Tiger Death: வனப்பகுதியில் சுருக்கு வலை... கழுத்து இறுக துடிதுடித்து உயிரிழந்த புலி!
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மலையில் வளர்ச்சி என்கிற பெயரால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பணிகளால் வனவிலங்குகள் தங்களின் வாழ்விடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்கின்றன.
உணவு மற்றும் தண்ணீர் தேடி, தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தஞ்சமடையும் துயரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தஞ்சமடையும் வனவிலங்குகள் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மர்மமான முறையில் இறக்கும் கெடுமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் அருகில் உள்ள தட்டக்கொள்ளி பகுதியில் புலி ஒன்று இறந்து கிடப்பதாக உள்ளுர் மக்கள் மூலம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. வனத்துறையின் களப்பணியாளர்கள் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து, புலியின் இறப்பை உறுதி செய்துள்ளனர். மேலும் இறந்து கிடந்த புலியின் கழுத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி இறுக்கியிருப்பதைக் கண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் சென்ற வனத்துறை அதிகாரிகள், புலியின் உடலை மீட்டு கூறாய்வு செய்துள்ளனர். புலியின் உடல் பாகங்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாட மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் புலி சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்த கெடூரம் குறித்து தெரிவித்த வனத்துறையினர், " முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாடும் மர்ம நபர்கள் பைக் பிரேக் கம்பியில் சுருக்கு வலை செய்து வனத்தின் எல்லை பகுதியில் பொருத்திச் சென்றிருக்கிறார்கள்.
இந்த வழியாக வந்த சுமார் 3 முதல் 4 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சுருக்கில் சிக்கியிருக்கிறது. உயிர் தப்பிக்க பல மணி நேரம் பேராடியிருக்கிறது. ஆனால் முடியவில்லை. கழுத்து இறுக்கிய நிலையில், துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. வேட்டையர்களை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றோம். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.