செய்திகள் :

Travel Contest: ஈபிள் டவரை விஞ்சும் அழகு!; பிரான்ஸ் நாட்டின் எழில் மிகுந்த கிராமத்தின் கதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

யணம் எனும் வார்த்தை நம் ஒவ்வொருவரின் மனவெளியிலும், அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப படரவிடும் ஞாபக பாதைகள் பல. வெளிச்சம், இருட்டு, வெப்பம் குளிர், ஈரம், வரட்சி, பசுமை, பாலைவனம் என நீளும் அந்த பாதைகளும் முடிவுகள் அற்றவையே !

 ஒவ்வொரு பயணத்தின் பாதைகளிலும் நாம் சந்திக்கும் மனிதர்களும், காணும் காட்சிகளும் இறுதி இலக்கை விடவும் சுவாரஸ்யமானவை.

வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிப்பவர்கள் மீது நமக்கிருக்கும் நேசத்தின் அதே அளவு பயணங்களில் சில நிமிடங்களே நாம் சந்திக்கும் ஒரு சில மனிதர்களின் மீதும் படிந்துவிடுவது வாழ்க்கையின் விந்தைகளில் ஒன்று!

ரு மாதகால ஐரோப்பிய சுற்றுலாவின் ஒரு பகுதியாக சில நாள்கள் பிரான்ஸ் வந்தான் என் பால்ய நண்பன் ஒருவன். பாரீஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த நொடி முதல்,

 "கிடா வெட்டு எப்போது ?" நகைச்சுவை போல,

 "ஈபிள் டவருக்கு எப்ப போறோம் ?" என்பதே அவனது தலையாய கேள்வியாக இருந்தது !

அடுத்த நாளே ஈபிள் டவர் பார்க்க அழைத்துச் சென்றேன்...

"மாப்ள ! எனக்கு பின்னால ஈபிள் டவர் முழுசா தெரியற மாதிரி ஒரு போட்டோ..."

 செல்போனை நீட்டினான்!

நானும் குனிந்து வளைந்து, குப்புற கவிழ்ந்து கீழிருந்து மேலாக நண்பனும் அவனுக்கு பின்னால் ஈபிள் டவரும் தெரிய ஒரு போட்டோ எடுத்தேன்... 

"சூப்பர்டா மாப்ள ! இது போதும்!" என்றவன், 

அடுத்த நொடியே அவனது வாட்ஸ் ஆப் தொடர்புகள் அனைவருக்கும் அனுப்பினான். அவனது பிரான்ஸ் பிறவிப்பயன் அங்கேயே முழுமை அடைந்துவிட்டது !

இந்தியாவின் தாஜ்மஹால், இத்தாலியின் சாய்ந்த கோபுரம், எகிப்து பிரமிடுகள், அமெரிக்க சுதந்திர தேவி சிலை என ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபல சுற்றுலா நிலக்குறியீடு உண்டு. பெரும்பான்மையான சுற்றுலா பயணிகளுக்கு இந்த நிலக்குறியீடுகளின் மீது தான் ஆர்வம் !

 எகிப்திய பாலைவன சூரிய அஸ்த்தமன புகைப்படத்தை ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் எடுத்ததாக நண்பர்கள் கலாய்க்க வாய்ப்புகள் உண்டு என்பதால் பிரமிடுகளும் புகைப்படத்தில் கட்டாயம் இடம்பெறத்தானே வேண்டும் ?!

"ந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது" என்ற காந்தியின் வார்த்தைகள் உலகின் அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும்.

தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களின் வாழ்க்கை முறையும் கிராமபுற வாழ்க்கை முறையும் அனைத்து நாடுகளிலும் வேறுபடத்தான் செய்யும். அனைத்து நாடுகளின் கலாச்சார பண்பாட்டு வேர்களும் கிராமங்களில் தான் வேரூன்றி படர்ந்திருக்கின்றன.

