செய்திகள் :

`StartUp' சாகசம் 31: `ஒருத்தருக்காக ஆரம்பித்து, இன்று 10,000 பேர்’ - சத்யா சொல்லும் தையல் அகாடமி கதை

post image

இந்தியாவில் தையல் துறை என்பது ஒரு பாரம்பரியமான மற்றும் மிகப் பெரிய தொழிலாக விளங்கிவருகிறது. ஆயத்த ஆடைத் துறையின் அபார வளர்ச்சி மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஆடைகளுக்கான தேவை அதிகரிப்பு காரணமாக, தையல் தொழில் இன்றும் செழித்து வளர்ந்து வருகிறது.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகும். குறிப்பாக, ஆயத்த ஆடைத் துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. திருப்பூர் போன்ற நகரங்கள் பின்னலாடை உற்பத்தியில் இந்திய அளவில் 60% பங்களிப்புடன் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வணிகத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன.

இந்திய ஆடை இணையவழித் துறை 2023 இல் சுமார் $14 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பைக் கொண்டிருந்தது. இது தோராயமாக ₹1,16,660 கோடி இந்திய ரூபாய்க்கு சமம். இது 2030 ஆம் ஆண்டில் $63 பில்லியனை (சுமார் ₹5,25,000 கோடி) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தையல் துறைக்கும் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. நுகர்வோரின் தனிப்பயனாக்கப்பட்ட ஆடைகளுக்கான ஆர்வம், நிலையான ஃபேஷன் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாகும்.

பாரம்பரியமாக, மக்கள் துணிகளை வாங்கி தையல் கடைகளில் கொடுத்து தைத்து அணிந்து வந்தனர். ஆனால் ரெடிமேட் ஆடைகளின் வருகை தையல் தொழிலுக்கு சவாலாக அமைந்தது. இருப்பினும், இன்றும் தனிப்பயன் ஆடைகள், திருத்தங்கள் (alterations), பள்ளி சீருடைகள் மற்றும் பிரத்யேக வடிவமைப்புகளுக்கான தேவை அதிகமாகவே உள்ளது. மேலும், திருவிழா காலங்கள் மற்றும் திருமணங்கள் போன்ற விசேஷ நாட்களில், தனித்துவமான ஆடைகளை உருவாக்க தையல்காரர்களின் பங்கு இன்றியமையாதது. அதிகரிக்கும் மக்கள் தொகையும் இதற்கான வாய்ப்பை என்றும் வழங்கும்.

தனிப்பயனாக்கப்பட்ட ஆடைகள் (Customized Clothing): இன்றைய காலகட்டத்தில், தனித்துவமான மற்றும் தங்கள் உடல்வாகுக்கு ஏற்ற ஆடைகளை அணிய மக்கள் விரும்புகின்றனர். இது தையல்காரர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்குகிறது. நவீன வடிவமைப்புகள், புதிய தையல் நுட்பங்கள் மற்றும் துணிகள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலம் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.

ஆல்டரேஷன்ஸ் மற்றும் பழுதுபார்ப்பு (Alterations and Repairs): ரெடிமேட் ஆடைகள் பெருகிவிட்ட போதிலும், அவற்றை தங்கள் அளவுக்கேற்ப மாற்றியமைக்க அல்லது பழுதுபார்க்க தையல்காரர்கள் தேவைப்படுகிறார்கள். இது ஒரு நிலையான வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு முக்கிய சேவையாகும்.

சிறு நிறுவனங்களுக்கான ஆயத்த ஆடை உற்பத்தி (Small-scale Garment Manufacturing): சிறிய அளவிலான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து, ஆன்லைன் தளங்கள் அல்லது உள்ளூர் கடைகள் மூலம் விற்பனை செய்யலாம். குழந்தைகள் ஆடைகள், உள்ளாடைகள், நைட்டிகள், மற்றும் துணிப்பைகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அதிக முதலீடு தேவையில்லை.

ஃபேஷன் வடிவமைப்புடன் ஒருங்கிணைப்பு (Integration with Fashion Designing): ஃபேஷன் வடிவமைப்புப் படிப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் புதிய வடிவமைப்புகளை உருவாக்கி சந்தைப்படுத்தலாம். இதன் மூலம் தையல் கலைஞர்கள் ஒரு வடிவமைப்பாளராகவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.

ஆன்லைன் தையல் சேவைகள் (Online Tailoring Services): சில மொபைல் அப்ளிகேஷன்கள் நம் வீட்டுக்கே வந்து அளவெடுத்து, ஆடைகளை தைத்து வழங்கும் சேவைகள் அதிகரித்து வருகின்றன. இது தையல் தொழிலை நவீனமயமாக்க ஒரு சிறந்த வழியாகும்.

