IAF: தாக்கப்பட்டாரா இந்திய விமானப் படை வீரர்? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ஷிலாதித்ய போஸ் மீது பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. கடந்த 18-ம் தேதி ஷிலாதித்யாவும் அவரது மனைவி மதுமிதாவும் விமான நிலையத்திற்கு செல்லும் போது, கால் சென்டரில் வேலை செய்யும் விகாஷ் குமாரின் பைக் சைலன்ஸர் காரில் உரசியதாகக் கூறப்படுகிறது.
அதனால் இருவருக்குமத்தியில் வாக்குவாதம் ஏற்பாட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அதைத் தொடர்ந்து, ஷிலாதித்யா போஸ் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் தலை, முகத்தில் கட்டுப்போடப்பட்டிருந்த நிலையில் பேசிய ஷிலாதித்யா, ``இந்தியாவின் விமானப் படையில் பணிசெய்யும் தன்னை ஒரு குடிமகன் தாக்கிவிட்டதாகவும், அவரை எதிர்த்து சரியாக தாக்குதல் நடத்தவில்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பலரும், விகாஷ் குமாரை கடுமையாக விமர்சித்தனர். அதைத் தொடர்ந்து, விகாஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷிலாதித்யா போஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.
காவல்துறை விசாரணை
இது தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அப்போது அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து அதை வெளியிட்டது. அதில், ஷிலாதித்ய போஸ்தான் விகாஷ் குமாரைக் கடுமையாக தாக்குவதும், அவரை அடித்து கீழே தள்ளுவதும் பதிவாகியிருந்தது.
இது தொடர்பாகப் பேசிய விகாஸ் குமாரின் தாயார் ஜோதி, ``சம்பவம் பெரிதாகிவிடக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் புகார் அளிக்க விரும்பவில்லை. ஆனால், தற்போது இந்திய விமானப்படை அதிகாரி காவல்துறையிடம் சென்றுள்ளதால், தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தவறு செய்தபோது என் மகன் மீது நடவடிக்கை எடுப்பது தவறல்லவா? ஒரு ராணுவ அதிகாரியாக, ஒருவரைக் கடிப்பதும் அடிப்பதும் சரியா? அவரே சட்டத்தைக் கையில் எடுக்கலாமா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விமானப் படை அதிகாரி மீது பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 109 (கொலை முயற்சி), 115(2) (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 304, 324, 352 (வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. கால் சென்டர் ஊழியர் விகாஸ் குமார் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.