நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
அதானி விவகாரம், மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்றும்(நவ. 28) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை(நவ. 25) தொடங்கியது. இதில் சர்ச்சைக்குரிய வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்பட 15 மசோதாக்கள் குறித்து விவாதிக்க அல்லது நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க | ஸ்டாப்! ஸ்டாப்! பிரியங்காவை நிறுத்தி புகைப்படம் எடுத்த ராகுல்!!
கூட்டத்தொடரின் முதல் நாளே எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்தன. கடந்த 3 நாள்களாக இரு அவைகளும் முடங்கிய நிலையில் இன்றும் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் அதானி விவகாரம், வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
முதலில் மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதையும் படிக்க | வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!
அதேபோல, ஒத்திவைப்புக்குப் பிறகு நண்பகல் 12 மணிக்குத் தொடங்கிய மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாளை(நவ. 29) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நான்காவது நாளாக இரு அவைகளும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.