அரசு திட்டங்கள் மற்றும் ஆதரவு (Government Schemes and Support): மத்திய மற்றும் மாநில அரசுகள் தையல் தொழிலில் ஈடுபடுவோருக்கு பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. உதாரணமாக, "பி.எம். விஸ்வகர்மா தையல் இயந்திரத் திட்டம்" மூலம் ₹15,000 நிதியுதவி ($180) மற்றும் தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டங்களும் பெண்களுக்கு சுய தொழில் தொடங்க உதவுகின்றன. சில மாநில திட்டங்களில், ₹1,000 மதிப்புள்ள ($12) இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுவதும் உண்டு.

பயிற்சி மையங்கள் (Training Centers): திறமையான தையல் கலைஞர்களுக்குத் தேவை அதிகரித்து வருவதால், தையல் பயிற்சி மையங்களை அமைப்பதும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். இது புதிய தலைமுறை தையல் கலைஞர்களை உருவாக்கவும், அவர்களின் திறனை மேம்படுத்தவும் உதவும்.

Representational Image

இருப்பினும், ரெடிமேட் ஆடைகளின் ஆதிக்கம், தையல் கூலியின் குறைந்த மதிப்பு, மற்றும் இளைஞர்கள் தையல் தொழிலுக்கு வருவதில் உள்ள ஆர்வம் குறைவு போன்ற சவால்களும் உள்ளன. இந்த சவால்களை சமாளிக்க, தையல் கலைஞர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது, தனித்துவமான வடிவமைப்புகளை உருவாக்குவது, தரமான சேவையை வழங்குவது மற்றும் வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்துவது போன்றவை தையல் தொழிலின் எதிர்கால வெற்றிக்கு அவசியம்.

இந்தியாவில் தையல் துறை ஒரு மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. பாரம்பரிய தையல் கலைக்கும், நவீன ஃபேஷன் உலகிற்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட இந்தத் துறைக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அரசு திட்டங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஆடைகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், தையல் துறை மேலும் செழித்து வளரும் என்பதில் சந்தேகமில்லை. தையல் கலைஞர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொண்டு, புதிய வழிகளை ஆராய்வதன் மூலம் இந்தத் துறையில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

தமிழகத்தின் பங்களிப்பு

தொடர்ந்து ஆயத்த ஆடை வடிவமைப்புப் பணிகள் இருக்கும்போது, தையல் தெரிந்த ஆட்களும் தேவையாக இருக்கிறார்கள். தொடர்ந்து நிறுவனங்களுக்குச் சென்று பணியாற்ற முடியாதவர்கள் வீட்டில் இருந்தே பயிற்சி பெற்று பணியாற்றி தங்களது சொந்த முயற்சியில் சுய தொழில் செய்துவருகின்றனர். சென்னையில் சத்யா கோமணி அகாடமி நிறுவனர் சத்யா தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு நபரில் ஆரம்பித்து இதுவரை 10,000 பேருக்கு மேல் இணையம் வழியாகவும், நேரடியாகவும் பயிற்சி அளித்து தையல் தொழிலில் சுய தொழில்முனைவோரை உருவாக்கிவருகிறார். அவரின் சாகசக்கதையைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகின்றோம். இனி சத்யா அவர்களின் நேர்காணல்:

சத்யா கோமணி அகாடமி
``எந்த விஷயம் உங்களை இப்படி ஒரு அகாடமி ஆரம்பிக்கத் தூண்டியது?”

``நான் ஒரு சென்னை மாதிரியான நகரத்தில் வாழ்ந்த பெண் கிடையாது, திருநெல்வேலி அருகே கிராமத்தில் இருந்தவள். நான் தையல் கலையைக் கத்துக்கணும்னு ஆசைப்பட்டபோது அதைக் கத்துக்கிறதுக்கு ஒரு சரியான இடம் எனக்கு இல்லை. சரி, ஆன்லைன்ல படிப்போம் அப்படினு பார்த்தாலும், தமிழ்ல ஆன்லைன்ல இந்தப் பயிற்சியை எளிமையா சொல்லித்தர ஆள் இல்லை. அதுக்கப்புறம் 2020-ல் நான் மதுரைல ஒரு அகாடமியில் சேர்ந்தேன்.