ஈபிள் கோபுரம் மற்றும் பாரீஸ் நகரின் மற்ற சுற்றுலா சின்னங்களை தாண்டி, பிரான்ஸ் நாட்டில் சுற்றிப்பார்க்கவும், தங்கவும் பல இயற்கை எழில் கொஞ்சும் சிறு நகரங்களும் கிராமங்களும் உண்டு.

 குளிர் காலங்களில் பனிப்போர்வைக்குள் பொதிந்து கிடக்கும் பிரெஞ்சு கிராமங்கள் வெயில் வருடும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பல்வேறு பூக்கள் பூத்துக் குலுங்க புதுப்பொலிவுடன் ஒளிர்வதை காண்பது ஒரு பரவச அனுபவம் !

பிரான்ஸ் நாட்டில் மிக அழகிய கிராமங்கள் எனும் பட்டியல் ஒன்று உண்டு. இந்த பட்டியலில் இடம் பெறும் கிராமங்கள் அவற்றின் தொன்மை, வரலாறு மற்றும் கலாச்சார அடையாளங்கள் சற்றும் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

அந்தந்த பிராந்திய கட்டிட கலையில் அமைந்த இந்த கிராமங்களின் வீடுகள் மற்றும் தோட்டங்கள் அந்தந்த கிராம நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறையின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலின் படியே புதுப்பிக்கப்படவும் பராமரிக்கப்படவும் வேண்டும் ! வீடுகளையும் கடைகளையும் அவரவர் இஷ்டத்துக்கு இடித்து கட்டுவதெல்லாம் முடியாத காரியங்கள் !

மேற்சொன்ன பட்டியலின்  பல கிராமங்கள் பாரீஸ் நகரிலிருந்து இருநூறு கிலோமீட்டர் தூரத்தில் தொடங்கும் நொர்மாந்தி பிராந்தியத்தை சார்ந்தவை. பெருநகர வாழ்க்கையின் இயந்திர கதியிலிருந்து விடுபட, வாய்ப்புகள் அமைந்த விடுமுறை நாள்களுக்கான தேர்வாக நான் நாடுவது இந்த கிராமங்களைத்தான் !

Normandie, France

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பிராந்தியம் நொர்மாந்தி. தொன்மையான வரலாறு மற்றும் கலாச்சார அடையாளங்களை கொண்ட பிரதேசம்.

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றி இந்த பிராந்தியத்திலிருந்து தான் தொடங்கியது. நொர்மாந்தியின் கல்வதோஸ் மற்றும் மான்ஷ் பகுதிகளின் பல்வேறு கடற்கரைகள் வாயிலாக ஒரே நேரத்தில் நேச நாடுகளின் ராணுவம் நடத்திய "ஆபரேஷன் நெப்டியூன்" தாக்குதல் உலக ராணுவ வரலாற்றின் மிகப்பெரிய படையெடுப்பு.

இந்த முறை நான் சென்றது எத்ரெத்தா !

இரு மலை குன்றுகளுக்கு நடுவே அமைந்த கடலோர கிராமம். ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் மொய்க்கும் சுற்றுலா தளம். குளிர் முற்றிலும் குறையாத ஏப்ரல் மாத வெயில் நாள்கள், வருடத்தின் முதல் பூக்கள் மலர்ந்த பூரிப்பில் அமைதி கெடாமல் புன்னகைக்கும் எத்ரெத்தாவை பார்த்து ரசிப்பதற்கு உகந்த நாள்கள் !

 கட்டண நெடுஞ்சாலைகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவிர்ப்பவன் நான் ! வணிக நோக்கில் நேரத்தை மிச்சம் பிடிக்க மட்டுமே உதவும் இந்த சாலைகளின் வெறுமை எனக்கு ஒவ்வாத ஒன்று !

