தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் தீ விபத்து; கர்ப்பிணிகள் மீட்பு; கொதிக்கும் மக்கள்
தஞ்சாவூரின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை.
பழமையான இந்த மருத்துவமனையில் மகப்பேறு, அவசரக் கால அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், கண் சிகிச்சை, சித்த மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக மகப்பேறு சிகிச்சையில் சிறந்து விளங்குவதால் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறுவிற்காக இங்கு வந்து செல்கின்றனர்.
இதனால் இந்த மருத்துவமனை வளாகத்தில் எப்போதும் பொதுமக்கள் நிறைந்திருப்பார்கள்.

தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 24) மதியம் மகப்பேறு பிரிவு இரண்டாம் தளத்தில் ஏ.சி.,யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது.
ஏ.சி.,-யிலிருந்து விழுந்த நெருப்பு சிகிச்சைக்கான கட்டில் மெத்தையில் விழுந்து தீ பற்றிக் கொண்டது. இதனால் கொஞ்ச நேரத்தில் அந்த தளம் முழுவதையும் புகை சூழ்ந்தது.
மருத்துவமனைக்குள் இருந்து குபு குபுவென் புகை வெளியேறியதைப் பார்த்த சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட நிலையில் வார்டில் இருந்த பெண்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இது குறித்து பணியாளர்கள் தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
அங்கிருந்த ஊழியர்கள், "யாரும் அச்சப்படத் தேவையில்லை. பெரிய அளவிலான தீ விபத்து இல்லை" என எல்லோரது பயத்தையும் போக்கினர்.
அத்துடன் அந்த வார்டில் சிகிச்சையிலிருந்த 24 பெண்கள் மற்றும் தரை தளத்திலிருந்த 30 பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் என மொத்தம் 54 பேர் உடனடியாக அருகிலிருந்த மற்றொரு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.
இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் தீ எங்கும் பரவாமல் அணைத்தனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எஸ்.பி. ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் பார்வையிட்டனர்.

பின்னர் கலெக்டர் பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தஞ்சாவூர் மகப்பேறு பிரிவு இரண்டாம் தளத்தில், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு ஏ.சி., கீழே விழுந்துள்ளது.
அதில் அங்கிருந்த மெத்தைத் தீப்பிடித்து எரிந்துள்ளது. முதல் தளத்திலிருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
புகையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எந்த உயிர்ச் சேதமும் இல்லை. எந்த காயமும் இல்லை. கழிவறை, லிப்ட் என எங்கும் யாரும் சிக்கவில்லை. அனைவரையும் மீட்கப்பட்டு விட்டனர்.
யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. தீயை அணைக்க முயன்ற மருத்துவமனை பணியாளர்கள் 2 பேருக்கு மட்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர்" என்றார்.
கடந்த 2020ம் ஆண்டு இதே போல் இந்த மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போதும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் பதற்றத்துக்கு ஆளாகி வெளியே ஓடி வந்தனர்.

எவ்விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றாலும் அந்த சமயத்தில் தீ விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல் தற்போது மின்கசிவினால் ஏ.சி.,யில் தீ விபத்து ஏற்பட்டு மெத்தையில் விழுந்து தீ பிடித்துள்ளது.
"மருத்துவமனை ஊழியர்கள் பராமரிப்புப் பணியில் காட்டும் அலட்சியம்தான் இதற்குக் காரணம். இதில் உரியக் கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுத்து கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களைக் காக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர் பொதுமக்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs