கடலூர், கள்ளக்குறிச்சி: ஏரி, ஓடையில் குளிக்கச் சென்ற 5 சிறுவர், சிறுமியர் நீரில் மூழ்கி பலியான சோகம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகில் இருக்கிறது வடக்கு கொளக்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த உபையதுல்லா (9), முகமது ஹபில் (10), ஷேக் அப்துல் ரகுமான் (13) போன்றவர்கள் நண்பர்கள். இவர்கள் மூவரும் நேற்று மாலை வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது மேலும் இரண்டு சிறுவர்களும் அவர்களுடன் குளிப்பதற்காக சென்றனர். இரண்டு சிறுவர்களும் ஓடையின் கரைப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், உபையதுல்லா, முகமது ஹபில், ஷேக் அப்துல் ரகுமான் போன்றவர்கள் ஓடைக்குள் சென்று குளித்தார்கள்.

அப்போது திடீரென மூவரும் பள்ளமான பகுதிக்குச் சென்றதால் மூழ்க ஆரம்பித்தனர். மூவருக்கும் நீச்சல் தெரியாததால் தத்தளித்து உயிருக்குப் போராடினர். அப்போது கரையில் இருந்த சிறுவர்கள் கூச்சலிட்டனர். அதைக் கேட்டு ஒடி வந்த அப்பகுதி மக்கள், ஓடையில் குதித்து சிறுவர்களை தேடினர். அவர்கள் கிடைக்காததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகு சகதியில் சிக்கி உயிரிழந்த சிறுவர்களை சடலமாக மீட்டனர். அவர்களைப் பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர்.
அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதிக்கு அருகில் இருக்கிறது பாசார் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சிவசக்தி, சுவேதா என்ற சிறுமிகள் அதே பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 5 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்களுடன் சேர்ந்து சுமார் 10 மாணவிகள் அந்த பகுதியிலுள்ள சித்தேரிக்கு குளிப்பதற்காக சென்றனர். அனைவரும் ஏரியில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், சிவசக்தியும், சுவேதாவும் ஏரிக்குள் இருந்த தாமரை பூவை பறிப்பதற்காக ஏரியின் ஆழமான பகுதியை நோக்கிச் சென்றார்கள்.

அப்போது திடீரென இருவரும் நீரில் தத்தளித்து மூழ்க ஆரம்பித்தனர். அதைப் பார்த்த மற்ற சிறுமிகள் ஓடிச் சென்று பெற்றோர்களை அழைத்து வந்தனர். அவர்கள் ஏரிக்குள் குதித்து சிவசக்தியையும், சுவேதாவையும் சடலங்களாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது இரண்டு சிறுமிகளின் பெற்றோர் கதறி அழுததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த சம்பவங்களில் உயிரிழந்த 5 சிறுவர், சிறுமியருக்கும் நீச்சல் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் இரண்டு மாவட்டங்களில் 5 சிறுவர், சிறுமியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.