Étretat, France

"தங்க நாற்கரச் சாலைகளின் வருகை இன்று போக்குவரத்தை எளிமையாக்கிவிட்ட அதே நேரம் சாலைப் பயணத்தில் கண்ணில் படும் மனிதர்கள், மயில்கள், குரங்குகள், பறவைகள், மர நிழலில் அருமை, அருகில் உள்ள கிராமங்களின் வாழ்க்கை, சிறுவணிகம் அத்தனையும் அகற்றப்பட்டு விட்டன..." என,

 பெருவணிகமயமாக்கலுக்கு நாம் கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் விலையை தனது மறைக்கப்பட்ட இந்தியா நூலில் விளக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

நெடுஞ்சாலைகள் வழியே செல்லாமல் சிற்றூர்கள், கிராமங்கள் வழியே பயணித்தேன். அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் பயணிக்க கூடிய சாலையில், மக்கள் வசிக்கும் பகுதிகளை கடக்கும் போது 50 அல்லது 30 கிலோமீட்டருக்கு வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட வேகத்தை மீறி காரை ஓட்டி தானியங்கி ரேடார்களிடம் சிக்கினால் அபராதம் வீடு தேடி வரும். குறிப்பிட்ட வேகத்தைவிட சில கிலோ மீட்டர்கள் அதிகம் என்றால் அபராதம் மட்டும். இன்னும் அதிகம் என்றால் ஓட்டுனர் உரிமத்தின் புள்ளிகள் குறைக்கப்படும்!

Étretat, Frankreich

நகரத்திலிருந்து விலக விலக, கொஞ்சம் கொஞ்சமாக பெருநகர கான்கிரீட் காடுகளும்  மாசுகலந்த காற்றும் மறைந்து, சட்டென தோன்றி சலசலக்கும் வயல்வெளிகள்! அடர்ந்த மரங்கள் அசையும், எச்சரிக்கை பலகைகள் மூலம் முன்னறிவிக்கப்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலை !

சாலையின் இரு புறமும் உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் இன்னபிற சாகுபடி நிலங்கள். ஆங்காங்கே தென்படும் பண்ணை வெளிகளில் ஆசுவாசமாய் மேய்ந்து அசைபோடும் பசுக்கள் மற்றும் குதிரைகள். சிறு காடுகளை ஊடறுத்து செல்லும் அதிகம் போக்குவரத்து இல்லாத சாலையில் மிக அரிதாக மானோ, முள்ளம்பன்றியோ கடக்க வாய்ப்புகள் உண்டு!

 இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்த ஆயிரக்கணக்கான கிலோ உருளைக்கிழங்குகளின் பாரத்துடன் முக்கி முனங்கி செல்லும் டிராக்டர்களை தாண்டும் போதெல்லாம் எனக்கு, வருடம் முழுவதும் உழைத்து அறுவடை செய்தவற்றை அடிமாட்டு விலைக்கு பெருவணிக நிறுவனங்களிடம் தாரைவார்க்கும் விவசாய பெருமக்களின் பெருமூச்சின் ஞாபகம் !

உருளைக்கிழங்கு அறுவடைக்கு பின்னர், நிலத்தில் மிச்சம் கிடக்கும் கிழங்குகளை யார் வேண்டுமானாலும் சேகரித்துக்கொள்ளலாம் எனும் வழக்கம் இங்கு உண்டு.

 னதுக்கு மிக நெருக்கமான, இதமான இசைத்தொகுப்பு ஒன்று என்னிடம் உள்ளது...

 மும்மொழிக்கொள்கைக்கெல்லாம் கட்டுப்படாமல் இந்தியாவின் எல்லா மொழிப் பாடல்களையும் கொண்ட அந்த தொகுப்பின், ஹீரா மந்தி வெப் சீரியலின் "சக்கல் பான் " ஒலித்துக்கொண்டிருந்த வேளையில்,

 பட்டு சேலையின் மஞ்சள் கட்டங்களை போல, பச்சை நிற சாகுபடி நிலங்களுக்கு மத்தியில் அவ்வப்போது தோன்றி மறையும் மஞ்சள் பூக்கள் வெளி !

சக்கல் பன்...

 எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு இளவேனிற்கால சரஸ்வதி பூஜை நாளில் அமீர் குஷ்ரு எனும் சூபி கவிஞன் தனது ஆன்மீக குரு ஹஜரத் நிஜாமுதீன் அவ்லியாவுக்காக இயற்றிய கவிதை.

