முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை
தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராம ஊராட்சியில், சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். இரண்டு பக்கமும் பவானி ஆற்றால் சூழப்பட்ட இந்த கிராமத்தில், பள்ளி மாணவ, மாணவியர், அருகில் உள்ள நகரங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும், பரிசலில், பவானி ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. வெள்ளப் பெருக்கு காலங்களில், பரிசல் போக்குவரத்து தடைபடுவதால், சுமார் 8 கி.மீ தொலைவுக்குச் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது.
குறிப்பாக, அவசர மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள், இதனால் குறித்த நேரத்தில் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாமல், உயிரிழப்புகள் பல ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பவானி ஆற்றைக் கடந்து செல்ல, உயர்மட்டப் பாலம் அமைத்துத் தரக் கோரி, பல ஆண்டுகளாக அம்மாபாளைய கிராமப் பொதுமக்கள், முதலமைச்சரிடமும், அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினரிடமும், நேரடியாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
தமிழகத்தின் இன்னும் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில், 100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறி வருகிறது. முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் கொண்டு வந்த பாரதப் பிரதமரின் கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்திற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு, கடந்த ஆண்டு வரை வழங்கிய நிதி 5,886 கோடி ரூபாய். அந்தத் திட்டத்தை, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று பெயர் மாற்றி, அரசாணை வெளியிட்ட திமுக அரசு, இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை?
மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கும் திமுக அரசு, அந்தத் திட்டங்களை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 2025 ஆம் ஆண்டிலும், தமிழக கிராம மாணவ, மாணவியர், கல்வி கற்பதற்காக, பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது, வெறும் விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் அது இருக்க வேண்டும்.
உடனடியாக, அம்மாபாளையம் பகுதியில், பவானி ஆற்றைக் கடக்க, உயர்மட்டப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், கிராமங்கள், சாலைகளால் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி
Former BJP leader Annamalai has alleged that rural roads have not been constructed in many districts of Tamil Nadu.