கழுகார்: `தள்ளிப்போகும் அண்ணாமலை வருகை டு இளைஞரணி நிர்வாகிகள்மீது புகாரும் கண்டுகொள்ளாத தலைமையும்’
சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட தொகுதிப் பார்வையாளர்களில் 20-க்கும் மேற்பட்டோரை, சத்தமில்லாமல் மாற்றியிருக்கிறது தி.மு.க தலைமை. `ஏன் இந்த திடீர் மாற்றம்?’ என்று விசாரித்தால், “மாவட்டச் செயலாளர்களின் அழுத்தத்தால்தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். தொகுதிப் பார்வையாளர்கள் தரப்பிலோ, “தங்கள் சொல்பேச்சைக் கேட்காதவர்கள், கடந்த தேர்தல்களில் தங்களைப் பற்றிப் புகார் தெரிவித்தவர்களைக் குறித்துவைத்து, தலைமையிடம் சொல்லி மாற்றியிருக்கிறார்கள் சில மா.செ-கள். அப்படி சேலம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாற்றம் நடந்திருக்கிறது. இன்னும் சில மாவட்டங்களிலும் இந்த மாற்றம் அரங்கேறும்.
இந்த மாற்றத்துக்கு அறிவாலய இனிஷியல் பிரமுகரும் உடந்தை. இந்தப் போக்கை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால், `200 தொகுதிகள்’ என்பது வெறும் மேடைப்பேச்சுக்கு மட்டுமே என்றாகிவிடும்” எனக் கொதிக்கிறார்கள்.
இந்த ஆண்டுக்கான பொதுக்குழுவை வரும் டிசம்பர் 15-ம் தேதி கூட்டுவதென முடிவெடுத்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. நிறைந்த பௌர்ணமி என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்தத் தேதியைத் தலைமை தேர்வுசெய்திருக்கிறது என்கிறார்கள் சீனியர்கள். இதற்காகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் வேலையில் எம்.ஜி.ஆர் மாளிகை தீவிரமாகிவருகிறது.
“நீட் தேர்வு, நிதிப் பகிர்வு, தமிழக மீனவர்கள் பிரச்னை ஆகியவற்றை மையப்படுத்தி, மத்திய பா.ஜ.க அரசைக் கண்டிக்கும் வகையில் தீர்மானங்கள் இடம்பெறலாம். அதேபோல, சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றத் தவறிய தி.மு.க அரசைக் கண்டித்தும் தீர்மானம் இடம்பெறும். விவசாயிகள் பிரச்னை, பொய்யான முதலீட்டுக் கணக்குகள், பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி தி.மு.க அரசைக் கண்டிக்கும் தீர்மானங்கள் இடம்பெறலாம், இவற்றைத் தயாரிப்பதற்காக சீனியர்கள் தலைமையில் ஒரு டீம் வேலை செய்கிறது” என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்!
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழ்நாட்டுக்குத் திரும்புவார் எனச் சொல்லப்பட்டது.
இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க பா.ஜ.க.வினர் திட்டமிட்டிருந்தனர். மேலும், நவ.29-ம் தேதி கமலாலயத்தில் நிர்வாகிகள் சந்திப்பு, நவ.30, டிச.1-ம் தேதி கோவை கொடிசியா வளாகத்தில், ‘வாய்ஸ் ஆஃப் கோவை’ என்ற அமைப்பு சார்பில் நடைபெறும் ‘ஏ3 கானக்ளேவ்’ கருத்தரங்கு போன்றவற்றில் அண்ணாமலை பங்கேற்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது டிச.1-ம் தேதி நள்ளிரவு 2 மணிக்குத்தான் அண்ணாமலை சென்னைக்கு வருவார் எனச் சொல்லப்பட, எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்ததோடு, அண்ணாமலை வந்த பிறகு மற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துகொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறதாம் கமலாலய வட்டாரம்!
“இளைஞரணி நிர்வாகிகளின் அடாவடிகள் தாங்க முடியவில்லை” எனப் பல்வேறு மாவட்டங்களிலும் ஆளுங்கட்சியினர் மத்தியில் புலம்பல் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. அதிலும், “சமீபத்தில் உதயநிதி மாவட்டம்தோறும் ஆய்வுக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனப் பயணம் செய்யத் தொடங்கிய பிறகுதான் புலம்பல் அதிகரித்திருக்கிறது” என்கிறார்கள் மாவட்டக் கழக நிர்வாகிகள்.
இளைஞரணி நிர்வாகிகளின் இந்தச் செயல்பாடுகள் குறித்து சீனியர் ஒருவரிடமும், துணைப் பொதுச்செயலாளர் ஒருவரிடமும் சில மாவட்டச் செயலாளர்கள் நேரிலேயே புகார் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களும் இந்த விவகாரத்தைத் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல, “பார்த்துக்கலாம்” என ஒற்றைவரியில் அங்கிருந்து பதில் வந்திருக்கிறது. “இளைஞரணி குறித்து என்ன புகார் அளித்தாலும் தலைமை கண்டுகொள்வதேயில்லை” எனத் தங்களுக்குள்ளேயே புலம்பிக்கொண்டு திரும்பியிருக்கிறார்களாம் சீனியரும்... அந்தத் துணை பொதுச்செயலாளரும்.
பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகாரில் ஏழு ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாமல் இழுத்தடித்துக்கொண்டிருந்த காக்கி மாஜிக்கு எதிராக, சைதாப்பேட்டை நீதிமன்றம் சமீபத்தில் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இத்தனை நாள் எந்தச் சத்தமும் இல்லாமல் இருந்த வழக்கு திடீர் வேகமெடுக்கக் காரணம் என்ன என்று விசாரித்தால், “சில மாதங்களுக்கு முன்பு காவல் மற்றும் உள்துறை உயரதிகாரிகளைச் சந்தித்த அந்தப் பெண் அதிகாரி, தன்னுடைய புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்தே, சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பில் ஸ்பெஷலாக அரசு வழக்கறிஞரை நியமித்து, இந்த வழக்கில் தீவிரம் காட்டப்பட்டிருக்கிறது. அதையடுத்து பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் காக்கி வட்டாரத்தில். இப்போதைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி பிடிவாரன்ட்டிலிருந்து தப்பிவிட்டாலும், இந்தச் சிக்கலிலிருந்து எப்படி மீள்வது என்று கலக்கத்தில் இருக்கிறாராம் அந்த மாஜி அதிகாரி.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...