 காடுகள் முழுவதும்

மஞ்சள் கடுகு பூக்கள்.

மாப்பூக்களும் மற்ற பூக்களும்

மொட்டவிழ்கின்றன.

இளம் பெண் ஒப்பனையிருக்கிறாள்.

பெண்களின் கூடைகளில்

பலவண்ண பூக்கள்.

நிஜாமுதீனின் உறைவிட

நிலைவாசல் நோக்கி

விரைபவர்களில்

என் அன்பாளனை காணவில்லை !

காலங்கள் ஓடுகின்றன…

காடுகள் முழுவதும்

மஞ்சள் கடுகு பூக்கள்.

பாடலை கேட்டுகொண்டிருந்ததால் என் நினைவுக்குள் வந்தது கடுகு பூக்கள். ஆனால் கடுகு பூவின் சாயலை ஒத்த பூக்களை கொண்ட இச்செடிகள் ஆங்கிலத்தில் "Rapeseed" எனப்படும் எண்ணை வித்துச் செடிகள்.

ஐரோப்பா முழுவதும் பரவலாக பயிர் செய்யப்படும் இச்செடியின் எண்ணையை தான் மக்டொனால்டுஸ் போன்ற துரித உணவு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

 காலை ஒன்பதரை மணிக்கு எத்ரெத்தாவுக்குள் நுழைந்த போது, மேக மூட்டத்துடனான வானிலையுடன் சில்லென்ற கடல் காற்று முகத்தில் முட்டும் ஒன்பது டிகிரி செல்சியஸ்.

சுற்றுலா பகுதிகளுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். வாகனங்களை நிறுத்த, கழிப்பறை வசதிகளுடன் கட்டண நிறுத்துமிடங்கள் உண்டு.

 அமோன், அவால் எனும் இரு மலைக்குன்றுகளுக்கு நடுவே அமைந்த, கடல் பார்த்த கிராமம் எத்ரெத்தா.

 முதலில் சென்றது அமோன் குன்றின் மீது அமைந்த தோட்டத்துக்கு. புதர்ச்செடிகளை பல்வேறு வடிவங்களில் கத்தரிக்கப்பட்டு "neo-futurists" பாணியில் அமைந்த மிக அழகிய தோட்டத்திலிருந்து ஆர்ப்பரிக்கும் கடலையும் மறுபக்கத்தில் ஓங்கி உயர்ந்திருக்கும் அவால் குன்றையும் முழுமையாக ரசிக்கலாம்.

எத்ரெத்தா மலை சுண்ணாம்பு பாறைகளால் ஆனது. மேக மூட்டமான வானிலையில் மந்தமாய் தெரியும் மலைமுகப்பு சூரிய வெளிச்சத்தில் தும்பைப்பூ வெள்ளையாய் காட்சி தரும்.

 தோட்டத்துக்கு எதிரே கருங்கற்களால் கட்டப்பட்ட கடல் பார்த்த, மீனவர்களின் மலைக்கோவில்.

அந்த முகப்பிலிருந்து செங்குத்தாக மரப்பலகைகள் பொறுத்தி அமைக்கப்பட்ட கரடுமுரடான பாதை வழியே இறங்கி கடல்கரைக்கு வந்துவிடலாம் அல்லது மறுபக்கமாய் ஊருக்குள் இறங்கி, கடைவீதி வழியாகவும் வழி உண்டு. அவரவர் கால்களின் வலிமைக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும் !

 எத்ரெத்தாவின் கடற்கரை மணல்வெளி இல்லாதது ! மாற்றாக சிறிதும் பெரிதுமாக உருளைக்கிழங்கு வடிவ பழுப்பும் சாம்பல் நிறமும் கலந்த கூழாங்கற்கள் நிறைந்திருக்கும். நடந்தால் சரியும் இந்த கூழாங்கல் கடற்கரையில் கால் பொதிய நடப்பது ஒரு புது அனுபவம்.

 ரவு தங்குவதற்கான விடுதியை இணையத்தின் மூலம் பதிவு செய்திருந்தேன்.

