மாம் - Save Mom`StartUp' சாகசம் 32 தாய் சேய் இறப்பு விகிதம் (MMR) ஒரு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார ஸ்திரத்தன்மையின் முக்கிய அளவுகோலாகும். இந்தியாவில், தாய் சேய் ஆரோக்கியத... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 31: `ஒருத்தருக்காக ஆரம்பித்து, இன்று 10,000 பேர்’ - சத்யா சொல்லும் தையல் அகாடமி கதை

`StartUp' சாகசம் 31 : இந்தியாவில் தையல் துறை என்பது ஒரு பாரம்பரியமான மற்றும் மிகப் பெரிய தொழிலாக விளங்கிவருகிறது. ஆயத்த ஆடைத் துறையின் அபார வளர்ச்சி மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஆடைகளுக்கான தேவை அதிகரிப... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 30: வீட்டுக்கே வந்து மருத்துவம்; காரைக்குடியில் இருந்து..! - இது Treat At Homes கதை

Treat at HOME`StartUp' சாகசம் 30மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு, "வீட்டில் சிகிச்சை" (Treat at Home) முறை ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, ... மேலும் பார்க்க