`டூரை முடித்துவிட்டு தான் வருவோம்’ - காஷ்மீரில் சுற்றுலாவை தொடரும் பயணிகள் - என்ன சொல்கிறார்கள்?
காஷ்மீரில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் சில சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மும்பையில் இருந்து 17 பெண்கள் காஷ்மீருக்குச் சென்றனர். அவர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கவில்லை. ஆனால் இத்தாக்குதலுக்கு பயந்து உடனே சொந்த ஊர் திரும்பமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது 16 வயது மகளுடன் காஷ்மீர் சென்றுள்ள சந்தியா நாயர் கூறுகையில், ''இந்திய ராணுவம் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் உள்ளூர் போலீஸார் மற்றும் ராணுவத்துடன் உதவியோடு குல்மார்க் போன்ற பகுதிகளை சுற்றிப்பார்த்தோம். நாங்கள் இந்த பயணத்தை முழுமையாக முடிப்பதன் மூலம் தீவிரவாதிகளுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்.
உடனே விமானம் மூலம் மும்பை திரும்பும்படி உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் பயணத்தை முடித்துவிட்டு தான் வருவோம் என்று கூறிவிட்டோம். நாங்கள் 17 பெண்கள் காஷ்மீர் வந்தோம். நாங்கள் பஹல்காமை விட்டு செல்கிறோம். ஆனால் காஷ்மீரை விட்டு செல்லமாட்டோம்'' என்றார்.
இதே போன்று மற்றொரு பெண் கூறுகையில், ''காஷ்மீர் மக்கள் மிகவும் ஆதரவாக இருக்கின்றனர். மிகவும் நன்றாக உபசரிக்கின்றனர். அவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. எங்களது டிரைவர் ஆரம்பத்தில் இருந்தே எங்களுடன் இருக்கிறார். ஆனால், அவர் எங்களை ஹோட்டலில் கொண்டு வந்துவிடும் வரை எங்களது மதம் என்னவென்று கேட்டதில்லை. தன்னைப்பற்றிக்கூட கவலைப்படாமல் எங்களைப்பற்றி கவலைப்பட்டார். இங்குள்ள இடங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. எனவே நாங்கள் பயணத்தை பாதியில் ரத்து செய்யமாட்டோம். தொடர்ந்து பயணிப்போம்''என்று தெரிவித்தார்

இதே போன்று மும்பை தானே பகுதியைச் சேர்ந்த அவினாஷ்(81) என்பவர் தனது மனைவி நந்தினியுடன் காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல்களை எதிர்கொள்ள நமது தைரியத்தைக் காட்டுவது நமது கடமையாகும்" என்று தெரிவித்தார். அவினாஷுடன் 13 பேர் காஷ்மீர் சென்றுள்ளனர்.
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலத்தில் இருந்துதான் அதிக அளவில் காஷ்மீருக்கு சுற்றுலா செல்கின்றனர். அவ்வாறு சென்றவர்களில் 35 முதல் 40 சதவீதம் பேர் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பி இருப்பதாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இன்னும் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மும்பை சுற்றுலா ஏற்பாட்டாளர் பாசிர் இது குறித்து கூறுகையில், மும்பையில் இருந்து சென்ற 5 ஆயிரம் பேர் இன்னும் தங்களது பயணத்தை ரத்து செய்யவில்லை. அவர்கள் பஹல்காம் செல்வதற்கான நேரத்தை மாற்றி வைத்துள்ளனர்''என்றார்.
புனேயில் இருந்து சென்ற 2000 பேர் இன்னும் காஷ்மீரில் இருப்பதாகவும், அவர்களில் 350 பேர் புனே மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களை மீட்க உதவும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
மகாராஷ்டிரா அரசு அவர்களை அழைத்து வர சிறப்பு விமானங்களை இயக்குகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக சமீப காலமாக சகஜ நிலைக்குத் திரும்பிய காஷ்மீர் மக்களின் பொருளாதாரம் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீருக்கான விமான டிக்கெட்கள் அதிக அளவில் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