 தோட்டத்துக்கு நடுவே அமைந்த பழங்கால மூன்றடுக்கு பங்களா. பழமை மாறாத, நவீன வசதிகளும் கொண்ட விடுதி.

 வரவேற்ற விடுதி பொறுப்பாளர் பெண்மணி, சிறிது நேரம் உரையாடி, எங்கிருந்து வருகிறோம், விடுதிக்கு வரும் வரை ஊரின் எந்த பகுதிகளை பார்த்தோம் என்பதையெல்லம் விசாரித்துவிட்டு, எத்ரெத்தாவில் பார்க்க வேண்டிய இன்னபிற இடங்கள் அடங்கிய ஒரு பட்டியலையும் கொடுத்துவிட்டு அறையை காட்டினாள்.

The gardens of Étretat

காபியும் டீயும் இலவசம் ! உள்ளூர் மதுவகைகளுக்கு விலை. வேண்டியதை எடுத்துக்கொண்டு வரவேற்பரையில் இருக்கும் குறிப்பேட்டில் நமது பெயரையும் மதுவகைகளின் பெயரையும் எழுதிவிட்டால் போதும்! கிளம்பும்போது கணக்கு பார்த்து காசு வசூல்! குடிக்கும் போது தலைசுற்றியதை போலவே காசு கட்டும் போதும் உங்கள் தலை சுற்றினால் அதற்கு விடுதி பொறுப்பாகாது! "காலை உணவுக்கு நபருக்கு 10 யூரோக்கள்... கிளம்பும் போது கொடுத்தால் போதும்..."

 மறக்காமல் அறிவித்துவிட்டு சென்றாள் அந்த பெண்மணி !

 "இங்கிலாந்தில் தங்குவதற்கும், காலை உணவுக்கும் சேர்த்துத்தான் வாடகை" என இந்த ஐரோப்பிய வழக்கத்தை 1940-களிலேயே, தனது பயண கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார் உலகம் சுற்றிய தமிழன் ஏ.கே.செட்டியார்! தமிழ் பயண கட்டுரைகளின் முன்னோடி.

 ஜூலியஸ் வெர்னே எழுதி "உலகை சுற்றிவர எண்பது நாட்கள்" புதினத்தின் நாயகன் பிலியாஸ் போக்கை போல உண்மையிலேயே உலகை சுற்றியவர் ஏ.கே.செட்டியார்.

உடைந்த நாற்காலிகள் கிழிந்த ஸ்பிரிங் மெத்தைகள் என, பிரமிப்பு ஐரோப்பாவின் பரிதாப பக்கங்களையும் தன் பயண கட்டுரைகளில் நக்கல் நகைச்சுவையுடன் நுணுக்கமாக பதிவு செய்தவர்.

 அறையில் பெரிதாக குறையொன்றும் இல்லை !

றுநாள் காலை, எத்ரெத்தாவின் மறுபகுதிக்கு செல்லும் பொருட்டு சீக்கிரமாகவே கிளம்பிவிட்டேன்.

 காலை வணக்கம் கூறிய பெண்மணியின் சிரிப்பு சாப்பிடாமல் கிளம்புகிறேன் என்றதும் மறைந்துவிட்டதுக்கான காரணம் விருந்தோம்பல் அல்ல, வியாபார நோக்கம் மட்டுமே !

 அன்று சந்தை நாள். உள்ளூரில் விளைந்த காய்கறிகளும், எத்ரெத்தா பகுதியில் பிடித்த மீன் வகைகளும் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. காய்கறிகளின் விலை அதிகம் என்றாலும் அவை இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்பட்டவை என்பது அவற்றை பார்த்ததுமே புரிந்தது !

பெருநகர பரபரப்புகள் எதுவும் அற்ற கிராமம் ! உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கிடைப்பவற்றை கொண்டே உணவு தாயாரிக்கும் உணவகங்கள் ஒரு புறம் என்றால் நினைவு பொருள்கள் கடைகளின் சில பொருள்கள் சீன தயாரிப்பு !