நேரடி வகுப்பில் அவங்க சொல்லித் தர முறையெல்லாம் கடினமா, புரிஞ்சிக்கிறதுக்கு எளிமையா இல்லாம இருந்துச்சு. தையல் கத்துக்கணும்னு ஆசைப்படுறவங்க பெரும்பாலும் பார்த்தீங்கன்னா பெண்கள், அதிலும் பொருளாதார ரீதியா பெரும் பணம் வைத்திருப்பவர்கள் கிடையாது. இத எங்க, எப்படி படிக்கணும் அப்படிங்கிற ஒரு பெரும் விழிப்புணர்வு இல்லாதவங்கதான். முதுகலை ஆங்கிலம் படித்த எனக்கே இந்த ஃபேஷன் டெக்னாலஜி படிப்பு அவ்வளவு கடினமாக இருந்தது.

அப்போ மத்தவங்களுக்கு இது எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு யோசிச்சேன். அப்போ இதை என்னால் எளிமையா சொல்லித்தர முடியுமா என்று யோசித்தேன். 2016 முதல் 2020 வரை நான் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினேன். அந்த அனுபவத்தைத் தையல் பயிற்சிக்கு முயற்சி செய்தேன். அதன்பிறகு என்னாலும் சொல்லித்தர முடியும் என்று ஆரம்பித்ததுதான். தமிழில் எளிமையா ஃபேஷன் டெக்னாலஜி சொல்லித்தர ஆரம்பித்தோம். இப்போது சத்யா கோமணி அகாடமியில் பல்லாயிரக்கணக்கானோர் பயிற்சி எடுத்திருக்கிறார்கள்.”

சத்யா
``இணையம் வழியாகத்தான் இதை கொண்டு போகணும் அப்படிங்கிறது எப்படி தோன்றியது?”

``முதலில் என்னுடைய திட்டம் நேரடியாக வகுப்பு எடுக்கணும் அப்படிங்கிறதுதான். ஆனா ரெண்டு வருஷத்துக்கு முன்னால நான் தைக்கிற எல்லா ஆடையையும் என் இன்ஸ்டாகிராம்ல பதிவு பண்ணுவேன். அதன் வழியே அப்போ நான் ஆன்லைன் ஆர்டர்கள் எடுத்துப் பண்ணுவேன். ஒரு நாள் நான் பண்ற வடிவமைப்பு எல்லாம் பார்த்து தஞ்சாவூரில் இருந்து வினோதினி என்பவர் இணையம் வழியா சொல்லிக் கொடுங்கன்னு கேட்டாங்க. அவங்களுக்காக ஆரம்பித்ததுதான் என்னோட முதல் இணைய வகுப்பு. அவங்கதான் முதல் மாணவி. அவங்கதான் கேட்டாங்கன்னு ஆரம்பித்தேன். அந்தக் கிளாஸ் எடுத்தபிறகு அவங்களும் அதைக் கத்துக்கிட்டு அவங்களும் அருமையா பண்ணிட்டாங்க. அதையே ஒரு வீடியோவாகப் போட்டேன். என்னிடம் இணைய வகுப்பில் கத்துக்கிட்டாங்க. இணையத்தில் ஒரு நாள் வகுப்பாக மாடர்ன் ஜாக்கெட் தைக்கிறது எப்படின்னு பயிற்சி வகுப்பு எடுத்தேன். அதுல 15 பேர் சேர்ந்தாங்க. அதன் பிறகு அடுத்த வகுப்பில் 100 பேர், அடுத்த வகுப்பில் 500 அப்படியே இப்போ கடைசியா எடுத்த வகுப்பில் 2000 பேர் இணைய வகுப்பில் சேர்ந்தார்கள். ஒரு மாணவியில் ஆரம்பித்தது ஒரே வகுப்பில் 2000 பேர் வரை எடுத்து 10,000 பேர் வரை பயிற்சி கொடுத்திருக்கேன்.”

``இணைய வகுப்பு நடத்தும்போது என்னென்ன சவால்கள் இருந்தன? அதாவது ஆன்லைன்ல பண்றவங்கள பொதுவா மக்கள் நம்புறதுக்கு கொஞ்சம் தயக்கம் காட்டுவார்களே?”

