`அசைவ உணவு சாப்பிட விடாமல் காதலன் துன்புறுத்தல்?' - ஏர் இந்தியா பெண் பைலட் மும்ப...
``தரக்குறைவான புதிய பாம்பன் பாலம்; உயிர்களை அலட்சியப்படுத்தும் ரயில்வே" - எம்.பி சு.வெங்கடேசன்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914-ல் தூக்குப்பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக ரூ.545 கோடி மதிப்பீட்டில் 101 தூண்களுடன் புதிய தூக்குப் பாலம் கட்டப்பட்டு, ரயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. மேலும், இதன் வழியாக கப்பல் கடந்து செல்ல 27 மீட்டர் உயரத்தில் 77 மீட்டர் நீளத்தில் செங்குத்து தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், கடந்த 13, 14-ம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாலத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் முடிவில், பாலம் பாதுகாப்பு குறைந்து, குறைபாடுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது எனத் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பாம்பன் பாலம் 1914-ல் கட்டப்பட்டது. அது அன்றையக் காலத்தில் ஒரு பொறியியல் அதிசயமாகும். அதற்கு பதிலாக புதிய பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை இரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார். உதாரணமாக தூக்குப்பாலப் பகுதி ரயில்வேயில் ஆராய்ச்சி வடிவம் மற்றும் தர நிர்ணய அமைப்பின் (RDSO) எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல் வேறு வடிவமைப்பு விதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டிள்ளார். ரயில்வே வாரியத்தின் ஆதரவோடு ஆர்.டி.எஸ்.ஓ தன் கடமையை கைவிட்டுள்ளது வேதனையாகும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இப்படிப்பட்ட முக்கியமான பாலம் கட்ட தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பை (RDSO) இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ரயில்வே வாரியம் முடிவெடுத்தக் காரணத்தால் தொழில்நுட்பக் குழுவை அமைக்கவில்லை . ரயில்வே வாரியம் தனது சொந்த நடைமுறை விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது, துரதிஷ்டமானது என்று ஆணையர் கண்டித்துள்ளார். அது மட்டுமல்ல, பாலத்திற்கான இரும்பு படிமங்கள் கூட ஆர்.டி.எஸ்.ஓ-வை கலந்தாலோசிக்காமல் கட்டப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் மோசமானது. எல்லாம் முடிந்த பிறகு தெற்கு ரயில்வே தலைமை பொறியியல் அதிகாரியின் ஒப்புதலை ஆணையம் சுட்டிக் காட்டிய பின் 18. 10. 24-ல் பெற்றுள்ளனர்.
இந்தியாவின் பெருமைமிகு அமைப்பான இந்திய ரயில்வே வாரியம் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வழித்தடத்தில் பாம்பன் பாலத்தை பாதுகாப்பு விதிகளை புறக்கணித்துக் கட்டியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பாம்பன் பாலம் கடல்நீரின் ஈரப்பதத்திற்கும், காற்றின் தாக்கத்திற்கும், ரயிலின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் கட்டப்பட வேண்டிய கட்டுமான தொழில்நுட்பமாகும். இதை அலட்சியப்படுத்துவது அந்த வழித்தடத்தில் தினந்தோறும் பயணிக்க உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்துவதாகும். ரயில்வே அமைச்சகம் எப்படி இதற்கு அனுமதியளித்தது என்பதை அமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.