Thug Life: கன்னட மொழி விவகாரம்; நேரடியாக மன்னிப்பு கேட்காத கமல் - படம் வெளியாவதில் சிக்கல்!
‘தக் லைஃப்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் "தமிழ் மொழியிலிருந்து தான் கன்னடம் பிறந்ததாக” கருத்து தெரிவித்தது, பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.
கர்நாடக முதல்வர் உள்பட பல்வேறு கன்னட தரப்பினர் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லையெனில் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என்றும் கூறியிருந்தனர்.
இதற்கிடையில் தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து இன்று காலை முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

”மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிந்திருக்கும், மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடாது” என்று உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இதற்கிடையில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவருக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில் ”என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நான் சொன்ன வார்த்தைகள், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதையும் மட்டுமே வெளிப்படுத்தின” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மன்னிப்புக் கேட்பதில் உங்களுக்கு அப்படி என்ன ஈகோ? என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா கேள்வி எழுப்பியிருக்கிறார். ``கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்கிறோம். அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே.. ஏன் சுற்றிவளைத்து பேசுகிறீர்கள்? " என்று கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கன்னட மொழி குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கன்னட ஃபிலிம் சேம்பர் கோரியதாக கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், கமல் தரப்பில் நேரடியாக மன்னிப்புக் கேட்காததால், தக் லைஃப் படம் கர்நாடகத்தில் வெளியாவது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியிடுவதை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துக் கொள்வதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.