``ஆரம்பத்துல இருந்தே மக்கள் நம் மீது வைக்கிற நம்பிக்கையை காப்பாத்துறதுக்காகவும், மேலும் நம்பிக்கை வருவதற்காகவும் நிறைய வேலை செய்தோம். தொடர்ந்து நான் செய்ற ஆடைகளை நானே போட்டு போட்டோஸ் & வீடியோஸ் போடுவேன். பொதுவா தையல் சம்பந்தமாக அவங்க எதிர்கொள்ளும் சவால்களை எப்படி சரி செய்றது அப்படிங்கிறதுக்கு ஒரு எளிய தீர்வை சிறு சிறு வீடியோஸ் மூலம் இன்ஸ்டாவில் பதிவு செய்துட்டே இருந்தேன். இப்போ வரை அதை தொடர்ந்து செய்துட்டே இருக்கிறேன். அதிலும் குறிப்பாக எந்த ஆடை தைக்க எவ்வளவு துணி வேண்டும்கிறது அப்படின்னு கண்டுபிடிக்க சரியான மற்றும் எளிய முறைகளை உருவாக்கி அதை வீடியோவாகப் பதிவிட்டேன். அதுதான் அவங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கை உருவாக்கியது. கொஞ்ச நாளைக்கு அப்புறம் ஒரு நேரடி பயிற்சி வகுப்பு நடத்தினோம். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்ல இருக்கிற மக்கள் ஒரு நாள் நேரில் சந்தித்து அவங்களோட சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் அப்படின்னு. அந்தப் பயிற்சிக்கு தமிழ்நாடு முழுதும் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் வந்த தங்கள் சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி பெற்றனர். அந்த விஷயம்தான் மக்களுக்கு எங்கள் மேல் இன்னும் நம்பிக்கையை கொடுத்தது. தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் எனக்குத் தெரியாது. அப்போது என் கணவர் கோமணி எனக்கு உதவி செய்தார்.”

சத்யா கோமணி அகாடமி
``ஆரம்ப காலத்தில் நீங்கள் மட்டும் கிளாஸ் எடுத்திருப்பீங்க. ஆனால் இதை இன்னும் இந்தப் பயிற்சி நிறுவனத்தை பெரிய அளவில் கொண்டுவரணும் என்று எப்போது முடிவு எடுத்தீர்கள்? அப்படினு முடிவு எடுத்தபோது அதுக்காக என்னென்ன மாற்றங்கள் செய்தீர்கள்?”

``ஆரம்ப காலத்துல மட்டும் இல்ல, இப்போ வரை கிளாஸ் எடுக்கிறது நான் மட்டும் தான் பண்றேன். அதைத் தவிர மற்ற எல்லாத்துக்கும் இப்போ கிட்டத்தட்ட 12 பேருக்கு மேல் ஆட்கள் இருக்காங்க. பெரும்பாலும் பார்த்தீங்கன்னா கிளாஸ் கவனிக்கும் போது சந்தேகங்கள் வராது. அதை அவங்க செஞ்சு பார்க்கும் போதுதான் சந்தேகம் வரும். அந்த இடத்துலதான் நம்ம உதவி அவங்களுக்கு தேவை. அப்போ அவங்க போன் கால் பண்ணி கேள்வி கேட்கும்போதும், அல்லது வாட்ஸ்அப்பில் அனுப்பும்போதும் முன்பு நான் மட்டும் தான் பதில் அனுப்பிக்கொண்டிருந்தேன். இப்போ அதுக்குன்னு ஒரு தேர்ச்சி பெற்ற குழு இருக்கு. அவங்க காலைல 10 மணி முதல் இரவு 8 மணி வரை யார் எப்போ என்ன சந்தேகம் கேட்டாலும் அவங்களுக்கு உதவி செய்வாங்க.

ஆரம்பத்துல எல்லா வீடியோக்களும் கூகுள் டிரைவ்ல வைத்து அதன் அணுகலை கொடுத்து வந்தோம். அதுக்கப்புறம் பயன்படுத்துறவங்களுக்கு எளிமையா இருக்கணும் அப்படிங்கிறதுக்காக சொந்தமா ஒரு செயலி உருவாக்கி வெளியிட்டோம். அதுல அவங்க வாங்குற எல்லா கோர்ஸ் வீடியோக்களையும் அவங்க எப்போ வேணும்னாலும் பார்த்துக்கிடலாம். அது அவங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும். அது நம்மளை 10,000-க்கும் மேல் மக்கள் பயன்படுத்த உதவியாக இருந்துச்சு. எளிமையா சொல்லித்தரணும்னுங்கிற எண்ணம், எளிமையான அணுகலையும் கொடுக்கணும்னு தொழில்நுட்பத்தையும் கொடுக்க ஆரம்பித்தோம்.”

``உங்க எதிர்கால திட்டம் என்ன?”