 காலை நேர கடற்கரை ஆளரவமற்று இருந்தது. அலை ஒசையையும் காற்றின்  சீற்றத்தையும் மீறி கேட்கும் கடல் ஆலாக்களின் குரல். நொர்மாந்தி பகுதியில் இந்த கடல் பறவைகள் அதிகம்.

 இரண்டாம் உலகபோரின் போது அவால் குன்றுக்கு அடியில் கட்டப்பட்ட கான்கிரீட் பதுங்குகுழி மேடைகள் இன்றும் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன.

 மோன் குன்றைவிட கரடுமுரடாக இருந்தது அவால் குன்று. ஊட்டியில் ஒரு தற்கொலைமுனை என்றால் எத்ரெத்தா குன்றுகளின் எட்டி பார்த்தாலே தலைசுற்றும்  கடல் பார்த்த செங்குத்தான முகட்டு பகுதி முழுவதுமே தற்கொலைமுனை தான்! சுண்னாம்பு பாறைகளில் கடல் அலைகள் தொடர்ந்து மோதுவதால் ஏற்படும் பாறை வெடிப்பும், சரிவு அபாயமும் இங்கு உண்டு. இவற்றை குறிப்பிட்டு, மலை ஏறுபவர்களின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என எச்சரிக்கும் பலகைகளும் ஆங்காங்கே பயமுறுத்துகின்றன!

இங்கேயும் ஆர்வக்கோளாறினால் ஆபத்தில் மாட்டும் மஞ்சுமல் பாய்ஸுகளும் கேர்ள்ஸுகளும் உண்டு ! மேலிருந்து கடலில் விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

 எத்ரெத்தாவிலும் ஒரு சிறு குணா குகை உண்டு! இரு குன்றுகளுக்கிடையே அமைந்த மரப்பாலத்தில் நடந்து மறுபுற குன்றின் குகை வடிவுக்குள் சென்றால், செங்குத்தாக மூன்று புறமும் மலையில் மோதும் கடல்!

பதிணென் பருவத்தில் குணா குகை பகுதிக்கு பயமின்றி சென்ற நான் எத்ரெத்தா குன்றை படம் பிடித்ததோடு திருப்திபட்டுக்கொண்டேன். வயதுக்கு வந்த போது இருக்கும் தைரியம் வயது ஏற ஏற குறைவது இயற்கை தானே?!

அவால் குன்றில் நடைபயணமாகவே பல கிலோ மீட்டர்கள் நடக்கலாம் என்றாலும் காற்றின் வேகத்தால் சீக்கிரமாகவே திரும்பி விட்டேன்.

 பாரீஸை நெருங்கி விரைவுச்சலைக்குள் நுழைந்ததுமே ஒரு வெறுமை சூழ்ந்துக்கொண்டதுடன் மட்டுமல்லாமல் எத்ரெத்தா சந்தையில் கண்ட காய்கறிகளின் ஞாபகம் தோன்றியது…

 பெருநகர மோகமும் பெருவணிக நிறுவனங்களின் உணவு உற்பத்தி உத்திகளும் நம்மை இயற்கையிடமிருந்து எவ்வளவு தூரம் பிரித்துவிட்டன ?

 - காரை அக்பர்.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel Contest: பாண்டியனைத் தேடி ஒரு பயணம்! - மேற்கு தொடர்ச்சிமலை நினைவலைகள்..

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: வெளிநாட்டுக்கு சுற்றுலா போறீங்களா? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க! - அனுபவ பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: "காய்ச்சல், அலைச்சல், எரிச்சல்; ஆனாலும்..." - எப்படி இருந்தது புனே சுற்றுலா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : புண்ணிய பூமியில் என்னை நெகிழ வைத்த மனித முகங்கள்! - மறக்க முடியாத தனுஷ்கோடி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : `சுற்றுLaw' - விடுதி டு உணவு... சுற்றுலாப் பயணிகளின் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel contest : இயற்கையை விரும்புபவர்களுக்கு செம ட்ரீட்... பொள்ளாச்சி ‘டாப்சிலிப்’ போலாமா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க