``தமிழ் தெரிஞ்ச ஒரு நபர் தையல் கத்துக்கணும் அப்படின்னு ஆசைப்பட்டால், அவங்க எந்த நாட்டுல இருந்தாலும், எந்த நிமிஷம் அவங்களுக்கு அந்த எண்ணம் வந்தாலும், அவங்களுக்குத் தேவையான விஷயங்களை அடுத்த நொடியே ஆரம்பிக்கிறதுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் எளிய முறையில கொடுத்து, அதை அவங்க வெற்றிகரமா செய்து அவர்கள் முடிக்கிற வரை அதுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செஞ்சு அவங்க கனவை நினைவாக்க அவங்களோட அந்தக் கற்றலின் பாதையை ரொம்ப எளிமையாவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதுதான். அதற்குத் தேவையான அனைத்தையும் நம்ம இணையம் வழியே கொண்டு வர இருக்கோம். சில வருடத்திற்குள் 10 லட்சம் மக்களை சென்றடையவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.”

சத்யா கோமணி அகாடமி
இதற்கான முதலீடு எங்கிருந்து திரட்டினீர்கள்?

``என் கையில் இருந்த என் செல்போன் மட்டும் தான் என் முதலீடு. அதைத் தவிர இன்று இருக்கும் அத்தனை விஷயங்களும் பூட்ஸ்ட்ராப் முறைதான். நான் சம்பாதித்து அதையே ஆரம்ப முதலீடாக முதலீடு செய்து வந்தேன். இன்று வரை இப்படித்தான் முதலீடு செய்து வருகிறோம். வெளியே இருந்து முதலீடு செய்யவில்லை.”

``இதுவரை உங்கள் மூலம் பயனடைந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் வாழ்வில் இது என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது?”

``60,000+ பேர் எங்கள் செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர். 10,000+ பேர் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறார்கள். 15 வயது முதல் 65 வயது வரை அனைத்து வயது வரம்பினருக்கும் புரியும் வகையில் இந்த முறை உள்ளது. அனுதினமும் குறைந்தபட்சம் 50+ போன் கால் எங்களுக்கு வருகிறது. "வாழ்க்கையில் முதல் முறையாக குடும்பத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த, பொருளாதார ஈட்டலில் எந்த பங்கும் இல்லாத நான் இன்று இந்தத் தையல் கலையை கற்று அதனைப் பிறருக்கும் சொல்லிக்கொடுத்து அதன் வழியே வருமானம் ஈட்டி வருகிறேன்" என்றார்.

தமிழகத்தில் பெரும்பான்மையான பெண்கள் வீட்டில் இருந்தபடியே வருமானம் ஈட்ட மிக முக்கிய பங்களிப்பாக உள்ள இந்தத் தையல் கலை எளிய முறையில் அவர்கள் கைகளில் உள்ள செல்போனின் மூலம் அவர்கள் கைகளை சென்றடைந்ததுக்கு நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

(சாகசங்கள் தொடரும்..!)

`StartUp' சாகசம் 30: வீட்டுக்கே வந்து மருத்துவம்; காரைக்குடியில் இருந்து..! - இது Treat At Homes கதை

Treat at HOME`StartUp' சாகசம் 30மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு, "வீட்டில் சிகிச்சை" (Treat at Home) முறை ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, ... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 29: `உணவு, மருந்து... 40+ கி.மீ வரை டெலிவரி’ - எப்படி செய்கிறது ரூட் டெலிவரி?

ரூட் டெலிவரி`StartUp' சாகசம் 29கோவிட் 19 பெருந்தொற்றுக்கு பின்னான நமது வாழ்க்கை முறைகள் வெகுவாக மாறிவிட்டன. அதிலும் குறிப்பாக, நமது உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு பட்டனைத் தட்டி... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 28: ரூ.50 டு ரூ.10 லட்சம்; 150+ விவசாயத்துறை உபகரணங்கள்- கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ்

கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ்`StartUp' சாகசம் 28இன்றைய நவீன உலகில், விவசாயம் என்பது வெறும் உடல் உழைப்பை மட்டும் நம்பியிருக்கும் தொழில் அல்ல. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, மகசூலை அதிகரித... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 27: முதலீடுகளை ஈர்த்தது எப்படி? டிக்கெட் முன்பதிவு சந்தையில் `Ticket 9’ ஃபார்முலா!

Ticket 9`StartUp' சாகசம் 27இந்தியாவில் ஈவென்ட் மற்றும் பொழுதுபோக்குத் துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. திரையரங்குகள் முதல் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், கருத்தரங்... மேலும் பார்க்க